வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (28/10/2017)

கடைசி தொடர்பு:09:54 (28/10/2017)

“ஆமாங்க... ஃபேஸ்புக் போர் அடிக்குது. ஏன்னா...?!” குபீர் காரணங்கள் #VikatanSurveyResults

ன்டர்நெட் சிட்டிசன்களுக்கு ஆசான் கூகுள் என்றால், நண்பன் ஃபேஸ்புக்தான். வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் என இன்று நெட்டிசன்களுக்கு ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஃபேஸ்புக்தான் நண்பர்களுடன் உரையாட ஆஸ்தான தூதுவர். இன்றைக்கு போட்டோஷேரிங்கிற்கென ஒரு ஆப், மெசேஜ் செய்வதற்கு ஒரு ஆப், வீடியோ சாட்டிற்கு ஒரு ஆப் என அத்தனைக்கும் தனித்தனி சேவைகள் உருவாகிவிட்டன. ஆனால், இன்னமும் கூட, பலபேருக்குப் புதிய நண்பர்களைக் கண்டறிய, நண்பர்களுடன் தினமும் உரையாட, குழுவாக இயங்க, புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ள, கருத்துகளை வெளிப்படுத்த என 'ஆல் இன் ஆல் சோஷியல் மீடியாவாக'  இருப்பது ஃபேஸ்புக்தான். ஃபேஸ்புக் டைம்லைனில் பிரவுஸ் செய்வதே பொழுதுபோக்காக இருந்தகாலம் போய், தற்போது போர் அடிக்கும் நிலையே வந்துவிட்டது. என்ன காரணம்?

Facebook

புதிய ஸ்டேட்டஸ் வசதிகள், மொபைலுக்கு என சூப்பர் ஸ்பெஷல் ஆப், இணைய வேகம் குறைவான மொபைலுக்கு ஃபேஸ்புக் லைட், நண்பர்களுடன் உரையாட லைவ் ஆப்ஷன், லைக் உடன் சேர்ந்த ரியாக்ஷன்கள் எனக் காலத்திற்கு ஏற்ப, தன்னை ட்ரெண்ட்டியாக வைத்துக்கொள்ள தொடர்ந்து முயன்றுவருகிறது ஃபேஸ்புக். ஆனாலும்கூட, முன்னர் இருந்ததைப்போல சுவாரஸ்யமாக இருப்பதில்லை. இதற்கு பல்வேறு காரணங்களைக் கூறமுடியும்.

முதலாவது, ஃபேஸ்புக் விளம்பரங்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை, நம்முடைய நண்பர்களின், உறவினர்களின் பதிவுகள் அதிகமாகவும், மற்ற செய்திகள் குறைவாகவும் இருக்கும். ஆனால், தற்போது நம்முடைய நண்பர்களின் பதிவுகளை விடவும். விளம்பரங்களே அதிகம் நம் டைம்லைனை ஆக்கிரமித்திருக்கின்றன. 2G இன்டர்நெட் காலத்தில் ஸ்டேட்டஸ் ட்ரெண்ட் என்றால், 4G யுகத்திற்கு வீடியோக்கள்.  இந்த வீடியோக்களை ஃபேஸ்புக்கும் ஊக்குவிக்கவே, தற்போது பதிவுகள், விளம்பரங்கள், செய்திகள் என நிறைய வீடியோக்கள் தாறுமாறாக டைம்லைனில் வந்து குவிந்துகிடக்கின்றன. இதில் தேவையற்ற செய்திகள், விளம்பரங்கள் அதிகளவில் வருவதுதான் முதல் சிக்கல்.

அடுத்தது, நியூஸ்ஃபீட் அல்காரிதம். நம்முடைய டைம்லைனை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைப்பதற்காகப் பல்வேறு அல்காரிதம்களைப் பயன்படுத்துகிறது ஃபேஸ்புக். ஆனால், இது எல்லோருக்கும் சரியாக இருப்பதில்லை. முதலில் நாம் எதுவும் செய்யாமலே, நமக்குப் பிடித்த விஷயங்களைக் காட்டிக்கொண்டிருந்த ஃபேஸ்புக் இன்று நம்முடைய டைம்லைனை நம்மையே முடிவு செய்யச்சொல்கிறது.

மேலும், தற்போது ட்விட்டர், இன்ஸ்டா என நிறைய சமூகவலைதளங்கள் கலக்கத்தொடங்கிவிட்டதால், ஃபேஸ்புக்கின் மீதான ஈர்ப்பும் குறைந்துவிட்டது. இதனால் பலரும் "ஃபேஸ்புக் போர் அடிக்கிறது" என ஸ்டேட்டஸ் தட்டத் தொடங்கிவிட்டனர். இதையொட்டி நம் விகடன் வாசகர்களிடம் "ஃபேஸ்புக் ஏன் போர் அடிக்கிறது?" என சர்வே எடுத்திருந்தோம். வாசகர்களின் பளிச் பதில்கள் இதோ...

ஃபேஸ்புக் சர்வே முடிவுகள்

"ஃபேஸ்புக் போர் அடிக்கிறதா?" என்ற கேள்விக்கு 78% பேர் ஆம் எனப் பதில் அளித்துள்ளனர். "என்ன காரணம்?" என்பதற்கு 50 %-க்கும் மேலானோர் ஃபேக் நியூஸ் மற்றும் நம்பகமற்ற செய்திகள் அதிகம் வருவதுதான் காரணம் எனக் கூறியுள்ளனர். கூகுள், ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என எல்லாப் பக்கமும் ஃபேக் நியூஸ் பிரச்னை இருந்தாலும், ஃபேஸ்புக்கில் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதனை அறவே வெறுக்கின்றனர் பயனாளர்கள்.

ஃபேஸ்புக்கில் பலரும் பயன்படுத்தும் ஒரு விஷயம் நியூஸ்ஃபீட். இதற்கடுத்து மெசெஞ்சர். ஆனால் இவற்றைத் தாண்டியும் ஃபேஸ்புக்கில் உலாவ நிறைய இடங்கள் இருக்கின்றன. டைம்லைனின் இடதுபுறத்தில் இருக்கும் Explore பகுதியில் On this Day தொடங்கி Recommendations வரை பல்வேறு வசதிகள் இருக்கின்றன. இவற்றை அதிக முக்கியத்துவம் இல்லாத பகுதிகள் என நாம் நினைப்போம். ஆனால் பல நிறுவனங்களுக்குக் கிலியை உண்டாக்கியிருக்கிறது இதில் இருக்கும் Explore Feed. காரணம் இதுதான்.

இலங்கை, செர்பியா, பொலிவியா உள்பட 6 நாடுகளில் நியூஸ்ஃபீட் அல்காரிதமை மாற்றியிருக்கிறது ஃபேஸ்புக். இதன்படி, பயனாளர்களின் டைம்லைனில், ஃபேஸ்புக் பக்கங்களிலிருந்து (FB Pages) பதிவிடும் செய்திகள் தெரியாது. அவை தனியாக Explore Feed-ல் மட்டுமே தெரியும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பதிவுகள் மட்டுமே பயனாளர்களின் சாதாரண நியூஸ்ஃபீடில் தெரியும். அதே சமயம் பணம் கட்டி விளம்பரம் செய்தால், பயனாளர்களின் டைம்லைனில் தெரியும்.

லைக்ஸ்

தற்போது சோதனை ஓட்டமாக மட்டுமே இது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த மாற்றத்தால் அந்நாட்டில் இருக்கும் பல ஃபேஸ்புக் பக்கங்களின் வீச்சு வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் தளத்தின் டிராஃபிக்கும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல  நிறுவனங்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கம் மூலமாகவே, தங்கள் தளத்திற்கு வாசகர்களை ஈர்த்துவருகின்றன. ஆனால் இப்படி ஃபேஸ்புக் அல்காரிதம் மாறியதால், இனி அவை பணம் கொடுத்து மட்டுமே விளம்பரம் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்படும். இதனால் பெரிய  நிறுவனங்களுக்கு அதிகளவில் பாதிப்புகள் இருக்காது. ஆனால், ஃபேஸ்புக் மூலமாகவே, தங்கள் நிறுவனத்தை வளர்த்துவரும் சின்னச் சின்ன நிறுவனங்களுக்குப் பெரியளவில் பாதிப்புகள் இருக்கும். இதுநாள் வரை, இலவசமாக மட்டுமே ஃபேஸ்புக்கைப் பயன்படுத்திய நிறுவனங்கள், பணம் செலுத்தவேண்டிய நிர்பந்தமும் உண்டாகும். இது சரியான அணுகுமுறை இல்லை எனப் பல்வேறு இணைய ஊடகவியாளர்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் "வணிகம் என வரும்போது, இலவசமான சேவைகளை நம்பி மட்டுமே பிசினஸ் மாடலை அமைக்கக் கூடாது. அப்படிச் செய்தால், இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்" என்கின்றனர் இணைய ஆர்வலர்கள். இந்நிலையில், "இந்த வசதி தற்போது ஆறு நாடுகளில் மட்டுமே சோதனை செய்யப்படுகிறது. மற்ற நாடுகளுக்கு விரிவுபடுத்தும் எண்ணம் எதுவுமில்லை" எனக் கூறியிருக்கிறார் ஃபேஸ்புக் நிர்வாகி ஒருவர்.

இப்படி, நாம் லைக் செய்த பக்கங்களில் இருந்தே, நம் டைம்லைனுக்குச் செய்திகள் வராமல் போவது, அதற்காகத் தனிப் பகுதிக்குச் சென்றுபார்க்க வைப்பது போன்றவை எல்லாம் மேலும் மேலும் பயனாளர்களைச் சலிப்பூட்டும் விஷயங்களே. எனவே, வேறுமாதிரியான மாற்றங்களை ஃபேஸ்புக் கொண்டுவர வேண்டும். மார்க்கிற்கு ஃபேஸ்புக் யூசர்ஸ் அனுப்ப விரும்பும் மெசேஜ் இதுதான். 

"வரணும்...பழைய ஃபேஸ்புக்கா வரணும்"

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்