Published:Updated:

`உங்கள் அரசு மனிதநேயத்தின் ஆளுமை!’ - பிரதமரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு #corona

`உங்கள் தலைமையின்கீழ் கொரோனாவை எதிர்த்து இந்தியா போராடி வெற்றிபெறும்' என பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் கொரோனா வைரஸுக்கு இந்தியாவில் இதுவரை 700-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 21 நாள்களுக்கு தேசிய அளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு
ஊரடங்கு

அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு அனைத்து இடங்களிலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய ஊரடங்கினால் பல லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து அன்றாடத் தேவைகளுக்காகத் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக ரூ.1,70,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் வேலையிழந்த மக்கள், விவசாயிகள், பெண்கள், ஏழைக் குடும்பத்தினர் ஆகியோருக்கு நிதியுதவி, அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச சிலிண்டர்; விவசாயிகளுக்கு ரூ.2,000 - வைரஸ் பாதிப்புக்கு ரூ.1,70,000 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு

இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ``பன்முகத்தன்மை மற்றும் மிகப் பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியா `கோவிட் -19' வைரஸ் அச்சுறுத்தலின் விளிம்பில் உள்ளது. இருந்தும் பிரதமர் மோடியின் திறமையான ஆட்சியின்கீழ் இங்கு வெற்றிகரமாக மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா சரியான பாதையில் வைரஸை எதிர்த்துப் போராடி மற்ற நாடுகளுக்கு உதாரணமாகத் திகழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு - மோடி
சந்திரபாபு நாயுடு - மோடி

நம் சமூகத்தில் பல்வேறு மக்களை ஆதரிப்பதற்காக 1,70,000 கோடி ரூபாய் சிறப்புச் சலுகையாக அறிவிக்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். கொரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவப் பணியாளர்களுக்காக ரூ.50 லட்சம் காப்பீடு அறிவிக்கப்பட்டது அவர்களின் தியாகத்துக்கு வழங்கப்பட்ட மரியாதை.

பிரதமர் தலைமையின்கீழ் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து மனித நேயத்தின் சிறந்த ஆளுமையாக விளங்குகிறது. கொரோனாவை மட்டுமல்லாது அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளையும் இந்தியா வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி வெல்லும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு