2 புதிய ஸ்மார்ட்போன்கள்... சொன்ன வாக்கைக் காப்பாற்றியிருக்கிறதா ஜியோமி? #RedmiY1

ரெட்மி Y1

இந்தியாவில் நவம்பர் 2 ம் தேதி தனது புத்தம் புதிய ஸ்மார்ட்போன் சீரீஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த மாதம் அறிவித்திருந்தது ஜியோமி. அதேபோல ஜியோமியின் கஸ்டமைஸ்டு இயங்குதளம் MIUI ன் அடுத்த வெர்ஷனான MIUI 9 ம் இந்தியாவில் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தது. சொன்னது போலவே Redmi Y1 என்ற பெயரில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ரெட்மி Y1 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அது ஒரு புதிய சீரிஸ் எனவும் அது செல்ஃபியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாகவும் ஜியோமி கூறியது. புத்தம் புதிய ஸ்மார்ட்போன் என்றதும் அது பற்றிய எதிர்பார்ப்பு சீனா வரைக்கும் இருந்தது. ஆனால், ஜியோமி சொன்ன வாக்கைக் காப்பற்றியிருக்கிறதா என்று பார்த்தால் அதுதான் இல்லை. வழக்கம் போலவே சீனாவில் வெளியாகியிருந்த ரெட்மி நோட் 5A  Prime என்ற போனின் பெயரை மாற்றிவிட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஜியோமிக்கு இது ஒன்றும் புதிதான விஷயமில்லை ஏற்கெனவே Xiaomi Mi 5X என்ற மொபைலை இயங்குதளத்தை மட்டும் மாற்றிவிட்டு Xiaomi Mi A1என்ற பெயரில் இங்கே விற்பனை செய்கிறது.

பெயர் விஷயத்தில் ஏமாற்றினாலும் மொபைலின் வசதிகளில் ஏமாற்றவில்லை ஜியோமி. பத்தாயிரம் ரூபாய்க்குக் கீழே விலை வைக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களைப் பற்றி பார்ப்போம். 

ரெட்மி Y1 வசதிகள்

  • 5.5 இன்ச் IPS LCD 720 x 1280 திரை
  • 1.4 GHz குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 435 ஆக்டாகோர் ப்ராசஸர்
  • 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி
  • 13 மெகாபிக்சல் பின்புற கேமரா
  • 16 மெகாபிக்சல் முன்புற கேமரா
  • 3080mAh பேட்டரி
  • ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம்

ரெட்மி Y1

ரெட்மி Y1 செல்ஃபியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதால் பின்புற கேமராவை விட முன்புற கேமராவின் பிக்சல் அதிகமாக இருக்கிறது. இதிலிருக்கும் 16 மெகாபிக்சல் முன்புற கேமராவிற்குத் தனியாக ஃபிளாஷ் இருக்கிறது. இதன் மூலமாக குறைந்த அளவு வெளிச்சம் இருக்கும் இடத்தில் கூட சிறப்பான படங்களை எடுக்க முடியும். முந்தைய மாடல்களை விட பேட்டரி அளவைச் சற்று குறைத்திருக்கிறது ஜியோமி. 3080mAh திறன் கொண்ட பேட்டரிதான் என்றாலும் இதன் ஸ்டான்ட்பை காலம் 11 நாள்கள் என்கிறது.

ரெட்மி Y1 ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் இதன் சிம் ஸ்லாட். இதிலிருக்கும் 2 + 1 ஹைபிரிட் சிம் ஸ்லாட் மூலமாக ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டை பயன்படுத்த முடியும். இந்த வசதியோடு இந்தியாவில் வெளியாகும் ஜியோமியின் முதல் ஸ்மார்ட்போன் இது. இதன் பின்புற கவர் பார்ப்பதற்கு மெட்டல் போன்று தோற்றமளித்தாலும் பிளாஸ்டிக்கால் ஆனது. 3 ஜிபி ரேம் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வேரியன்ட் 8,999 ரூபாயாகவும், 4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி வேரியன்ட் 10,999 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி Y1 ஸ்மார்ட்போன்

மற்றொரு மாடலான ரெட்மி Y1 Lite ஸ்மார்ட்போனும் 5.5 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. 13 மெகாபிக்சல் பின்புற கேமரா 5 மெகாபிக்சல் முன்புற கேமரா, ஸ்னாப்ட்ராகன் 425 குவாட்கோர் ப்ராசஸர் போன்றவை இதிலுள்ள வசதிகள். விலை குறைவு என்பதால் இதில் கைரேகை சென்சார் கிடையாது. 2 ஜிபி ரேம் 16 ஜிபி இன்டர்னல் மெமரியைக் கொண்டுள்ள இதன் விலை 6,999 ரூபாய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!