டேட்டிங் சைட் டு எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச்... லிங்க்ட்இன் சாதித்த கதை! #StartUpBasics அத்தியாயம் 22 | The success story of LinkedIn

வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (23/08/2017)

கடைசி தொடர்பு:12:11 (23/08/2017)

டேட்டிங் சைட் டு எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச்... லிங்க்ட்இன் சாதித்த கதை! #StartUpBasics அத்தியாயம் 22

மூக வலைதளங்கள் என்றாலே பொழுதுபோக்கு, கலாட்டா, செல்பி எடுத்து புகைப்படங்களை பகிர்தல், மீம்ஸ் செய்து வெளியிடுவது எனப் பொதுவானது என்றுதானே நினைப்பீர்கள். ஆனால், இந்த சமூகவலைதளத்தில் அப்படி கும்மி அடித்துவிட முடியாது. காரணம் இங்கே நிறைய பிக்பாஸ்கள் இருப்பார்கள். இங்கே பிக்பாஸ் என்பது உவமை அல்ல; உண்மை. அவர்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். இங்கே ஜாலி கேலி என்பதையெல்லாம் தாண்டி, உங்களுடைய பொறுப்புஉணர்ச்சிதான் இங்கே முக்கியம். ஆகவே யாராக இருந்தாலும் பொறுப்புடன் பதிவிட வேண்டும்.

Linkedin லிங்க்ட்இன்


பதினைந்து வருடங்கள் முன்பு வரை படித்து முடித்தவுடன் முதலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்துவிடுங்கள் என்றுதான் நம்மைப் பார்க்கும் எந்த உறவினரோ நண்பர்களோ அக்கறையுடன் சொல்வார்கள். இன்றைய இணைய உலகில் காலமும் கருவியும் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. எங்கு சென்றாலும் Linkedin-ல் பதிந்து வைத்தாயா.. என்றுதான் கேட்கிறார்கள். யார் கேட்கிறார்கள் உறவினர்களா... இல்லை நண்பர்களா? வேலை கொடுக்கும் நிறுவனங்களே கேட்கின்றன. முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் கேட்கிறார்கள். உயர்கல்வி நிறுவனங்கள் கேட்கிறார்கள். டெண்டர் கொடுக்க அரசாங்கங்கள் கேட்கின்றன.

சமூக வலைதளத்தை உருவாக்கிய எல்லோரும், மக்கள் அதை கட்டற்ற சுதந்திரத்துடன் கருத்துகளை பரிமாற உருவாக்கினார்கள் என்றால், அவர் மட்டும் நேர் எதிர்திசையில் சிந்தித்தார். மக்களின் தொழில், வேலைவாய்ப்புக்கு என்று ஒரு சமூக வலைதளம் ஆரம்பித்தால் என்ன என்ற கேள்வியுடன் அதை ஆரம்பித்தார். அவர்தான் Linkedin-ஐ உருவாக்கிய ரெயிட் ஹோப்மேன்

ஹோப்மேன் பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் சிலிகான்வேலியில் உள்ள பாலோஆல்டோ என்ற சிறுநகரில். எண்பதுகளின் ஆரம்பத்தில்தான் அது சிலிக்கான்வேலியாக உருவெடுத்தது. அதன் தாக்கம் அந்நகரில் உள்ள அனைத்துப் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் இருந்தது. இவர் சிறுவயதிலேயே மிகவும் புத்திசாலியாக திகழ்ந்து கேயாஸியம் என்ற கேம் கம்பெனியில் பகுதிநேர எடிட்டராக திகழ்ந்தார். அவர்கள் உருவாக்கும் கேம்களை சோதித்து அதில் உள்ள லெவல்கள் அனைத்திலும் வெற்றி பெற்று அதில் உள்ள நிறை குறைகளை சொல்வது. இதற்கு நிறைய IQ வேண்டும். இப்படியான சிறுவர்களுக்கு கேம் வடிமைப்பாளர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படும்.

கல்லூரிப்படிப்பு புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில். படிக்கும்போதே பல போட்டித் தேர்வுகளில் பங்குகொண்டு நிறைய ஸ்காலர்ஷிப்களை பெற்றார். அதில் முக்கியமானது மார்ஷெல் ஸ்காலர்ஷிப். மிக மிக புத்திசாலியான அமெரிக்க இளைஞர்களை கண்டறிந்து அவர்களை நாளைய தலைவர்களாக உருவாக்குவதுதான் இதன் நோக்கம். இதை நடத்துவது இங்கிலாந்து அரசு. 1953-ல் அமெரிக்க அரசுக்கு இங்கிலாந்து கொடுத்த பரிசு. இன்றும் இது தொடர்கிறது. சிலிக்கான்வேலியில் இவரைத் தவிர எந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனரும் இந்த ஸ்காலர்ஷிப்பை பெற்றதில்லை.

Linkedin

பிறகு படித்து வெளியில் வந்தவுடன் ஆப்பிள் நிறுவனத்தில் வேலை. ஈவேர்ல்ட் என்ற இன்டர்நெட் ப்ராஜெக்ட்டை அப்போது ஆப்பிள் வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த ப்ராஜெக்ட் மக்களுக்கான ஈ-மெயில் மற்றும் ஆன்லைன் சமூக மையத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. இன்றைய சமூக வலைதளங்களின் தாத்தா அதுதான். AOL என்ற இன்டர்நெட் சேவையை வழங்கும் நிறுவனம் இந்த ப்ராஜெக்ட்டை ஆப்பிளிடம் இருந்து மொத்தமாக விலைக்கு வாங்கியது.

இதன்பிறகு 1997-ல் சோசியல்நெட்.காம் என்ற இணையதளத்தை ஆரம்பித்தார். அதுதான் அவரது முதல் ஸ்டார்ட்அப். இந்த இணையதளம் நண்பர், நண்பிகளை இணைக்கும் தளமாகவும், மணமக்களை இணைக்கும் தளமாகவும் இருந்தது. அந்நாளில் இத்தகைய டேட்டிங் பத்திரிகைகளுக்கு இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், பத்திரிகைகள் மூலம் ஜோடிகளைக் கண்டறிவது மிகவும் தாமதமாக இருந்ததால் இணையத்தில் இதுபோன்ற டேட்டிங் தளம் வந்தவுடன் கூட்டம் அம்மியது. இதுதான் இன்றைய சமூக வலைதளங்களின் பெற்றோர்கள் என்று சொல்லலாம். கூட்டம் சேர்ந்தது; ஆனால் லாபம் சேரவில்லை.

இந்த சமயத்தில்தான் எலன்மஸ்க், பீட்டர் தியல் ஆகியோர் கட்டமைத்த Paypal உருவாகிக்கொண்டிருந்தது. இவரையும் ஒரு இயக்குநராக இணைத்துக்கொண்டார்கள். பின்னர் அதன் COO ( Cheif Operating Officer) என்ற பதவிக்கு உயர்ந்தார். அந்த சமயங்களில் நிறுவனத்தில் நடந்த ஆட்குறைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் இவரே. நிறுவனத்தின் சுமையை குறைக்க பெரிய காரணமின்றி பணிநீக்கம் செய்வது அவருக்கு உடன்பாடில்லை. ஆகவே, ஒருவரை வேலையை விட்டு அனுப்பும்போது அவருக்கு எப்படி உதவலாம் என்று சிந்தித்தார். அப்படி உதித்த ஐடியாதான் லிங்க்ட்இன் (Linkedin)

மீண்டும் சோசியல்நெட்டை தூசிதட்டினார். இம்முறை அது டேட்டிங் சைட் அல்ல. தொழில் சார்ந்த சமூக வலைத்தளமாக கட்டமைத்தார். நோக்கம் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு உதவுவது. ஒத்த நிறுவனங்களில் வேலைபார்க்கும் பணியாளர்களை இணைப்பது, அவர்களின் திறன்களை கல்வித் தகுதிகளை பட்டியலிட்டு நிறுவனங்களை ஈர்ப்பது, நிறுவனங்களின் பணி வாய்ப்புகளை வேலை தேடுபவர்களுக்கு கொடுப்பது. இது இருதரப்புக்கும் பெரும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு பணியாளரின் பக்கத்தில் நிரம்பியிருக்கும் சக பணியாளர்களின் பரிந்துரைகள், அவரது மேலதிகாரியின் பரிந்துரை, பயின்ற கல்லூரி ஆசிரியர்களின் பரிந்துரை, உடன் படித்த மாணவர்களின் பரிந்துரை என்று நிரம்பியிருக்கும் ஒருவரை எந்த கல்வி மற்றும் பணிச்சான்றிதழ்களைப் பார்க்காமல் பணிக்கு தேர்ந்தெடுக்கலாம். தன் துறையில் பிரபலமானவற்றுக்கு டெக்னிக்கல் இன்டர்வியூ கூடத் தேவையில்லை. அந்தளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது.

இதைவிட வேறென்ன வேண்டும். பல முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். முதலீடு கூடியது. Paypal-ஐ Ebay-க்கு விற்ற பிறகு அதில் பங்குதாரராக ஹாப்மேனுக்கும் பெரிய தொகை கிடைத்தது. அடுத்தடுத்த முதலீடுகள் கிடைக்க நிறுவனம் எல்லா நாடுகளையும் சென்று சேர்ந்தது. இன்று ஐம்பது கோடி தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர்கள், நிறுவனங்கள் லிங்க்ட்இன்-ல் இணைந்துள்ளார்கள்.

ரெயிட் ஹோப்மேன்


2011-ல் லிங்க்ட்இன் அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீட்டைக் கோரி இணைந்தது. பங்குகள் வெளியிட்ட முதல் நாளிலேயே 171% எகிறியது. இன்றுவரை பெரிய சறுக்கல் இல்லாமல் மேலும் மேலும் ஏறிக்கொண்டே செல்கிறது. ஹாப்மேன் பங்கு மதிப்பு மட்டும் 20,000 கோடி ரூபாய்களுக்கும் மேல். இன்று லின்கிடினை மைக்ரோசாப்ட் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கு ரெடி கேஷ் கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தை துவங்கிவிட்டது. அதற்கு அடையாளமாக ஹாப்மேன் மைக்ரோசாப்ட் இயக்குநர்களில் ஒருவராக இணைந்துவிட்டார்.

ஸ்டார்ட்அப் பாடம்:

இருபத்தோராம் நுற்றாண்டில் நடந்த பெரிய மாற்றம், தொழிலாளர்களின் மீதான மேலதிகாரிகளின் ஆதிக்க மனோபாவம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. யாரையும் எடுத்தெறிந்து பேசிவிட முடியாது. பணியாளர்களின் தனிநலன், மகிழ்ச்சி, ஆரோக்கியம், பாதுகாப்பு பெரிதும் மதிக்கப்படுகிறது. அத்தகைய நிறுவனங்களே பெரும் வெற்றி பெற்ற நிறுவனங்களாக வலம் வருகிறது. இத்தகைய மாற்றம் புதிய தலைமுறை ஸ்டார்ட்அப்புகளால் துவக்கி வைக்கப்பட்டதே. இந்திய நிறுவனங்கள் இப்பொழுதுதான் இதை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியிருக்கின்றன.

இந்திய ஐடி நிறுவனங்களில் மட்டும் நிகழும் இந்த மாற்றம் பிறதுறை நிறுவனங்களுக்கும் பரவும். பரவியே ஆகவேண்டும். இல்லையென்றால் தொழிலாளர்களை சக தோழர்களாக பாவித்து பல சலுகைகளை கொடுக்கும் புதிதாக முளைத்த ஸ்டார்ட்அப்புகளிடம் தோற்று காணாமல் போகத்தான் வேண்டும்.

வெளியே தள்ளினால் வேலை தேடி கஷ்டப்படுவாய் என்று மிரட்டமுடியாது. இன்னொரு வேலையை பெறுவதும் எளிது. அவர்கள் நினைத்தால் உங்களுக்கே போட்டியாக ஒரு ஸ்டார்ட்அப்பை தொடங்கி உங்களைவிட ஒருபடி மேலே வந்து காட்டும் அண்ணாமலை ரஜினிகள்தான் இன்றைய இளைஞர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்

முந்தைய அத்தியாயங்கள் படிக்க...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்