Published:Updated:

சம்பளம் வாங்காமல் கொரோனா சிறப்பு வார்டில் வேலை! -கேரள செவிலியரின் துணிச்சல்

செவிலியர் ஷிஜி
செவிலியர் ஷிஜி ( courtesy: ahmedabadmirror online )

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஐசியூ-வில் அனுமதிக்கப்படும் நோயாளிகளைக் கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்யும் பணி எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை சிறப்பாகச் செய்கிறேன் என்கிறார், செவிலியர் ஷிஜி.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்கிறார்கள். ஆனாலும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் தொடர்ந்து களப்பணி ஆற்றிவருகிறார்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கேரளாவின் திருச்சூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியரான ஷிஜி என்பவர், கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றிவருகிறார். பி.எஸ்சி நர்ஸிங் பட்டதாரியான அவர், தனது செய்முறைப் பயிற்சியை முடிக்கவேண்டியதிருப்பதால், சம்பளம் இல்லாமல் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டில் பணியாற்றுகிறார்.

இதுபற்றி 22 வயதான நர்ஸ் ஷிஜி கூறுகையில், “எனது 12 வயதில் தந்தை ராஜன் இறந்துவிட்டார். அதன் பின்னர் என் தாய், வேளாண்மைத் துறையின் நாற்றுகளைப் பராமரிக்கும் பணியை தினக்கூலி ஊதிய அடிப்படையில் செய்து வருகிறார். 

`மீண்டும் அதே வார்டில் பணியாற்ற விரும்புகிறேன்!’-கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நர்ஸ் உருக்கம்

என் தாய்க்குக் கிடைக்கும் சொற்ப ஊதியத்தை வைத்து என்னைப் படிக்கவைத்தார். நான் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி நர்ஸிங் முடித்த நிலையில், ஓராண்டு செய்முறைப் பயிற்சியை முடிக்கவேண்டியதிருந்தது. அதற்காகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தேன்.

இன்டன்ஷிப் எனப்படும் பயிற்சியின்போது ஊதியமாக ஒரு பைசா கூட கிடைக்காது. ஆனால், அதை முடிக்கவேண்டியது அவசியம் என்பதால், நானும் எனது தோழிகளும் இந்த மருத்துவமனையில் சேர்ந்தோம். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் என் தோழிகள் பயிற்சியைத் தொடராமல் வீட்டிலேயே இருந்துவிட்டார்கள். நான் கொரோனா ஐசியூ சிறப்பு வார்டில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தேன்.

representational image
representational image

இந்த வார்டுக்கு வரும் பெரும்பாலான கொரோனா நோயாளிகள் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையிலும் மயக்க நிலையிலும் வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வோம். அவர்கள் குணமடைந்ததும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்படுவார்கள்.

எனக்கு இப்போது ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஏழு நாள்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர், மீண்டும் அதே சிறப்பு வார்டில் பணியாற்றுவேன். என்னுடைய பணிக்காலம் மே 31-ம் தேதியுடன் முடிகிறது. அதுவரை இந்த வார்டிலேயே பணியாற்ற விரும்புகிறேன். 

நர்ஸ் ஷிஜி
நர்ஸ் ஷிஜி

கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றுவதில் எனக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை. வாழ்க்கை எனக்கு நிறைய படிப்பினைகளையும் அனுபவத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் நான் என்னுடைய பயிற்சிக் காலத்தை சிறப்பாக முடித்துக்கொண்டு நல்ல வேலையில் சேருவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் உற்சாகமாக. இந்த தன்னம்பிக்கைப் பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

அடுத்த கட்டுரைக்கு