Published:Updated:

`உணவுக்கு எந்த மதமும் இல்லை!’ - ஆர்டர் செய்த நபரின் கோரிக்கையை நிராகரித்த ஜொமோட்டோ

கலிலுல்லா.ச

ஜொமோட்டோ வாடிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு, `உணவுக்கு எந்த ஒரு மதமும் இல்லை' எனப் பதில் வந்துள்ளது.

ஜொமோட்டோ ஊழியர்
ஜொமோட்டோ ஊழியர்

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபால்பூர் நகரில் வசித்துவருபவர், அமித்சுக்லா. இவர் ஜொமோட்டோவில் உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், டெலிவரி கொடுக்கும் நபர் பெயரைக்கண்டதும், `ஆளை மாற்ற வேண்டும்' என நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு ஜொமோட்டோ சார்பில், `ஆளை மாற்ற முடியாது' என்று பதில் வந்ததால் அந்த நபர் உணவைக் கேன்சல் செய்துள்ளார். ட்விட்டரில் இது தொடர்பாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், `ஜொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். டெலிவரி எக்ஸிகியூட்டிவின் பெயர் ஃபயாஸ் என்று இருந்ததால், ஆர்டரைக் கேன்சல் செய்தேன். இது `ஷர்வான்’ என்ற புனித மாதம். ஆகவே முஸ்லிம் நபர் ஒருவரிடமிருந்து கொண்டுவரப்படும் உணவு தேவையில்லை’ என்று சுக்லா பதிவிட்டுள்ளார்.

Vikatan

இந்த விவகாரம் தொடர்பாக ஜொமேட்டோ அதிகாரிகள், சுக்லா அனுப்பிய மெசேஜையும் அவரது ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட்டையும் எடுத்துப் பதிவிட்டுள்ளனர். அதில், `உணவுக்கு எந்தவொரு மதமும் இல்லை. ஜொமோட்டோவின் டெலிவரி நபர்கள் மத்தியில் நாங்கள் பாகுபாடு காட்டமாட்டோம். புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்டர் செய்யப்பட்ட உணவு
ஆர்டர் செய்யப்பட்ட உணவு

இதற்குப் பதில் அளித்துள்ள சுக்லா, `அவர்கள் டெலிவரி நபரை மாற்றமுடியாது; அதேபோல பணத்தையும் திருப்பிக் கொடுக்கமுடியாது என்றனர். அதற்கு நானும், அதேபோல நீங்களும் என்னிடம் ஆர்டரை வாங்குமாறு கட்டாயப்படுத்த முடியாது. எனக்குப் பணம் தேவையில்லை. ஜஸ்ட் கேன்சல் மை ஆர்டர் என கூறிவிட்டேன்' என விவரித்துள்ளார்.

மேலும், `ஜொமோட்டோ ஆப்பை அன்-இன்ஸ்டால் செய்துவிட்டேன்' என்றும் இதுதொடர்பாக வழக்கறிஞருடன் விவாதிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சாட்டிங்
சாட்டிங்

சுக்லாவின் கருத்துக்குப் பதில் அளித்துள்ள ஜொமோட்டோ நிறுவனர் கோயல், `இந்தியாவின் கொள்கை மற்றும் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் பன்முகத்தன்மை குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்கள் மதிப்புகளை சீர்குலைக்கும் விஷயங்களில், தொழில் நஷ்டம் ஏற்பட்டாலும் அதற்காக வருத்தப்படப்போவதில்லை’ என்று விளக்கமளித்துள்ளார்.