Published:Updated:

இது எமர்ஜென்சி இல்லை ஜெயிலில் பிடித்துத் தள்ள - மக்களவையில் மோடி அதிரடி

ராம் பிரசாத்
இது எமர்ஜென்சி இல்லை ஜெயிலில் பிடித்துத் தள்ள - மக்களவையில் மோடி அதிரடி
இது எமர்ஜென்சி இல்லை ஜெயிலில் பிடித்துத் தள்ள - மக்களவையில் மோடி அதிரடி
இது எமர்ஜென்சி இல்லை ஜெயிலில் பிடித்துத் தள்ள - மக்களவையில் மோடி அதிரடி

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றிதெரிவித்து பிரதமர் மோடி இன்று பேசினார்.  'இந்தத் தேர்தலில், மக்கள் பலமான தீர்ப்பை அளித்துள்ளார்கள்' என்றார்.  இந்தியாவில் 1975-ம் ஆண்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் 44-வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி காலையில் ட்விட்டர் பதிவிட்டிருந்தார்.  ஜனாதிபதி உரையின்மீது நேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக்குழுவின் தலைவரான அதிர் ரஞ்சன் சௌத்ரி, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகப் பேசியபோது, அதில் தவறு நடந்திருந்தால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் சிறையில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் சிறைக்குப் போகவில்லை. ஏனென்றால், அதில் தவறு நடக்கவில்லை எனப் பேசினார். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று பேசிய மோடி,  ''இது  எமர்ஜென்சி காலம் இல்லை. யாரை வேண்டுமானாலும் பிடித்து சிறையில் தள்ளுவதற்கு. நாங்கள் சட்டத்தின் படி நடந்துகொள்கிறோம். பரோல் பெற்றவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடலாம்' என்றார். 

தேர்தலை வெறும் வெற்றி தோல்வியாக நான் பார்ப்பதில்லை. நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்குச் சேவையாற்றும் வாய்ப்பாகத் தான் கருதுகிறேன். இந்தியாவில் ஊழலுக்கு இனி இடமில்லை.  ஊழலுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும்.  இன்று ஜூன் 25-ம் நாள் நிறைய மக்களுக்கு இந்த தினம் குறித்துத் தெரியாது.  நாட்டில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் இது.  அந்த கறுப்பு நாளை அவ்வளவு எளிதில் நாங்கள் மறக்க மாட்டோம். மீண்டும் அது போன்ற ஒரு நிலை வர யாரும் விரும்ப மாட்டார்கள். 

தற்போது, சிலர் எங்களைச் சாடுகின்றனர்.  நாங்கள் யாரையும் சிறையில் தள்ளவில்லை என்று. இது  எமர்ஜென்சி காலம் இல்லை. யாரை வேண்டுமானாலும் பிடித்து சிறையில் தள்ள. இது, ஜனநாயக நாடு மற்றும் நீதித்துறைதான் இதனை முடிவுசெய்யும். 2004- 2014 வரை ஆட்சியில் இருந்த அரசு, வாஜ்பாய் அரசின் பணிகள் குறித்துப் பேசவில்லை. ஏன் நரசிம்ம ராவின் பணிகளை அவர்கள் குறிப்பிட்டுப் பேசவில்லை. அதே மக்கள்தான் தற்போதைய விவாதத்தின்போது மன்மோகன் சிங்கையும் மறந்துவிட்டார்கள். அவரைப் பற்றியும் பேசவில்லை.  

இந்த அரசு, சாமான்ய மக்களின் நலன் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில்கொண்டு செயல்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளாக இருக்கும் மரபுகளை மாற்றும் நேரம் இது என்று எனக்குத் தெரியும். நாட்டின் உள்கட்டமைப்பு, விண்வெளித்துறையில் நாம் அடையவேண்டிய இலக்கினை நான் மறக்கவில்லை. சுதந்திரப்போராட்டத்தின்போது, ஆண்களும் பெண்களும் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தனர்.  அந்த தியாகிகள் கனவு கண்ட இந்தியாவை நாம் கட்டமைக்க வேண்டும் . இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் மற்றும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 

Vikatan