வெளியிடப்பட்ட நேரம்: 07:16 (18/10/2017)

கடைசி தொடர்பு:07:16 (18/10/2017)

ஆதார் கார்டை மொபைலில் சேமிக்க அரசு தரும் அதிகாரபூர்வ ஆப்..! #mAadhaar

இன்றைய தேதியில் மொபைல் நிறுவனங்கள் முதல் அரசாங்கத்தின் பல சேவைகள் வரை எந்த வேலையாக இருந்தாலும் கேட்கக் கூடிய ஒரே ஒரு விஷயம் "ஆதார் ". ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறினாலும் நிலைமை அப்படி இல்லை. பெரும்பாலான இடங்களில் ஆதார் எண் தேவைப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஆதார் அட்டையை கையில் எடுத்துச் செல்வதை தவிர்ப்பதற்காக mAadhaar என்ற செயலியை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருந்தது UIDAI. 

இந்த ஆப் மூலம் ஆதார் அட்டையை கையில் எடுத்துச்செல்வதைத் தவிர்க்கலாம். தேவைப்படும் இடங்களில் இதைப்  பயன்படுத்தலாம். பெரும்பாலான இடங்களில் இது உபயோகமாக இருக்கும் என்றாலும், வெளியானபோது இது சரியாகச் செயல்படவில்லை என்று புகார் எழுந்தது. ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தபிறகு அனுப்பப்படும் OTP மெசேஜ் வரவில்லை என்பது பெரும்பாலானவர்களின் குற்றச்சாட்டு. அந்தக் குறை தற்பொழுது சரி செய்யப்பட்டிருக்கிறது. 


இந்த ஆப்பை எப்படிப் பயன்படுத்துவது:

இன்ஸ்டால் செய்தவுடன் இதைப் பயன்படுத்துவதற்காக தனியாக ஒரு பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு முறை இந்தச் செயலியைப் பயன்படுத்தும் போதும் அந்த பாஸ்வேர்டு தேவைப்படும்.

 mAadhaar செயலி ஆதார்


அடுத்ததாக ஆதார் எண்ணை டைப் செய்யலாம் அல்லது ஆதார் அட்டையில் இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்யலாம். இதன் மூலமாக எளிதாக ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய முடியும்.

 mAadhaar செயலி

 

அதன் பின்னர் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். OTP எண்ணை நேரடியாக உள்ளீடு செய்ய முடியாது. எனவே செயலி இருக்கும் மொபைலில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருப்பது அவசியம். OTP எண்களைச் செயலி தானாகவே எடுத்துக்கொள்ளும். பாதுகாப்பு வசதிகளுக்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.

 mAadhaar செயலி

 

அதன் பின்னர் திரையில் ஆதார் அட்டை தோன்றும். அதைத் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதுபோல அதிகபட்சம்  மூன்று நபர்களின் ஆதார் அட்டையை இதில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். 

 mAadhaar செயலி


 
eKYC தேவைப்படும் இடங்களில் இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும்.

ஆதார் அட்டையை QR கோடாக மாற்றி ஷேர் செய்ய முடியும்.

ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளம் மற்றும் அதற்கு மேல் இருக்கும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே தற்பொழுது இந்தச் செயலி செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே ஆப்பிள் மொபைல்களில் இதைப் பயன்படுத்த முடியாது. கூடிய விரைவில் ஐஒஎஸ் இயங்குதளத்திற்கும் அறிமுகப்படுத்தப்படலாம்.

பதிவு செய்யப்பட்ட ஒரு மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் ஒரு மொபைலில் மட்டுமே இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும். முதலில் ஒரு மொபைலில் mAadhaar ஐ பயன்படுத்தி விட்டு வேறொரு மொபைலில் ஆதார் அட்டையை டவுன்லோடு செய்தால் முதலில் இருப்பது தானாகவே செயலிழந்து விடும்.

மெசேஜ் மூலமாக அனுப்பப்படும் OTP எண்ணுக்கு மாற்றாக TOTP என்ற வசதி இதில் இருக்கிறது. ஒரே செயலியில் வேறு ஆதாரை சேர்ப்பதற்கு TOTP வசதியைப் பயன்படுத்தலாம்.

ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்பவர்கள் இந்த mAadhaar ஐ அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம் என்று இந்தியன் ரயில்வே கடந்த மாதம் அறிவித்தது. 

இதுபோல பல போலியான செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்துவதால் தகவல்கள் திருடப்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே சரியான செயலியைக் கண்டறிந்து டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். 

கூகுள் ப்ளே ஸ்டோரில் இதை டவுன்லோடு செய்வதற்கு:

 


 


டிரெண்டிங் @ விகடன்