Published:Updated:

`தயவுசெய்து ஒரு தலைவரைப்போல நடந்துகொள்ளுங்கள்!’ - எம்.பி பிரக்யாவைச் சாடிய விமானப் பயணி #Video

பா.ஜ.க எம்.பி சாத்வி பிரக்யா, விமானத்தில் தான் முன்பதிவு செய்த இருக்கை வழங்கப்படாததால் விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

விமானத்தில் எம்.பி பிரக்யா
விமானத்தில் எம்.பி பிரக்யா

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று முன்தினம் டெல்லியிலிருந்து போபாலுக்குச் செல்லத் தயாரானது. அந்த விமானத்தில் பா.ஜ.க எம்.பி சாத்வி பிரக்யாவும் பயணம் செய்துள்ளார். விமானத்தில் தான் முன்பதிவு செய்திருந்த இருக்கை தனக்கு வழங்கப்படவில்லை என்றும் விமான ஊழியர்கள் தன் கேள்விகளுக்கு முறையாகப் பதிலளிக்கவில்லை என்றும் பிரக்யா புகார் அளித்திருந்தார். கடந்த இரு நாள்களாக இந்த விவகாரம்தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

சாத்வி பிரக்யா
சாத்வி பிரக்யா

இருக்கை பிரச்னை!

விமானத்தின் முன்வரிசையில் உள்ள இருக்கையை பிரக்யா முன்பதிவு செய்திருந்துள்ளார். ஆனால், அவர் இருசக்கர நாற்காலியில் வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர் பதிவு செய்த இருக்கையை விமான ஊழியர்கள் அவருக்கு வழங்க மறுத்துவிட்டனர். அதற்குப் பதிலாக அடுத்த வரிசையில் உள்ள இருக்கையில் அமருமாறு தெரிவித்துள்ளனர். ஆனால், இதை ஏற்க மறுத்த பிரக்யா, விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் களேபரத்தில் விமானம் புறப்படுவது 45 நிமிடங்கள் தாமதமாகியுள்ளது.

இதனால் எரிச்சலடைந்த சக பயணிகள், பிரக்யாவை இறக்கி விட்டுவிட்டு விமானத்தை எடுக்கும்படி கூறியுள்ளனர். இதனால் விமானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியுள்ளது. இறுதியாக ஊழியர்கள் ஒதுக்கிய இருக்கையிலேயே பிரக்யா பயணம் செய்துள்ளார். இதையடுத்து, அவர் போபால் சென்று இறங்கியதும், விமானத்தில் தனக்கு நேர்ந்த விஷயம் தொடர்பாக விமான நிலைய இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார்.

``பிரக்யா அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது” என இயக்குநர் அனில் விக்ரம் தெரிவித்துள்ளார்.

சாத்வி பிரக்யா
சாத்வி பிரக்யா

சர்ச்சைக்கு விளக்கம்!

இதுபற்றிப் பேசிய சாத்வி பிரக்யா, ``விமானத்தில் எனக்கு நேர்ந்த அசௌகரியம் பற்றி விமான நிலைய இயக்குநரை அணுகி எழுத்துபூர்வமாகப் புகார் அளித்துள்ளேன். ரயில்கள், விமானங்கள் பொதுமக்களின் வசதிகளுக்காகவே உள்ளது. அதில் பயணிகள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

Vikatan

பிரக்யா அளித்த புகாரை அடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளித்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், ``எம்.பி பிரக்யா முன்பதிவு செய்யும்போது சக்கர நாற்காலி தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை. அவர் குறிப்பிடாததே இவ்வளவு பிரச்னைகளுக்கு காரணம்” எனக் கூறியிருந்தது.

சாத்வி பிரக்யா
சாத்வி பிரக்யா

வைரல் வீடியோ!

இந்த நிலையில், சாத்வி பிரக்யாவால் விமானத்தில் குழப்பம் ஏற்பட்டபோது அவரை எதிர்த்து விமானப் பயணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வீடியோவில், ``நீங்கள் மக்கள் பிரதிநிதி. மக்களைத் தொந்தரவு செய்வது உங்கள் வேலையில்லை. தயவுசெய்து இறங்கி அடுத்த விமானத்தில் வாருங்கள்” எனக் கூறியுள்ளார்.

அதற்கு பிரக்யா, ``முதல் வகுப்பு வசதிகூட இல்லாத இந்த விமானத்தில் நான் பயணிக்கிறேன் என்றால், அதற்கு ஒரு காரணம் உள்ளது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்” எனப் பதில் அளித்துள்ளார்.

இதற்கு உடனடியாகப் பதில் கொடுத்த பயணி, ``முதல் வகுப்பு என்பது உங்கள் உரிமையல்ல. உங்களால் ஒருவர் பாதிக்கப்பட்டால்கூட அதற்கு முழு பொறுப்பேற்றுக்கொண்டு செயல்படும் பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து ஒரு தலைவரைப் போல நடந்துகொள்ளுங்கள். உங்களால் இந்த விமானத்தில் உள்ள 50 பேர் சிரமமடைந்துள்ளனர். இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கு, ``நான் சரியாகத்தான் பேசுகிறேன்” எனக் கூறி பிரக்யா அமைதியாகி விடுகிறார்.

இந்த விவாதங்கள் அடங்கிய வீடியோ சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. `எம்.பி-யை எதிர்த்து இவ்வளவு தைரியமாகவும் சரியாகவும் அந்தப் பயணி பேசியுள்ளார். அவர் யார் எனக் கண்டுபிடியுங்கள்’ என்ற கருத்துகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.