ஒரே நொடியில் 1 ஜி.பி டவுன்லோடு... இதோ உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்!

5ஜி ஸ்மார்ட்போன்

2ஜி க்களின் காலம் கூடிய விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. அதை உணர்த்தும் வகையில் 4ஜி ஸ்மார்ட்போன்கள்தான் சந்தையை ஆக்ரமித்திருக்கின்றன. பெரும்பாலான நாடுகளில் 2ஜி சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இந்தியாவிலும் ரிலையன்ஸ் நிறுவனம் இனிமேல் 2ஜி சேவையை முற்றிலும் நிறுத்திவிட்டு 4ஜி சேவையை மட்டும் வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் 3ஜி சேவையையே நிறுத்தப்படலாம் என ஏர்டெல் அறிவித்திருக்கிறது. தொழில்நுட்ப உலகில் நெட்வொர்க்கின் வேகம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

வெளிநாடுகளில் 4ஜி நெட்வொர்க் என்பது பல வருடங்களுக்கு முன்பே பயன்பாட்டில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 5ஜி நெட்வொர்க்கை உருவாக்குவதற்காகப் பல நாடுகளில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. 5ஜி நெட்வொர்க்கை வெற்றிகரமாகப் பரிசோதித்து விட்டோம் என்ற செய்தியும் அவ்வப்போது வெளியாகும். என்னதான் 5ஜியாக இருந்தாலும் அதைப் பயன்படுத்துவதற்கு ஒரு மோடமோ அல்லது ஸ்மார்ட்போனோ தேவைப்படுமே. அதை உருவாக்கியிருக்கிறது குவால்காம் நிறுவனம்.

ஸ்மார்ட்போன் புராசஸர்கள் தயாரிப்பதில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் குவால்காம். செயல்திறன் அதிகம் என்பதால் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்ட்ராகன்  புராசஸர்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படும். ஸ்மார்ட்போன் உலகின் முன்னோடியாகக் கருதப்படும் ஆப்பிள் கூட தனது புராசஸர்களில் குவால்காமின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வகையில் X50 என்ற 5ஜி மோடத்தை ஏற்கெனவே அறிமுகப்படுத்தியிருந்தது. அதற்கு அடுத்தபடியாக அதைப் பயன்படுத்தி உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கியிருக்கிறது.

எப்படி இருக்கும் உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்.

ஸ்மார்ட்போன்

குவால்காம் நிறுவனம் இதற்கு முன்பு தனியாக ஸ்மார்ட்போன்களைத் தயாரித்தது கிடையாது. இப்போதுதான் முதல் முறையாக ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்கியிருக்கிறது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் சில நாள்கள் முன்பு வெளியானது. அதிகாரபூர்வமாக இந்த மொபைலைப் பற்றி குவால்காம் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தற்பொழுது வெளியாகியுள்ள படங்களில் மூலமாக இந்த ஸ்மார்ட்போன் இரண்டு கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.மொபைலின் முன்புறமாக கைரேகை சென்சார் இருக்கிறது. வடிவமைப்பைப் பொறுத்தவரையில் புதிதாக எதுவும் தெரியவில்லை. தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் போலவே தோற்றமளிக்கிறது. இந்தப் படங்களை குவால்காம் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் வெளியிட்டுள்ளார். இவர் ஏற்கெனவே இன்டெல் நிறுவனத்தின் 5ஜி மோடத்தையும் குவால்காமின் 5ஜி மோடத்தையும் ஒப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

 

5ஜி ஸ்மார்ட்போன்


இந்த மொபைலில் 5ஜி மோடத்தை உள்ளடக்கிய உயர்திறன் கொண்ட புதிய புராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த மொபைல் 5ஜி நெட்வொர்க்கில் இயங்கினாலும் அதோடு சேர்த்து 2ஜி நெட்வொர்க்கிலும் இயங்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக குவால்காம் வெளியிட்டிருக்கும் வீடியோவில் 5ஜி மோடத்தின் செயல்திறன் பரிசோதிக்கப்படுகிறது. முதல் இணைப்பிலேயே 1.24 Gbps அளவிற்கு எகிறி அடிக்கிறது இதன் வேகம்.

 

வீடியோவில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் ஒன்று இருக்கிறது இந்த வீடியோவில் தென்படும் பெரும்பாலான முகங்கள் இந்தியர்களாகவே இருக்கின்றன. எனவே, உலகின் முதல் 5ஜி மோடத்தில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுதே தயாரிக்கப்பட்டுவிட்டாலும் வெளியாகப் போவது 2019 ஆண்டில்தான். அதற்குள் வேறு யாராவது 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!