Election bannerElection banner
Published:Updated:

இடுக்கி: `150 பேர்; 5 மணி நேரப் போராட்டம்!’ - பாலத்தை சரிசெய்து அசத்திய இளைஞர்கள்

இடுக்கி
இடுக்கி ( Facebook/@friendsofkattappana )

இடுக்கி மாவட்டத்தில் வெள்ளத்தால் உடைந்த பாலத்தை இளைஞர்கள் தன்னெழுச்சியாக இணைந்து ஐந்து மணி நேரத்தில் சரி செய்துள்ளனர்.

கேரள மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாகக் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணையில் நீர்ப்பிடிப்பு பகுதியாக இடுக்கி மாவட்டத்தில் மிகக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால், கேரளாவின் பல பகுதிகளில் நிலச்சரிவும், தொடர் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இடுக்கி மாவட்டம் வண்டி பெரியார் அருகே உள்ளது மலமாலா (Mlamala) கிராமம்.

இங்கு 100-க்கும் அதிகமான தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. மலமாலாவையும் சப்பாத் பகுதியையும் இணைக்கும் சாலையில் முல்லைப் பெரியாறு ஆறு ஓடுகிறது. கடந்த சில நாள்களாக அங்கு பெய்த கனமழையால் முல்லைப் பெரியாறு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து சேதமடைந்துள்ளது.

இடுக்கி
இடுக்கி
Facebook/@friendsofkattappana

இரண்டு கிராம மக்களின் போக்குவரத்துத் தடையாக இருந்த இந்த உடைந்த பாலத்தைச் சரி செய்ய `கட்டப்பனையின் நண்பர்கள் குழு’ என்ற அமைப்பு முடிவு செய்துள்ளது. சிறிதும் முன் அனுபவம் இல்லாத இளைஞர்கள் அனைவரும் இணைந்து வெறும் ஐந்து மணி நேரத்தில் அந்தப் பாலத்தைச் சரி செய்துள்ளனர். ``இது மிகவும் ஆபத்தான விஷயம். ஆனால், எங்கள் குழுவைச் சேர்ந்த துணிச்சலான வீரர்கள் தங்களின் உடலில் கயிறு கட்டிக்கொண்டு தண்ணீருக்குள் இறங்கி அனைத்து வேலைகளையும் செய்தனர்.

பெரிய பாறைகளைப் பாலத்தின் இருபுறமும் அடுக்கி, அதன் மீது மண் மூட்டைகள் மற்றும் சிறிய பாறைகளை நிரப்பினோம். பின்னர், பாதையில் சிறிய கற்கள் மற்றும் மண் கொண்டு சமன் செய்தோம். காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்தப் பணி மாலை 4 மணிக்கு முன்னதாகவே முடிந்துவிட்டது” எனக் கட்டப்பனையின் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ஜோஷி மணிமாலா தெரிவித்துள்ளார்.

Air Crash: `மழையையும் கொரோனா அச்சத்தையும் மீறிய மனிதநேயம்!’ - நெகிழவைத்த கேரளம்

தொடர்ந்து பேசிய அவர்,``கிராமத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அவலநிலைதான் பாலத்தைச் சரி செய்ய எங்களைத் தூண்டியது. அங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்கள், அவர்கள் அவசர காலத்தில் நகரத்தை அடைய இதைவிட்டால் வேறு பாதை இல்லை. ஒரு சில சுற்றுப் பாதைகள் இருந்தாலும் அவை தேயிலைத் தோட்டங்கள் வழியாக வண்டிபெரியாருக்குச் செல்வதால், அவற்றைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது இல்லை. ஆரம்பத்தில் 25 பேர் மட்டுமே இணைந்து வேலையைத் தொடங்கினோம்.

எங்கள் பணியை ஃபேஸ்புக்கில் லைவ் செய்திருந்தோம். அதைப் பார்த்த பல இளைஞர்களும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவ இளைஞர்கள் இயக்கம் மற்றும் கட்டப்பனா ரோட் கிளப் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த பலர் இணைந்தனர். நண்பகலுக்குள் எங்கள் வலிமை 150 ஆக உயர்ந்தது. அனைவரும் தாங்களாக முன்வந்து இணைந்தனர். இறுதியில் சில வாகனங்களில் கிராம மக்களை ஏற்றி நாங்கள் சரிசெய்த பாலத்தின் மீது மகிழ்ச்சியாக அழைத்து வந்தோம்” எனக் கூறியுள்ளார்.

இடுக்கி
இடுக்கி
Facebook/@friendsofkattappana

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள மலமலாவை மிகுந்த நெருக்கடிக்குத் தள்ளியது 2018 வெள்ளம். அப்போது சந்திபாலம் இடிந்து விழுந்தது. இதன் பிறகு கிராம மக்கள் தற்காலிகத் தரைப்பாலங்களை நம்பும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாகப் பெய்த கனமழையால் அந்தப் பாலமும் இடிந்துள்ளது. இதனால், கிராம மக்கள் அவசரத் தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். அந்த நேரத்தில்தான் கட்டப்பனா இளைஞர் இணைந்து இடைவிடாத மழைக்கு மத்தியிலும் பாலத்தைச் சரி செய்துள்ளனர்.

News Credits : Indianexpress

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு