இன்று தொடங்குகிறது ஜியோ போன் புக்கிங்... முன்பதிவுக்கான வழிமுறைகள்! #JioPhone | Reliance JioPhone Booking starts today - These are the steps to register

வெளியிடப்பட்ட நேரம்: 08:37 (24/08/2017)

கடைசி தொடர்பு:12:22 (24/08/2017)

இன்று தொடங்குகிறது ஜியோ போன் புக்கிங்... முன்பதிவுக்கான வழிமுறைகள்! #JioPhone

ராம் நாத் கோவிந்த் யார் எனத் தெரியாதவர்களுக்கும் கூட ஜியோ பற்றித் தெரிந்திருக்கும். அந்த அளவுக்கு இந்தியாவின் டெலிகாம் சந்தையைத் தற்போது கலக்கிக்கொண்டிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ. அந்நிறுவனம், கடந்த ஜூலை மாதம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியது. 'இந்தியாவின் ஸ்மார்ட்போன்' என்ற விளம்பரத்தோடு அறிமுகமான 'ஜியோ போன்' (Jio Phone), 4ஜி உள்பட பல வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஜியோ போன்

செப்டம்பர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கான புக்கிங் இன்று தொடங்குகிறது. முன்பதிவு செய்பவர்களுக்கே முதலுரிமை என்பதால், இன்று புக்கிங் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஜியோ போன் விற்பனை தொடங்கவிருக்கிறது. ஜியோ நிறுவனத்தின், jio.com இணையதளத்திலும், ஜியோ ஸ்டோரில் நேரடியாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம். பெயர், இமெயில் ஐடி மற்றும் மொபைல் போன் போன்ற விவரங்களை அளித்து வாடிக்கையாளர்கள் எளிதாக முன்பதிவு செய்துகொள்ளலாம். ஜியோ போன் டெலிவரிக்குத் தயாரானதும், அந்நிறுவனம் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளும். முன்பதிவு செய்பவர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஸ்மார்ட்போன் டெலிவரி நேரத்தில் மட்டும் செக்யூரிட்டி டெபாசிட் தொகையான ரூ. 1,500 செலுத்தி ஜியோ போனை பெற்றுக்கொள்ளலாம். மூன்று ஆண்டுகளுக்குப்பின் இத்தொகை வாடிக்கையாளர்களுக்குத் திரும்ப அளிக்கப்படும்.

நேரடியாக ஸ்மார்ட்போனைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், எஸ்.எம்.எஸ் மூலமாக முன்பதிவு செய்யும் வசதியையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. JP <Area Pin Code> Store Code என டைப் செய்து 7021170211 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், முன்பதிவு குறித்த அப்டேட்கள் அனுப்பப்படும்.

Mukesh Ambani @ JioPhone Launch

கடந்த 15-ம் தேதி முதல் ஸ்மார்ட்போன் பீட்டா டெஸ்ட்டை ஜியோ நிறுவனம் தொடங்கிவிட்டது. அந்நிறுவனத்தின் ஊழியர்களும், பங்குதாரர்களும் இந்த பீட்டா டெஸ்ட்டில் கலந்துகொண்டதாகத் தெரிகிறது.

இந்தியாவின் ஸ்மார்ட்போன் என ஜியோ போன் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், சாதா ஃபோனுக்கும், ஸ்மார்ட்ஃபோனுக்கும் இடைப்பட்ட வசதிகள் கொண்டதாகத்தான் இது பார்க்கப்படுகிறது. 4ஜி வசதியுடைய மலிவு விலை மொபைல் போன் என்பது இதன் மிகப்பெரிய பிளஸ். கிராமப்புறங்களிலும் இதனால் 4ஜி வசதி சென்றடையும். இந்த ஸ்மார்ட்போனுடன் ஜியோ வழங்கும் டேட்டா ஆஃபர்களும் நிறைவாகவே இருக்கின்றன.

வாய்ஸ் கமாண்ட் மூலம் கால், குறுஞ்செய்தி அனுப்புவது, இணையத்தில் தேடுவது மற்றும் ஆபத்து நேரங்களில் SOS மெஸேஜ் மூலம் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பும் வசதி போன்றவை இதன் சிறப்பம்சங்கள். ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோவின் அப்ளிகேஷன்கள் ப்ரி-லோடு செய்யப்பட்டு வருகின்றன. இவை தவிர்த்து, 22 இந்திய மொழிகளையும் ஜியோ போன் சப்போர்ட் செய்கிறது.

வாட்ஸ்அப் வருமா? வராதா?

Whatsapp

KaiOS ஆபரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், இதில் வாட்ஸ்அப் செயல்படாது என சொல்லப்பட்டது. ஆனால் வாட்ஸ்அப் நிறுவனத்துடன், ஜியோ பேச்சுவார்த்தை நடத்திவருவதால், விரைவில் இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கான வாட்ஸ்அப் வெளியாகும் எனத் தெரிகிறது. விண்டோஸ், சிம்பியன் போன்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தும் பழைய மொபைல்களுக்கான சப்போர்ட்டை ஆண்ட்ராய்டு கடந்த ஜூன் மாத இறுதியோடு நிறுத்தியது நினைவிருக்கலாம். ஜியோ போனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாதென்றால், அது மிகப்பெரிய குறையாகத்தான் பார்க்கப்படும். எனவே, அதைத் தவிர்க்க ஜியோ நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

4ஜி, மலிவு விலை, வாய்ஸ் சர்ச், 4 ஜிபி இன்டர்னல் மெமரி, 2 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா, VGA முன்பக்க கேமரா, ஜி.பி.எஸ் போன்ற வசதிகள் ஜியோ போனில் இருக்கின்றன. மேலும், மெமரி கார்டு மூலம் 128 ஜிபி வரை மெமரியை நீட்டித்துக்கொள்ளலாம். தற்போது 50 கோடிக்கும் மேற்பட்டோர் 2ஜி நெட்வொர்க்தான் பயன்படுத்துகின்றனர் என்பதால், மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த 4ஜி ஜியோ போன், இந்திய மொபைல் சந்தையில் புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்