Published:Updated:

`என் உறவினர்கள் மீதே சந்தேகமாக உள்ளது!’ - ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தைச் சுற்றும் கொலை வழக்கு

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்த ரெட்டி கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளார் அவரின் மகள் சுனிதா.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவும் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் தம்பியுமான விவேகானந்த ரெட்டி 1989 முதல் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். கடப்பாதான் இவரின் நிரந்தர தொகுதியாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த வருடம் மார்ச் மாதம், அதாவது ஆந்திர சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகத் தன் வீட்டில் பல்வேறு வெட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார் விவேகானந்த ரெட்டி.

விவேகானந்த ரெட்டி
விவேகானந்த ரெட்டி

இவரின் கொலை ஆந்திர அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, விவேகானந்தாவின் கொலை தொடர்பாக விசாரணை நடந்த சிறப்புக் காவல் படையை அமைத்தார். ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி, `இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வைக்க வேண்டும். அரசிடம் உள்ள காவலர்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை' என்று கூறினார்.

`செக் வைத்த சந்திரபாபு நாயுடு.. காலியான ஒய்.எஸ்.ஆர் கான்செப்ட்!'- பலிக்காத ஜெகனின் `மேலவை' கணக்கு

இதற்கிடையில் தேர்தல் வேலைகள் வரவே, அனைத்து அரசியல் கட்சிகளும் அதில் பிஸியாகிவிட்டன. ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தன் சித்தப்பா கொலை விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அப்படி எதுவும் செய்யாமல் மீண்டும் வேறு ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். அதிலும் முன்னதாக இருந்த கூடுதல் போலீஸ் டி.ஜி.பி-க்குப் பதிலாகக் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரை இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

சுனிதா நாரெட்டி
சுனிதா நாரெட்டி

ஜெகன்மோகன் ரெட்டி நியமித்திருந்த போலீஸ் குழுவிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் கோபமடைந்த விவேகானந்த ரெட்டியின் மகளும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான சுனிதா நாரெட்டி, தன் தந்தை கொலை வழக்கில் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது ஆந்திர முதல்வருக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுனிதா, நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில், அவருடைய உறவினரும் கடப்பா எம்.பி-யுமான ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டி மற்றும் அவரின் தந்தை பாஸ்கர் ரெட்டி மீது சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மிகவும் கடுமையாகப் பேசியுள்ளார். தந்தை கொலை வழக்கில் தன் உறவினர்கள் சிலருக்கே தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் தெரிவித்துள்ளார். அவர்களில் ஜெகன்மோகன் ரெட்டியும் அடக்கம்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்ற பிறகு, எதற்காகத் தன் தந்தை கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவர் தாக்கல் செய்த மனுவுடன் சென்ற வருடம் இவரின் தாய் சௌபாக்கியம்மா மற்றும் ஜெகன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு