Published:Updated:

ஆப்கன்: `மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்துள்ளேன்!' -தாலிபன் பிடியிலிருந்து இந்தியா வந்த இளைஞர்

தாலிபன்களிடமிருந்து மீண்டுவந்த கேரள இளைஞர் திதில் ராஜீவன்
தாலிபன்களிடமிருந்து மீண்டுவந்த கேரள இளைஞர் திதில் ராஜீவன்

`நாங்கள் பயணித்த பேருந்தை தாலிபன்கள் மடக்கிப் பிடித்தனர். பஸ்ஸை ஆள் அரவம் இல்லாத பகுதிக்குக் கொண்டு சென்று எங்களைக் கீழே இறக்கினர்' என விவரித்தார் கேரள இளைஞர்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபன்கள் கைப்பற்றிய நிலையில், அங்குள்ள பிற நாட்டினர் வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இந்தியா திரும்பியதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், கோடியேரிப் பகுதியைச் சேர்ந்தவர் திதில் ராஜீவன் (28). ஆப்கானிஸ்தானின் காபூலில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருக்கிறார். அங்கு அமெரிக்கப் படைகளுக்கு உணவுப் பொருள்களைக் கொண்டு சேர்க்கும் துபாய் கம்பெனியில் பணிபுரிந்துவந்தார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக காபூலிலுள்ள அமெரிக்கப் படையின் முகாமில் பணிபுரிந்துவந்தார். தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருந்து மீண்டு வந்திருக்கிறார். காபூலிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றவர், அங்கிருந்து கோவா சென்று, பின்னர் கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தை வந்தடைந்தார்.

தாலிபன்
தாலிபன்

கண்ணூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திதில் ராஜீவன், ``மோதல் நிறைந்த ஒரு நாட்டில் வேலை செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தேன். எல்லா இடங்களிலும் அமெரிக்க ராணுவம் பாதுகாப்புக்கு நின்றதால் பயமில்லாமல் நடமாடினோம். நல்ல காலநிலை, அழகான நிலப்பரப்பைக்கொண்ட ஆப்கானிஸ்தான் நாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அங்கு பணிபுரியச் செல்வேன்.

`முல்லா பராதர் டு சிராஜுதீன் ஹக்கானி வரை' - ஆப்கனை ஆளப்போகும் தாலிபன் தலைவர்களின் பின்னணி?!

அமெரிக்க ராணுவம் பின்வாங்கியதைத் தொடர்ந்து தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அது நடக்கும் என நான் நினைக்கவில்லை. காபூலை தாலிபன்கள் பிடித்தவுடன் அங்கிருந்து எப்படியாவது தப்பி நம் நாட்டுக்கு வந்துவிட வேண்டும் என நினைத்தேன். இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டபோது எனக்கு நம்பிக்கை பிறந்தது. இந்திய தூதரகம் இந்தியர்களுக்காக ஒரு வாட்ஸ்அப் குரூப் தொடங்கியது. அதில் சுமார் 200 பேர் இருந்தனர். நான் மட்டும்தான் மலையாளி. அங்கு வேலைக்காக வந்து, அங்கிருந்தே திருமணம் செய்துகொண்டவர்களும், அவர்களுக்குக் குழந்தைகளும்கூட அதில் உண்டு.

கண்ணூர் விமான நிலையத்தில் திதில் ராஜீவன்
கண்ணூர் விமான நிலையத்தில் திதில் ராஜீவன்

நான் இரண்டு ஆடைகளுடன் முகாமிலிருந்து தப்பித்து வந்தேன். காபூல் விமான நிலையத்துக்குச் செல்ல மூன்று முறை முயன்றேன். ஆனாலும் காபூல் விமான நிலையத்தைச் சென்றடைய முடியவில்லை. நான்காவது முயற்சியில் நாங்கள் காபூலை நோக்கிப் பயணித்தோம். நாங்கள் பயணித்த பேருந்தை தாலிபன்கள் மடக்கிப் பிடித்தனர். பஸ்ஸை ஆள் அரவம் இல்லாத பகுதிக்குக் கொண்டு சென்று எங்களைக் கீழே இறக்கினர். எனது மரணம் உறுதியாகிவிட்டது என நினைத்தேன். சுமார் ஆறு மணி நேரம் தாலிபன்கள் பிடியில் இருந்தேன். பாஸ்போர்ட், மொபைல்போன் ஆகியவற்றை தாலிபன்கள் வாங்கிப் பரிசோதித்தனர். அதன் பிறகு முதலில் பெண்களை விடுவித்தனர், அடுத்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களை விடுவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ட்விட்டரில் டிரெண்டான `Arrest Swara Bhasker'... தாலிபன் பிரச்னைக்கும் நடிகைக்கும் என்ன சம்பந்தம்?

கடைசியாக இந்தியர்களை விடுவித்தனர். தாலிபன்கள் எங்களைப் பிடித்தபோது எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன். மரணத்தின் விளிம்புக்குச் சென்று திரும்பி வந்திருக்கிறேன். தாலிபன்கள் பிடியில் நான் சிக்கியது குறித்து எனது வீட்டுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. டெல்லி வந்த பிறகுதான் அம்மாவுக்கு போனில் தகவல் தெரிவித்தேன். ஆப்கானிஸ்தான் மக்கள் மிகவும் பயந்த நிலையில்தான் இருக்கிறார்கள். பிரச்னை ஒன்றும் இல்லை என்று தாலிபன்கள் கூறிவருகின்றனர். ஆனால் தாலிபன்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அதை நம்பத் தயாராக இல்லை.

தாலிபன்
தாலிபன்

பெண்கள் வீட்டைவிட்டு வெளியே இறங்க முடியாமலும், கல்விக்கூடங்களுக்குச் செல்ல முடியாத நிலையிலும் இருக்கிறார்கள். மக்களின் எல்லாச் சுதந்திரங்களையும் தாலிபன்கள் பறித்துவிட்டனர். நான் திரும்பி வருவதற்கு சற்று முன்னால்தான் தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றினர். அந்த இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். மத்திய, மாநில அரசுகள் நான் இந்தியா வந்து சேருவதற்கு துணையாக இருந்தன" என்றார் குரலில் சற்றும் பதற்றம் குறையாமல்.

அடுத்த கட்டுரைக்கு