டூயல் கேமரா... சூடாகாது... நீடித்த பேட்டரி... ஆனால் விலை?! - ஆப்பிளுக்கு சவால் விடும் ஜியோமி #MiA1 | Dual camera long lastin battery and no heating issues xiomi strikes again

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (06/09/2017)

கடைசி தொடர்பு:11:28 (06/09/2017)

டூயல் கேமரா... சூடாகாது... நீடித்த பேட்டரி... ஆனால் விலை?! - ஆப்பிளுக்கு சவால் விடும் ஜியோமி #MiA1

 

Mi A1

இந்தியாவில் ஜியோமி கால் பதித்த வருடத்தில் இருந்தே அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும் எந்த ஒரு ஸ்மார்ட்போனும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜியோமி அறிமுகப்படுத்திய ரெட்மி நோட் 4 மிகப்பெரிய வெற்றியடைந்தது. மற்ற மொபைல் நிறுவனங்கள் டூயல் கேமரா ஸ்மார்ட்போனை வெளியிட ஆரம்பித்துவிட்ட நிலையில் ஜியோமியில் இருந்து ஒரு டூயல் கேமரா ஸ்மார்ட்போனை எதிர்பார்த்து காத்திருந்தார்கள் ஜியோமி ரசிகர்கள்.

இந்தியாவில் தனது முதல் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என சில நாள்களுக்கு முன்னால் அறிவித்திருந்தது ஜியோமி. காத்திருந்தவர்களை ஏமாற்றாமல் அட்டகாசமான வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது Mi A1.  


Mi A1 சிறப்பம்சங்கள்

  1. 5.5 இன்ச் IPS LCD 1080 x 1920  திரை.
  2. கொரில்லாகிளாஸ் பாதுகாப்பு வசதி.
  3. 2GHz குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 625 ஆக்டாகோர் ப்ராசஸர்.
  4. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி.
  5. 12+12 மெகாபிக்சல் டூயல் கேமரா 2x optical zoom வசதியுடன்.
  6.  5 மெகாபிக்சல் முன்புற கேமரா.
  7. Type­-C வசதி மற்றும் 3080 mAh பேட்டரி திறன்.
  8. ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.2 நொளகட் இயங்குதளம்.

எப்பொழுதும் போலவே இந்த முறையும் மீடியம் பட்ஜெட் மொபைல்களில் ராஜா தான் என நிரூபித்திருக்கிறது ஜியோமி. Mi A1 ஸ்மார்ட்போனில் வசதிகளுக்குக் குறைவில்லை. சொல்லப்போனால் பிளாஃக்ஷிப் மொபைல்களோடு போட்டி போடும் அளவுக்கு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பாக ஜியோமி குறிப்பிடுவது கேமராவைத்தான். 12+12 மெகாபிக்சல் டூயல் கேமராவைப் பயன்படுத்தி DSLRதரத்தில் போட்டோக்கள் எடுக்க முடியும். செயல்திறன் சிறப்பாக இருந்ததால் ரெட்மி நோட் 4 ல் பயன்படுத்திய அதே குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 625 ஆக்டாகோர் ப்ராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 5.5 இன்ச் திரை கொண்டிருந்தாலும் 7.3 மி.மீ தடிமன் மட்டுமே இருப்பதால், ஒரு கையில் வைத்து பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். 3080 mAh பேட்டரி திறன் இருந்தாலும் அது மேம்படுத்தப்பட்டிருப்பதால் ஒரு நாள் பயன்பாட்டுக்கு தாரளமாக தாக்குப்பிடிக்கும் என உத்தரவாதம் அளிக்கிறது ஜியோமி.

mi a1

ரெட்மி ஸ்மார்ட்போன்கள் அதிகமாக சூடாகின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு. அதுவும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனால் அந்தக் குற்றசாட்டு அதிகமாக எழுந்தது. இந்த மொபைலில் அதைக் கவனத்தில்கொண்டு வடிவமைத்திருக்கிறது ஜியோமி. வெப்பத்தைக் குறைக்க pyrolytic graphite sheetகளை பயன்படுத்தியிருக்கிறது. இதன் மூலமாக மொபைல் இயங்கும் பொழுது ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க  முடியும். சவுண்ட் குவாலிட்டியை மேம்படுத்துவதற்காக 10V smart power amplifier பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக  ஆடியோ அவுட்புட் சிறப்பாக இருக்கும்.

இவ்வளவு அதிக வசதிகளை  குறைவான விலையில் எப்படி இந்த மொபைலில் ஜியோமியால் அளிக்க முடிந்தது? அதற்கான விடை கூகுள் நிறுவனத்திடம் இருக்கிறது. கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் கீழ் இந்த மொபைலை தயாரித்திருக்கிறது ஜியோமி. கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டம் என்பது குறைவான விலையில் அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிப்பது. 2014-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கும் இந்த திட்டம் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ்  A1 மொபைல்தான் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தில் வெளியான முதல்  ஸ்மார்ட்போன். முதல் முறையாக ஜியோமி நிறுவனத்துடன் கைகோத்துள்ளது கூகுள். Mi A1 ஆண்ட்ராய்டு ஒன் என்பதால், இதில் இருப்பது ஸ்டாக் ஆண்ட்ராய்டு  இயங்குதளம். இதன்மூலமாக போட்டோக்களை அன்லிமிடட்டாக சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் உடனுக்குடன் கிடைக்கும்.

ஜியோமி Mi A1

புல்மெட்டல் கட்டமைப்பு, டூயல் கேமரா, Type­-C, ஸ்டாக் ஆண்ட்ராய்டு வசதிகள் கொண்ட Mi A1  ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் செப்டம்பர் 12-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இதன் விலை 14999.


டிரெண்டிங் @ விகடன்