Published:Updated:

`விரைவில் குறி வைக்கப்படுவீர்கள்!’- ஸ்டேண்ட்அப் காமெடியனுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க பிரமுகர்

ஸ்டேண்ட்அப் காமெடியன் குணால் கம்ராவின் பதிவுக்கு பா.ஜ.க-வின் மோஹித் பாரதியா மிரட்டல் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டேண்ட்அப் காமெடியன் குணால் கம்ரா
ஸ்டேண்ட்அப் காமெடியன் குணால் கம்ரா

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். நெட்டிசன்களின் பதிவுகளுக்கு பா.ஜ.க-வினர் அவ்வப்போது தங்களது விளக்கங்களை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டேண்ட்அப் காமெடியன் குணால் கம்ராவின் பதிவுக்கு பா.ஜ.க-வின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான மோஹித் பாரதியா ட்விட்டரில் மிரட்டல் விடுத்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பா.ஜ.க, ஐ.டி பிரிவின் பொறுப்பாளரான அமித் மால்வியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `அன்புள்ள பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் உங்களுக்கு எதிராக இருக்கிறது. பாகிஸ்தான் உங்களுக்கு எதிராக இருக்கிறது. ஊடகங்கள் உங்களுக்கு எதிராக இருக்கின்றன. பாலிவுட் உங்களுக்கு எதிராக இருக்கிறது. அறிவார்ந்தவர்கள் உங்களுக்கு எதிராக இருக்கின்றனர். ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் உங்களுக்கு எதிராக இருக்கின்றனர். ஆனால், நாங்கள் உங்களுடன் வலிமையான பாறையைப் போல நிற்போம். ஏனென்றால், இந்த நாட்டிற்கு நீங்கள் தேவை' என்பதை, `நாங்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்கிறோம்' என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார்.

அமித் மால்வியாவின் இந்தப் பதிவை கலாய்க்கும்விதமாக ஸ்டேண்ட்அப் காமெடியன் குணால், `` அன்புள்ள பிரதமர் மோடி, ஊடகங்கள் உங்களுடன் இருக்கிறது. பாலிவுட் உங்களுடன் இருக்கிறது. 353 எம்.பி-க்கள் உங்களுடன் இருக்கிறார்கள். ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் உங்களுடன் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் உங்களுடன் இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் வலிமையான பாறையைப் போல உங்களை எதிர்த்து நிற்போம். ஏனென்றால், இந்த நாட்டிற்கு நீங்கள் தேவையில்லை” என்பதை ‘ஃபிக்ஸ்ட் இட்’ என்ற கேப்ஷனுடன் பதிவிட்டிருந்தார்.

குணால் கம்ராவின் இந்தப் பதிவைப் பகிர்ந்த பா.ஜ.க-வின் முக்கிய பிரமுகர் மோஹித் பாரதியா, `` என்னுடைய வார்த்தையை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். நீங்களும் விரைவில் குறி வைக்கப்படுவீர்கள்” என்று கூறியுள்ளார். மோஹித்தின் இந்தப் பதிவிற்கு எதிராகப் பலரும் தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.