Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“AI வளரும் தருணத்தில் தவறுகள் நிகழ்வது... வருத்தமளிக்கிறது!” - நெசமாதான் சொல்றீங்களா சுந்தர் பிச்சை?

சுந்தர் பிச்சை

கூகுள் பிக்ஸல் 2, 2 XL என்ற பெயரில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், அறிமுக விழாவில் அந்த மொபைல்களையும் தாண்டி கவனம் ஈர்த்தது என்னவோ கூகுளின் புதிய கேட்ஜெட்கள்தான். நவீன தொழில்நுட்பங்களுடன் மினி மற்றும் மேக்ஸ் ஸ்பீக்கர்கள், பிக்ஸல் பட்ஸ் எனப்படும் ஹெட்செட்கள், கூகுள் கிளிப்ஸ் கேமரா, பிக்ஸல்புக் லேப்டாப் என எல்லாமே மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் எல்லாவற்றிலும் இருந்த சிறப்பம்சமான AI மற்றும் மெஷின் லேர்னிங் திறன். அறிமுக விழாவில் பேசிய கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை, பிரம்மாண்டமாக AI மற்றும் மெஷின் லேர்னிங் கொண்டு பயனீட்டாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூகுள் முயன்றியிருப்பதாக தெரிவித்தார்.

தற்போதும் ஆராய்ச்சியில் இருக்கும் AI தொழில்நுட்பத்தை முதன் முதலாகப் பெரிய அளவில் பயன்படுத்தும் நிறுவனமாக மாறக் கூகுள் முனைவது வெளிப்படையாகவே தெரிந்தது. இதுதான் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கேட்ஜெட்களின் வாங்கத் தூண்டும் விஷயமாகவே பிரகடனப்படுத்தப்பட்டது. இப்போது கூகுளின் இலக்கு, மெஷின் லேர்னிங் வைத்து தன் படைப்புக்களை மெருகேற்றுவதுதான். நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவில் ஓர் உணவகத்தைப் படம் பிடித்தால் போதும், அதன் வரலாறு முதல் அதன் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் வரை எல்லாவற்றையும் உங்கள் கண் முன் நிறுத்தி விடும். இரண்டாவதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பிக்ஸல் பட்டில் இருக்கும் கூகுள் ட்ரான்ஸ்லேஷன் தொழில்நுட்பம். விழாவில் AI அதீத வேகத்தில் செயல்பட்டு, பேசும் வாக்கியங்களை உடனுக்குடன் மொழி பெயர்த்தது எல்லோராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ஆங்கில இணையதள ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சுந்தர் பிச்சை AI மற்றும் மெஷின் லேர்னிங் குறித்து பேசிய கருத்துகள் சில உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் பிக்ஸல் பட்ஸ்

“AI தொழில்நுட்பம் இனிதான் பரவலாகப் பயன்படுத்தப்படும். எவ்வித இடையூறும் தடைகளும் இல்லாமல் அவை செயல்படும் காலம் தொலைவில் இல்லை. உங்கள் குரலை வைத்தே அதைக் கட்டுப்படுத்த முடியும். தற்போது உருவாகி வரும் கூகுள் லென்ஸ் கொண்டு நீங்கள் காண்பதை உங்கள் கம்ப்யூட்டரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விடும்” என்று முதல் ஆச்சர்யத்தைப் பகிர்ந்தார்.

மற்றொரு புறம் இந்த நவீன தொழில்நுட்பத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்தும் அலசப்பட்டு வருகிறது. உதாரணமாக, பிரைவசி என்ற விஷயம் இந்த AI தொழில்நுட்பத்தால் எந்த அளவிற்குப் பாதிக்கப்படும் என்பது தெரியவில்லை. எல்லோரும் தொழில்நுட்பத்திற்காக தங்கள் பிரைவசியை அடகு வைப்பார்களா என்றால் நிச்சயம் ‘இல்லை’ என்ற பதில்தான் வரும். இதை சுந்தர் பிச்சையும் நன்கு அறிவார். இது தொடர்பாக அவர் தெரிவித்த பதிலில்,

“தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும் வேகம், வரும் புதிய வசதிகள்  தங்களை ஆட்டிவைப்பதாக, அடிமைப்படுத்துவதாக மக்கள் உணரலாம். AI வேகமாக வளர்ச்சியடையும் இந்தத் தருணத்தில் சில தவறுகள் நிகழ்வது சகஜம்தான். இது வருத்தமளிக்கும் விஷயம். எல்லோரும் இதை விரும்புவார்கள் என்று நாம் நினைத்து விட முடியாது. மனிதர்களான நாம், இவ்வளவு வேகமான வளர்ச்சிக்குத் தயாரா என்பது கூட எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தவரை இல்லை என்றே தோன்றுகிறது” என்று தன் கருத்தைப் பதிவு செய்தார்.

அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி சரிதான், ஆனால் அதனால் ஒருவரின் தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படும் என்றால் அந்த வசதி தேவையா என்ற விவாதம் எழாமல் இல்லை. இதை உணர்ந்த கூகுளும் தனது டீப் மைண்ட் (Deep Mind) நிறுவனத்தின் உதவியுடன் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி தொடர்பான நெறிமுறைகள் நிறுவுவது குறித்து ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம் மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்று செயல்பட தொடங்கியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement