Published:Updated:

தூர்தர்ஷன் புதிய லோகோ வடிவமைப்பவருக்கு ஒரு லட்சம் பரிசு!

ச.மோகனப்பிரியா
தூர்தர்ஷன் புதிய லோகோ வடிவமைப்பவருக்கு ஒரு லட்சம் பரிசு!
தூர்தர்ஷன் புதிய லோகோ வடிவமைப்பவருக்கு ஒரு லட்சம் பரிசு!

தேசிய அளவில் ஒளிபரப்பாகும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கோயில், பஞ்சாயத்து கமிட்டி போன்ற பொது இடங்களில் மக்களை அசையாது தொலைக்காட்சியைப் பார்க்கச் செய்தது. இன்றும் நம் வீட்டுப் பெரியவர்கள் 'நாங்கெல்லாம் அந்தக் காலத்துலன்னு ஆரம்பிக்கும் பல ஃப்ளாஷ்பேக்குகளில் பெரும்பாலும் இடம்பெறுவது இந்த தூர்தர்ஷன் காட்சிகளே...' 


இந்தியா முழுவதும் 23 சேனல்களை ஒளிபரப்பி வருகிறது. 1959-ம் ஆண்டு தனது பயணத்தைத் துவங்கிய தூர்தர்ஷன், இப்போது புதிய மாற்றங்களைக் கொண்டுவரவிருக்கிறது. இத்தனை ஆண்டு பயணத்தில் பெரும்பாலும் தூர்தர்ஷனால் ஈர்க்கப்பட்டவர்கள் 30 வயதுக்கும் மேற்பட்டவர்களே. தற்போது இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கையே அதிகம். அனைத்துப் பொழுதுபோக்குச் சேனல்களும் இளைஞர்களைக் குறிவைத்து பயணித்துக்கொண்டிருக்கையில், தூர்தர்ஷனும் களத்தில் இறங்க முடிவெடுத்துள்ளது. அதன் முதல் படியாக லோகோவை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து பேசிய பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி சசி எஸ் வேம்பட்டி, 'இந்தியாவில் 65 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் 30 வயதுக்குள்ளானவர்கள். அவர்கள் பெரும்பாலும் டிடி-யுடன் இணைந்திருப்பது இல்லை. அவர்களை டிடியுடன் இணைக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளோம். புதிய முயற்சியாக டிடி-யின் லோகோவை மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆகையால், டிடி சேனலுக்குப் புதிய லோகோவை வடிவமைக்குப் பொறுப்பை மக்களிடமே ஒப்படைத்துவிட்டோம்’ என்று கூறினார்,

’நாட்டின் இறையான்மை மற்றும் தியாக உணர்வை வெளிப்படுத்தும்விதமாகவும் இளைஞர்களைக் கவரும் விதமாகவும், டிடியின் பாணியோடும் லோகோ வடிவமைக்க வேண்டும். புதிய லோகோவை ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று தூர்தர்ஷன் அறிவித்துள்ளது.  சிறந்த லோகோவுக்கு ஒரு லட்சம் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.