Published:Updated:

`மத முழக்கங்களுக்கான இடம் இது கிடையாது!' - முதல் நாளிலேயே அதிரடி காட்டிய சபாநாயகர் ஓம் பிர்லா

பிரேம் குமார் எஸ்.கே.
`மத முழக்கங்களுக்கான இடம் இது கிடையாது!' - முதல் நாளிலேயே அதிரடி காட்டிய சபாநாயகர் ஓம் பிர்லா
`மத முழக்கங்களுக்கான இடம் இது கிடையாது!' - முதல் நாளிலேயே அதிரடி காட்டிய சபாநாயகர் ஓம் பிர்லா

17 -வது மக்களவையின் சபாநாயகராக நேற்று பொறுப்பேற்றார், ஓம் பிர்லா. தேசிய அரசியலில் அதிகம் தெரியப்படாத இவர், மோடிக்கும் அமித் ஷாவுக்கும் நெருக்கம் என்கிறார்கள் பா.ஜ.க-வினர். இந்த மக்களவையின் முதல் கூட்டத்தொடர், மக்களவை உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் விரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

`மத முழக்கங்களுக்கான இடம் இது கிடையாது!' - முதல் நாளிலேயே அதிரடி காட்டிய சபாநாயகர் ஓம் பிர்லா

அதன் பின்னர், இந்த மக்களவையின் சபாநாயகராக ஓம் பிரகாஷ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, உறுப்பினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், அவரை வரவேற்று உரையும் வழங்கினர். பின்னர் பேசிய ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தில் மத ரீதியான முழக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். 

முன்னதாக, பதவியேற்கும்போது சில உறுப்பினர்கள் சில முழக்கங்களை அவையில் முழங்கினர். தமிழக எம்.பி-க்கள், 'வாழ்க பெரியார், வாழ்க திராவிடம்' போன்ற முழக்கங்களைச் சொல்லும்போது, பதிலுக்கு பா.ஜ.க-வினர் 'ஜெய் ஸ்ரீ ராம், ஜெய்ஹிந்த், வந்தே மாதிரம்' போன்ற முழக்கங்களை வைத்தனர். சில திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி-க்கள் 'ஜெய் காளி' என்றும் முழங்கினர். 

நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சௌத்திரி,  ``பல கட்சிகள் கொண்ட ஜனநாயகத்தில், இதுபோன்ற முழக்கங்கள் நல்லதல்ல” என்று பேசினார். இவரது கருத்தை வரவேற்ற சபாநாயகர் ஓம் பிர்லா,  ``இந்த விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில். இந்தக் கோயில், நாடாளுமன்ற விதிகளின்படி செயல்படும். இந்த இடத்தின் நன்மதிப்பை உணர்ந்து செயல்பட அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு நம்முடையது. உலகம் நம்மை கவனிக்கிறது. நமது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். 

நாடாளுமன்றம், மத ரீதியான முழக்கங்களை முன்வைக்கும் இடம் கிடையாது. பதாகைகளை ஏந்தும் இடம் கிடையாது. அதற்கான இடங்கள் பல இருக்கின்றன. உறுப்பினர் அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லலாம். என்ன குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அது இங்கு விவாதிக்கப்படும். அரசின் திட்டங்களை விமர்சிக்கலாம். ஆனால், இங்கு வந்து மத ரீதியான முழக்கங்கள் செய்ய வேண்டாம். 

`மத முழக்கங்களுக்கான இடம் இது கிடையாது!' - முதல் நாளிலேயே அதிரடி காட்டிய சபாநாயகர் ஓம் பிர்லா

அனைத்துக் கட்சிகளும் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த நம்பிக்கையைக் காப்பதே எனது கடமை. இங்கு இருக்கும் அனைவருக்கு அவர்களின் கருத்துகளைச் சொல்ல உரிமை இருக்கிறது. இந்த அரசு, தனி மெஜாரிட்டியில் வெற்றிபெற்றுள்ளது. அதனால் அரசாங்கமும் கூடுதல் பொறுப்புடன் நடந்துகொள்வது மிக அவசியம். எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்சொல்வது அவர்களின் கடமை. நான் கண்டிப்புடன் அவையை நடத்த விரும்பவில்லை. அனைவரும் தங்களின் மனத்தில் இருப்பதை இங்கு பேசலாம். ஆனால், விதிகளுக்கு உட்பட்டு பேச வேண்டும்” என்றார். 

சபாநாயகராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே அதிரடியான கருத்துகள்மூலம் கவனம் பெற்றிருக்கிறார், ஓம் பிர்லா. இவர், ராஜஸ்தானின் கோடா தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்.பி-யாக தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   
 

Vikatan