நம் மொபைலுக்குள் குடியேற கூகுள் செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா? | Google spends huge amount for pre-installed apps

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (16/10/2017)

கடைசி தொடர்பு:14:25 (16/10/2017)

நம் மொபைலுக்குள் குடியேற கூகுள் செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?

லகின் நம்பர் ஒன் சர்ச் இன்ஜின் எது எனக் கேட்டால், கூகுளில் தேடாமலே, கூகுள்தான் எனப் பதில்சொல்லிவிடலாம். அந்தளவுக்கு டெஸ்க்டாப் முதல் மொபைல் வரை ஆதிக்கம் செலுத்திவருகிறது கூகுள். இந்த நம்பர் 1 அந்தஸ்துக்கு, கூகுளின் சேவைகள் மட்டுமே காரணமில்லை. மற்ற மொபைல் நிறுவனங்கள் மற்றும் கேட்ஜெட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் கூகுளின் சேவைகளுக்குத் தரும் ஒத்துழைப்பும் ஒரு காரணமே.

கூகுள்

உதாரணமாக ஆண்ட்ராய்டு மொபைல்களைக் குறிப்பிடலாம். ரெட்மியில் இருந்து சாம்சங் வரைக்கும் எந்த மொபைல் வாங்கினாலும், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யூடியூப், குரோம் பிரவுசர் உள்ளிட்டவை ஏற்கெனவே போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இப்படி மொபைல் நிறுவனங்கள், தங்கள் மொபைல் போன்களில் கூகுள் ஆப்களை ப்ரீ இன்ஸ்டால் செய்வதற்காக, கூகுள் நிறுவனம் பணம் கொடுக்கும். இதற்கு Traffic Acquisition Cost (TAC) என்று பெயர்.

கூகுளுக்கு, தனது சேவைகளில் இருந்துவரும் வருமானங்களில் முக்கியமானது விளம்பர வருமானம். மொபைல் ஆப்ஸ், பிரவுசர், யூடியூப் என கூகுளின் எல்லா சேவைகளிலும் இந்த விளம்பரங்கள் எட்டிப்பார்க்கும். இந்த விளம்பரங்கள் அதிகம் பேரை சென்றடைய வேண்டுமென்றால், அதிகமான வாடிக்கையாளர்கள் தேவை. இதற்காகத்தான் மற்ற நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கிறது கூகுள்.

Google Search

முதலில் கணினிகளுக்காக அதிகம் செலவிட்ட கூகுள், தற்போது மொபைல்களுக்கே அதிகமாக செலவு செய்கிறது. மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததும், மொபைலில் கூகுளின் சேவைகள் அதிகளவில் பயன்படுவதுமே இதற்கு காரணம்.

சில நாள்களுக்கு முன்னர், ஆப்பிளின் சஃபாரி பிரவுசரில் கூகுள் சர்ச் வசதியை நிறுவுவதற்காக, அந்நிறுவனத்துக்கு சுமார் 3 பில்லியன் டாலர்கள் கொடுத்திருந்தது கூகுள். இதன்மூலம் ஐபோன்கள் மற்றும் மேக் கணினிகளில் கூகுள் சர்ச் வசதி, டிஃபால்ட்டாக இருக்கும். அதைதொடர்ந்து ஐபோன் மற்றும் மேக் பயனாளர்களிடம் இருந்து விளம்பர வருமானமும் கூகுளுக்கு கிடைக்கும். இது சர்ச் இஞ்சினுக்கு.

இதேபோல, கூகுள் மேப்ஸ், யூடியூப், ஜிமெயில், குரோம் பிரவுசர் போன்ற ஆப்களை, தங்கள் டிவைஸ்களில் டிஃபால்ட்டாக நிறுவுவதற்காக, கடந்த ஆண்டு 7.2 பில்லியன் டாலர்களை, ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளது கூகுள். இந்த Traffic Acquisition Cost-ஐ கூகுள் மொத்தமாக, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கிவிடாது. மாறாக, தயாரிப்பு நிறுவனங்களின் டிவைஸ் மூலமாக வரும் விளம்பர வருவாயை, அந்தந்த நிறுவனங்களுடன் குறிப்பிட்ட சதவிகிதம் பகிர்ந்துகொள்ளும். இதன்மூலம், கூகுளின் விளம்பரம் நிறைய பேரை சென்றடைவதோடு, கூகுளின் சேவைகளும் தொடர்ந்து வளரும். மேலும், நிறுவனங்களுக்கு செலுத்தும் பணமும், கூகுளின் வருமானத்துக்கு ஏற்பவே இருக்கும். இது கூகுள் மற்றும் கேட்ஜெட் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகிய இருவருக்குமே பயனுள்ள ஓர் வழி. ஆனால், மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமான பணத்தை, கூகுள் விளம்பரங்களில் பங்கு கேட்கும்பட்சத்தில், கூகுளுக்கு விளம்பர வருமானத்தில் தொய்வு ஏற்படும். உதாரணமாக, ஆப்பிள் நிறுவனத்தைக் குறிப்பிடலாம். கூகுளின் சர்ச் இன்ஜின் வருமானத்தில், 50% வருமானம் ஐ.ஓ.எஸ் டிவைஸ்கள் மூலமாகத்தான் வருகின்றன. எனவே, ஆப்பிள் நிறுவனம் விளம்பர வருமானத்தில் அதிகப் பங்கு கேட்கலாம். 

google apps

இப்படி சில சிக்கல்கள் இருந்தாலும், ஆண்டுதோறும் கூகுள் TAC-க்கு அதிகப்பணத்தை செலவிட்டுவருகிறது. இதற்கு காரணம், வேறு எந்த நிறுவனங்களும் கூகுளின் இடத்தைப் பிடித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். ஒருவேளை வேறு ஏதேனும் சர்ச் இன்ஜின் நிறுவனம், கூகுளை விடவும் அதிகமாக தயாரிப்பு நிறுவனங்களுக்கு பணம் செலுத்தினால், ஸ்மார்ட்போன்களில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இடம்பெறலாம்; அப்போது கூகுளின் வீச்சு குறைவதோடு, அதன் விளம்பர வருமானமும் பாதிக்கப்படும். எனவேதான் தொடர்ந்து இதில் அதிகப்பணத்தை செலவிட்டுவருகிறது கூகுள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்