`கொரோனா ஊரடங்கு; தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கப் போவதில்லை!’ - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

``23 கோடி மக்களின் நலனுக்காக நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எதிராகப் போரிட வேண்டிய கடமை உள்ளது.’’
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் பிஷ்ட் 20-ம் தேதி (திங்கள்கிழமை) காலமானார். நாளை (21-ம் தேதி) நடைபெற உள்ள அவரது இறுதிச் சடங்குகளில் மகன் யோகி ஆதித்யநாத் பங்குபெறப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய யோகி ஆதித்யநாத், ``உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வண்ணம் நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் நாளை (21-ம் தேதி) நடக்கவுள்ள தந்தையின் இறுதிச்சடங்கில் நான் பங்கேற்க மாட்டேன். மேலும், இந்த நிகழ்வில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் ஊரடங்கு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பூர்வாஷ்ரமம் உறுப்பினர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், ``கடைசி நிமிடங்களில் என் தந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் வசிக்கும் 23 கோடி மக்களின் நலனுக்காகக் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எதிராகப் போரிட வேண்டிய கடமை உள்ளது. இதன் காரணமாக அவரை காண இயலவில்லை" என்று கூறினார்.
89 வயதாகும் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் பிஷ்ட், எய்ம்ஸ் மருத்துவமனையின் இரைப்பை குடல் பகுதி சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த சில நாள்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்தது. சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 10.44 மணிக்கு அவர் மறைந்ததாக உ.பி அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அவனிஷ் அவஸ்தி தெரிவித்தார்.

உயிரிழந்த அவரின் உடலுக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாரில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் தந்தையின் மறைவுச் செய்தி தெரிந்தும்கூட மாநில அதிகாரிகள் உடனான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை யோகி ஆதித்யநாத் தொடர்ந்ததாகச் சொல்கிறார்கள் உ.பி தலைமைச் செயலக அதிகாரிகள். தந்தையின் இறுதிச் சடங்கில் ஊரடங்கு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு யோகி ஆதித்யநாத், தன் தாயையும் உறவினர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.