Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடமாடும் கூகுள் மனிதர்கள்… ஒரு போன் செய்தால் விடை கிடைக்கும்! #AskNYPL

நடமாடும் கூகுள் மனிதர்கள்

நியூயார்க் பொது நூலகத்தில் மயான அமைதி. இருப்பவர்கள் மூச்சு விடுகிறார்களா என்பது கூட தெரியவில்லை. ஓர் ஓரத்தில் தனியாக அந்தப் பெரிய மேசை இருக்கிறது. சிவப்பு, கருப்பு, வெள்ளை நிறத்தில் தொலைப்பேசிகள். அதைச் சுற்றி ஐந்து பேர் அமர்ந்திருக்கிறார்கள். திடீரென இருளை அதிகாலை ஒளிக் கீற்று கிழிப்பது போல், நூலக மௌனத்தைக் கலைக்கும் விதத்தில் ஒரு தொலைப்பேசியின் அலறல். ஒருவர் அதை எடுத்துப் பேச தொடங்க, மற்றொன்றும் அலறுகிறது. இன்னொருவர் அதை எடுத்துப் பேசத் தொடங்கினார். அதில் நிகழ்ந்த உரையாடலின் விவரம்.

லைப்ரரி மனிதர்: ஹலோ Ask NYPL! (நியூயார்க் பப்ளிக் லைப்ரரியிடம் கேளுங்கள்)

மறுமுனை: பைபிளுக்கு காப்பிரைட் (Copyright) யாராவது வெச்சுருக்காங்களா?

லைப்ரரி மனிதர்: பைபிள் 1923ம் ஆண்டுக்கு முன்னாடியே வெளிவர ஆரம்பிச்சிருச்சு. அதனால காப்பிரைட் இருக்காது. இருந்தாலும் வெயிட் பண்ணுங்க. செக் பண்ணிக்கிறேன். (தேடிவிட்டு வருகிறார்) புதுசா எடிட் பண்ணி வெளிவர பைபிள்கள், அப்பறம் அதோட மொழிபெயர்ப்புகள், இதுக்கெல்லாம் காப்பிரைட் இருக்குங்க.

மறுமுனை: ரொம்ப தேங்க்ஸ்!

இது என்ன தேவை இல்லாத வேலை? கூகுள் செய்தால் இரண்டே நிமிடத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாமே? நிற்க! இது நடந்த வருடம் 1979. அப்போது கூகுள் இல்லை, நூலகங்களும், இவர்களைப் போல உதவும் நல்ல உள்ளங்களும் மட்டுமே இருந்தனர்.

இவர்கள் இந்தச் சேவையை ஆரம்பித்த வருடம் 1940களின் தொடக்கம். அப்போது இன்டர்நெட் எல்லாம் கிடையாது. ஏதாவது சந்தேகம் என்றால் நாமே பொடிநடையாக நூலகம் செல்ல வேண்டும். முழுக்கைச் சட்டையை மடித்துக்கொண்டு புத்தகங்களுக்குள் புகுந்து வெளியே வரவேண்டும். அப்போதும் விடை கிடைக்கும் என்று எந்தவித உறுதியும் கொடுத்துவிட முடியாது. ஆனால், அது ஓர் அற்புதமான அனுபவம் என்பது மட்டும் நிச்சயம். தேடல், அதுவும் அந்த விடை கிடைத்து விட்ட தேடல்... அதை விடச் சுகம் வேறு என்ன இருக்க முடியும்? அந்தத் தேடலை இவர்கள் மற்றவர்களுக்காகச் செய்கிறார்கள்.

அந்தக் காலத்தில், நூலகங்கள் அருகிலும் இருந்ததில்லை. எல்லோருக்கும் தொலைவில் இருக்கும் நூலகம் செல்ல நேரமும் இருந்ததில்லை. அவர்களுக்கு எல்லாம் உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தச் சேவை. ஆச்சர்யம் என்னவென்றால், இன்றும் இந்தச் சேவை இருந்து வருகிறது. யாரேனும் அழைத்தவுடன் பதிலுக்காக 120 வருட ஆவணக் காப்பகத்தை புரட்டிப் பார்க்கவும் இவர்கள் தயங்குவது இல்லை. இந்தச் சேவையைச் செய்வதற்கு இவர்கள் பணம் என்று எதுவும் வாங்குவதில்லை. நூலக அலுவல்களில் ஒன்றாகவே இதைப் பார்க்கிறார்கள்.

கூகுள் மனிதர்கள் - நியூயார்க் பொது நூலகம்

படம்: nypl.org

இப்போது இந்தச் சேவை சற்றே விரிவடைந்து தனித் துறை மற்றும் அதற்கு ஒரு தலைவர் என்ற வகையில் இயங்குகிறது. அதன் மேலாளர் ரோசா காபல்லெரோ-லி பேசுகையில், “செய்தி, அறிவியல் மற்றும் வரலாறு சம்மந்தப்பட்ட கேள்விகள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வரும். இலக்கண சந்தேகங்கள், டெக்னாலஜி சந்தேகங்கள் அடிக்கடி வரும். தொடர்ந்து கேள்வி கேட்பவர்கள் கூட இருக்கிறார்கள். எங்கள் எண்ணை ஸ்பீட் டயலில் வைத்திருப்பார்கள். சென்ற வருடம் புகழ்பெற்ற பாடகர் பிரின்ஸ் இறந்தபோது அவரின் ரசிகர்கள் பலர் மிகுந்த சோகத்துடன் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள எங்களைத் தொடர்பு கொண்டார்கள்” என்று விவரித்தார்,

வருடத்திற்கு 60,000 தொலைப்பேசி அழைப்புகள் கேள்விகளுடன் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவர்களும் இந்தச் சேவைக்காக வருடாவருடம் 20,000 மின்னஞ்சல்கள் அனுப்புகிறார்கள், 17,000 சாட் மெசேஜ்கள், 500 எஸ்.எம்.எஸ்-கள் பகிரப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 75 வருடங்களாக நடந்து வரும் இந்தச் சேவையில், மிகவும் வித்தியாசமான, கடினமான அல்லது மிக முக்கியமான கேள்விகளைப் பத்திரப்படுத்திப் பதிவு செய்து இருக்கிறார்கள். அவற்றுள் சில…

கேள்வி

படம்: New York Public Library

“கனவில் யானை ஒன்று நம்மைத் துரத்தினால் என்ன அர்த்தம்?” (மே 27, 1947)

“சரியான நேரத்தில், சரியான இடத்தில் நின்ற ஒரு காரணத்தால் வரலாற்றில் இடம்பெற்ற மனிதர்களின் பட்டியல் கிடைக்குமா?” (செப்டம்பர் 4, 1946)

“அமெரிக்காவில் நரம்பியல் பாதிப்புடன்  எத்தனை பேர் இருக்கிறார்கள்?” (டிசம்பர் 30, 1946)

“மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் எல்லா நாள்களிலும் பௌர்ணமி நிலவு தெரியுமா?” (அக்டோபர் 6, 1961)

“18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் ஓவியங்களில் எதற்காக  நிறைய அணில்கள் இடம்பெற்றிருக்கின்றன? அவற்றை எப்படி ஓவியர்கள் வளர்த்தார்கள்?” (அக்டோபர் 1976)

“அரிஸ்டாட்டில், பிளாட்டோ, சாக்ரடீஸ் - இந்த மூவரும் ஒரே ஆள் தானோ?” (நவம்பர் 24, 1950)

 

இன்றும் ஒன்பது பேர் தொலைப்பேசியின் முன் எப்போதும் அமர்ந்திருக்கிறார்கள், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்காக. அதற்கான தொலைப்பேசி எண், நியூயார்க் பொது நூலகத்தின் இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. 917-275-6975 என்ற எண்ணைத் திங்கள் முதல் சனி வரை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொண்டு இந்த நடமாடும் கூகுள் மனிதர்களிடம் சந்தேகங்களைக் கேட்கலாம். இந்தச் சேவையை ஒரு கலாசாரமாகவே கொண்டு செயல்படும் இந்த மனிதர்கள் உலவும் இதே உலகில்தான், ஒரு வங்கியையோ அல்லது அரசு அலுவலகத்தையோ தொடர்பு கொண்டால் சீறும் மனிதர்களும் இருக்கிறார்கள்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement