நிறுவனங்களும் இனி வாட்ஸ்அப் செய்யலாம்... வரமா சுமையா? #WhatsappBusiness | WhatsApp officially announced its new feature WhatsApp for businesses

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (07/09/2017)

கடைசி தொடர்பு:14:50 (07/09/2017)

நிறுவனங்களும் இனி வாட்ஸ்அப் செய்யலாம்... வரமா சுமையா? #WhatsappBusiness

துவரை இருந்தது போல இனிமேல் வாட்ஸ்அப் இலவச அப்ளிகேஷன் கிடையாது. வணிக ரீதியில் வாட்ஸ்அப் அப்ளிகேஷனைப் பயன்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம்பெற முடிவு செய்துள்ளது வாட்ஸ்அப். இதற்காக வாட்ஸ்அப் பிசினஸ் என்னும் வசதியை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்திருக்கிறது அந்நிறுவனம். 

வாட்ஸ்அப் ஆப்

யாருக்காக வாட்ஸ்அப் பிசினஸ்?

வங்கி சேவையில் இருந்து ஆன்லைன் ஷாப்பிங் வரைக்கும், அனைத்திற்கும் இணையம், ஆப்ஸ் போன்றவை இருந்தாலும் இன்னும் கூட SMS-கள்தான் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ள பயன்படுத்தப்பட்டுவருகிறது. OTP-யில் இருந்து, உங்கள் பார்சல் டெலிவரி ஆக தயார் ஆகிவிட்டது எனச்சொல்வது வரை பெரும்பாலான செய்திகள் SMS மூலம்தான் நம் மொபைலுக்கு வரும். இந்த செய்திகளை வாட்ஸ்அப் மூலமாகவே அனுப்ப உதவுவதுதான் வாட்ஸ்அப் பிசினஸ். சிறு நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் கம்பெனிகள் வரை அனைவருமே வாடிக்கையாளர்களை தொடர்புகொள்ள, தங்கள் சேவை தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வாட்ஸ்அப்பை பயன்படுத்தலாம்.

இதனைப் பயன்படுத்த நினைக்கும் நிறுவனங்கள் தங்களின் விவரங்களைக்கொடுத்து வாட்ஸ்அப் கணக்கு ஒன்று துவங்க வேண்டும். இதன்மூலம்தான் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ள முடியும். செய்திகளின் வேகம், பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பது, பாதுகாப்புத்தன்மை ஆகிய மூன்று விஷயங்கள்தான் வாட்ஸ்அப் நிறுவனத்தின் பலம். அதனை பிசினஸ் வசதியிலும் கொண்டுவருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. நிறுவனங்களின் உண்மைத் தன்மையை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்வதற்காக ஃபேஸ்புக், ட்விட்டர் போல கணக்குகளை 'Verify' செய்ய இருக்கிறது. ட்விட்டரில் ப்ளூடிக் போல, உறுதிசெய்யப்பட்ட கணக்குகளுக்கு பச்சை நிற பேட்ஜ் வழங்கவிருக்கிறது. 

வெற்றி பெறுமா வாட்ஸ்அப் பிசினஸ்?

வாட்ஸ்அப் நிறுவனம் தன்னுடைய பயனாளர்களின் டேட்டாவை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்போவதாக அறிவித்த போதே, வருங்காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியாக சில வசதிகளை அளிக்க உதவியாக இருக்கும் என அறிவித்திருந்தது. இந்த முடிவுக்காக, இந்தியா உள்பட பலநாடுகளில் சட்டசிக்கல்களையும் சந்தித்து வருகிறது. ஆனால் இவையனைத்தையும் தாண்டி வாட்ஸ்அப்பின் பலம் அதன் வாடிக்கையாளர்கள்தான். இன்னும் துல்லியமாக சொன்னால், வாடிக்கையாளர்களின் டேட்டாதான் அதன் பலம். மொபைல் எண்ணுடன் இணைந்து செயல்படும் சேவை என்பதால் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மைக்கு சந்தேகமே வேண்டாம். மேலும் 2G-யில் இருந்து 4G வரை எல்லா நெட்வொர்க்கிலும் வாட்ஸ்அப் கில்லி என்பதால் விலைகுறைந்த ஸ்மார்ட்போன்களில் கூட இதன் பயன்பாடு இருக்கிறது. எனவே வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ள வணிக நிறுவனங்களுக்கும் எளிதாக இருக்கும். 

whatsapp

தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய அறிவிப்புகள் குறித்து செய்தி அனுப்புவது, அவர்களை ஒரே குழுவில் இணைத்து வைத்திருப்பது என ஏற்கெனவே பல சின்ன சின்ன நிறுவனங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றன. அதனை இன்னும் மேம்படுத்தி, அதன் மூலம் பணம் பார்க்கவிருக்கிறது வாட்ஸ்அப். 

எப்போது முதல் இயங்கும்?

இந்த வசதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. சோதனை மட்டுமே நடந்துவருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த வசதி நம் மொபைலுக்கு வரலாம். அதேபோல இதற்கு எவ்வளவு பணம் வாங்கப்படும் என்ற விவரங்களும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவையனைத்தும் பலகட்ட சோதனைகளுக்குப் பின்னரே முடிவு செய்யப்படும்.

யாரெல்லாம் இதனை பயன்படுத்தலாம்?

நிறுவனங்களைப் பொறுத்தவரை வங்கிகள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், பொழுதுபோக்கு சேவை நிறுவனங்கள் என வணிக ரீதியாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சரி, இப்படி வாடிக்கையாளர்களுக்கு நிறுவனங்கள் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தால் விளம்பரங்கள் எல்லாம் அங்கேயும் வந்து கொட்டுமே என்கிறீர்களா? இதற்கு இரண்டு ஆப்ஷன்களைத் தந்திருக்கிறது வாட்ஸ் அப். முதலாவது, வணிக நிறுவனங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களை நினைத்தவுடன் தொடர்புகொண்டு விட முடியாது. வாடிக்கையாளர்கள் எந்தெந்த நிறுவனங்களுக்கு செய்திகளை அனுப்ப அனுமதி அளிக்கிறார்களோ, அவர்களால் மட்டும்தான் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ள முடியும். ஆனால் எந்தவொரு வாடிக்கையாளரும், எந்தவொரு நிறுவனத்தையும் தொடர்புகொள்ளலாம். இரண்டாவது வழி, பிளாக் செய்வது. ஏதேனும் நிறுவனத்துடன் இருந்து செய்திகள் வருவது பிடிக்கவில்லை என்றால் வழக்கம்போல அந்த கணக்கை பிளாக் செய்துவிடலாம். 

வணிகநிறுவனங்களுக்கு மட்டுமின்றி, வாட்ஸ்அப்பிற்கும் வணிகரீதியாக பயனளிக்கும் முடிவுதான் இந்த வாட்ஸ்அப் பிசினஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்