Published:Updated:

சந்திரயான் 2 திட்டம்! - நிலவுக்குள் நுழையும் பெண்கள் உருவாக்கிய விண்கலம்

சத்யா கோபாலன்
சந்திரயான் 2 திட்டம்! - நிலவுக்குள் நுழையும் பெண்கள் உருவாக்கிய விண்கலம்
சந்திரயான் 2 திட்டம்! - நிலவுக்குள் நுழையும் பெண்கள் உருவாக்கிய விண்கலம்

சந்திரயான் 2 விண்கலம் வரும் ஜூலை 15-ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் அதிவேகத்தில் நடந்து வருகிறது. 

சந்திரயான் 2 திட்டம்! - நிலவுக்குள் நுழையும் பெண்கள் உருவாக்கிய விண்கலம்

சந்திரயான் 2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட உள்ளது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்துக்கு விண்கலத்தை அனுப்பியதில்லை. அந்த வேலைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதால் உலகநாடுகளின் மொத்த கவனமும் சந்திரயான் 2 விண்கலத்தின் மீது விழுந்துள்ளது. 

இதில் இன்னுமொரு ஆச்சர்ய விஷயம் என்னவென்றால் சந்திரயான் 2 விண்கலத்தை உருவாக்கும் பொறுப்பு இரண்டு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரோவில் நீண்ட காலம் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளான முத்தையா வனிதா மற்றும் ரித்து கரிதால் இவர்கள்தாம் அந்தப் பெரும் பொறுப்பை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். 

சந்திரயான் 2 திட்டம்! - நிலவுக்குள் நுழையும் பெண்கள் உருவாக்கிய விண்கலம்

முத்தையா வனிதா சந்திரயான் திட்டத்தில் இயக்குநராகச் செயல்படுகிறார். மொத்த விண்கலம் தயாரிப்பு மற்றும் அதன் உறுப்பு ஆகியவற்றைச் சரிபார்ப்பது, இதை இறுதி வடிவமாக்கி விண்ணுக்கு அனுப்புவது வரை எல்லாம் இவர்தான். இதற்கு முன்னதாக வனிதா, கார்டோசார் 1 ஓசன்சட் 2 ஆகிய விண்கல தயாரிப்பில் பணியாற்றியுள்ளார்.

மற்றொரு விஞ்ஞானியான ரித்து கரிதால் சந்திரயான் திட்டத்தின் துணை செயல்பாடு இயக்குநராக உள்ளார். இவர் விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வது இவரின் பணி. இவர் மங்கல்யான் விண்கல தயாரிப்பில் பணியாற்றியுள்ளார். 

இது பற்றிப் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், “ இதற்கு முன்பு பெண்கள், தகவல் தொடர்பு மற்றும் பிற விண்கலங்கள் ஏவும் பொறுப்பிலிருந்துள்ளனர். ஆனால் விண்கலத்தின் பாகங்கள் தயாரிப்பது முதல் அதன் செயல்பாடு என அனைத்து வேலைகளும்  இரு பெண்களின் தலைமையில் நடப்பது இதுவே முதல்முறை.சந்திரயான் 2 இந்தியாவுக்கு மிகவும் சவாலான விண்கலம்” எனப் பேசியுள்ளார்.

``முத்தையா வனிதா, விண்கலத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் அவர் பல விண்கல தயாரிப்பில் வேலை செய்துள்ளார். ஆனால், அதில் அவரின் வேலைகள் அனைத்தும், தரவு கையாளுதல் தொடர்பாக மட்டுமே இருக்கும். தன் பணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது வனிதாவுக்கு நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

ரித்து கரிதால், 1997-ம் ஆண்டு முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். அவர் 2007-ம் ஆண்டு இளம் விஞ்ஞானிக்கான விருதையும் பெற்றுள்ளார். பல ஆண்டுகளாகப் பல விண்கலத்தின் தயாரிப்பில் இருந்துள்ளார். இது தொடர்பாக ரித்து கூறும்போது,  “துணை செயல்பாட்டு இயக்குநர், இதுதான் எனக்கும் எனது குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ள வேலை. விண்கலத்தின் இயக்கத்தை நாங்கள் கவனித்து வருகிறோம். சந்திரயான் 2  தான் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு நிலவுக்குச் செல்லும் முதல் விண்கலம். அதற்கான அனைத்துத் திறன்களையும் சந்திரயான் கொண்டுள்ளது. இஸ்ரோவில் உள்ள ஆண் விஞ்ஞானிகளுக்கு இணையாகப் பெண்களின் செயல்பாடும் சந்திரயான் 2 விண்கலத்தில் வெளிப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார். 

Vikatan