பாதுகாப்பு... மினிமம் டேட்டா... கமலின் மையம் செயலி எப்படியிருக்கலாம்? #MaiamWhistle

உலகநாயகன், டாக்டர், பத்மஸ்ரீ, கலைஞானி போன்ற பல பட்டங்கள் பெற்ற கமல்ஹாசன் தற்போது அரசியல் களம் காண ஆயத்தமாகி வருகிறார். தன் முதல் ஆயுதமாக விரைவில் ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று தன் பிறந்தநாளான நவம்பர் 7 அன்று தெரிவித்துள்ளார். செயலியின் பெயர் ‘மய்யம் விசில்’ என்பதுடன் #KH #ThediTheerpomVaa #MaiamWhistle #VirtuousCycles போன்ற ஹேஷ்டேகுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. தன்னுடைய ரசிகர்கள் முதல் சாமானிய மக்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த ஆப்பை பயன்படுத்தலாம் என்றும், இதன்மூலம் தன்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார் கமல். ஜனவரி மாதம் வெளியாகும் இதை, 20 முதல் 22 பேர் வரை கொண்ட அணி தற்போது வடிவமைத்து வருகிறது. கமலின் அரசியல் பிரவேசம் குறித்தும், தொடங்கப்போகும் கட்சிகுறித்தும் பெரிதாக தெரியாத நிலையில், இந்தச் செயலி குறித்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கமல் MaiamWhistle

சாமானிய மக்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதில் என்னென்ன வசதிகள் இருக்கும் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்து கொண்டிருக்கின்றனர். செயலி அறிவிப்பு நிகழ்வின்போதே இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்ட போதும், தன்னால் தற்போது எதுவும் கூற இயலாது என்று ரகசியம் காத்தார் கமல். இது ஒரு ‘Whistleblower’ ஆப் என்றும், தன்னிடம் மக்கள் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் என்றும் சுருக்கமாக முடித்துக்கொண்டார். இதை எல்லாம் வைத்து அந்த ஆப்பில் என்னவெல்லாம் இருக்கும் என்று யூகிப்பது கடினம் என்றாலும், இதெல்லாம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒரு சில விஷயங்களை இங்கே அடுக்கியுள்ளோம்.

அது என்ன ‘Whistleblowing’?

பலருக்கு இதன் அர்த்தம் தெரியும் என்றாலும், புரிதலுக்காக ஒரு சிறிய விளக்கம். ஒரு நிறுவனத்தில் இருக்கும் குறைகள், நடக்கும் தவறுகள், ஏற்படும் பிழைகளை தயக்கம் இன்றி வெளிஉலகுக்கு தெரியப்படுத்துபவர்களை ஆங்கிலத்தில் ‘Whistleblower’ என்று அழைக்கிறார்கள். உதாரணமாக, அரசாங்க அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், தன் அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்களில் சிலர் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று ஆதாரத்துடன் வெளியே வந்து மக்களுக்கோ அல்லது மேலதிகாரிகளுக்கோ தெரியப்படுத்தினால், அவர் ஒரு ‘Whistleblower’. இந்தியாவைப் பொறுத்தவரை, இப்படி வெளியே வருபவர்களுக்கு ஆபத்து நிகழாமல் பாதுகாக்க, தனிப் பாதுகாப்பு சட்டமே இருக்கின்றது. இப்படி வெளிச்சத்துக்கு வரும் தவறுகள் பெரும்பாலும் சர்ச்சையை ஏற்படுத்துபவை, வரலாற்றை மாற்றுபவை. இந்தக் கோட்பாட்டை கமல் தன் செயலிக்குப் பெயராய் வைத்ததன் மூலம், இது போன்ற தவறுகளை மக்கள் தன் ஆப்பின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிகிறது.

அடிப்படை கோரிக்கைகள் என்னென்ன?

கமல் ஆப் மய்யம் விசில் MaiamWhistle

தளம்: ஆண்ட்ராய்டு, iOS போன்ற தளங்களில் தங்கு தடையின்றி இந்த ஆப் இயங்க வேண்டும். பெரும்பாலானோர் இந்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பதால், இரண்டுக்கும் இந்த ‘மய்யம் விசில்’ ஆப் வடிவமைக்கப்பட வேண்டும்.

குறைவான டேட்டா: தமிழகத்தைப் பொறுத்தவரை, என்னதான் ஜியோ ஆளுமை செலுத்தினாலும், பெருநகரங்கள் தவிர பல்வேறு கிராமங்களில் இன்னமும் 3ஜி சேவை கூட சரிவர இயங்குவதில்லை. எனவே, ‘மய்யம் விசில்’ குறைவான 2ஜி வேகத்தில் கூட சீராக இயங்க வேண்டும். குறைவான டேட்டாவை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல், பிளேஸ்டோரிலும் குறைவான MB அளவில் கிடைக்கப்பெற வேண்டும்.

மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளிலும் இதைப் பயன்படுத்தும் வசதி வேண்டும். ஒருவேளை இந்த ஆப்பில் மக்கள் எதுவும் குறைகளை பதிவிட வேண்டுமென்றால், எல்லோரும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருப்பார்கள் என்று கூறிவிட முடியாது. எனவே, தமிழ் அத்தியாவசியமாகிறது.

மென்பொருள் வடிவமைப்பு: ஆப்பின் கட்டமைப்பு, அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இருத்தல் வேண்டும். எளிதான வழிமுறைகள் மிகவும் முக்கியமானது. இது ஆப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். அதேபோல், பேட்டரியை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சில ஆப்கள் போல பேட்டரியை உறிஞ்சித் தீர்க்க கூடாது.

பிரைவசி: மற்ற ஆப்கள் போல், இது பயனீட்டாளர்களின் பிரைவசியை காவு வாங்கக் கூடாது. பயன்படுத்துவோர் பதியும் தனிப்பட்ட தகவல்கள், உதாரணமாக இ-மெயில் ஐடி, மொபைல் எண், புகைப்படம் போன்றவை, அவர்களின் விருப்பத்தின் பேரில் தான் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

என்னென்ன வசதிகள் வேண்டும்?

முதலில் நாம் இருக்கும் இடத்தைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பது போல, நம்மைச் சுற்றி நடக்கும் தவறுகளை இனங்கண்டு அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே இந்த ‘மய்யம் விசில்’ ஆப்பின் முனைப்பாய் இருக்கலாம். மக்கள், கமல்ஹாசன் உடன் நேரடியான தொடர்பில் இருக்க இது பயன்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காகத் தான் இந்த ஆப் என்னும்போது, இதில் பின்வரும் வசதிகள் இருந்தால் நிச்சயம் மிகுந்த வரவேற்பை பெரும்.

கமல்ஹாசன்மூன்று வகையில் பதியும் வசதி: குறைகளை மக்கள் மூன்று வகையில் பதிய வசதி இருந்தால் நிச்சயம் நிறையப் பதிவுகள் வரும். மக்களின் விருப்பத்துக்கு அல்லது இருக்கும் நிலைமைக்கு ஏற்ப எழுத்துக்களாகவோ, ஆடியோ அல்லது வீடியோவாகவோ பதிய வசதி இருந்தால் நலம்.

பெயரில்லா பதிவுகள்: ஒரு சில இடங்களில் மக்களால் வெளிப்படையாகக் குற்றம் சாட்ட முடியாமல் போகலாம். அப்போது தங்கள் பெயர்கள் மற்றும் பிற விபரங்களை மறைத்து குறைகளை பதிய நிச்சயம் வசதி வேண்டும். இது மிகவும் மோசமான குற்றங்களை வெளியே வர வழி செய்யும்.

பதிவின் நிலை: ஒரு பதிவு செய்தபின், அதன் தற்போதைய நிலை என்ன என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வசதி வேண்டும். உதாரணமாக, கமல்ஹாசனிடம் ஒரு குறை வைக்கப்படுகிறது என்னும்போது அதை அவர் படித்துவிட்டாரா என்பதைப் பதிந்தவர் நிச்சயம் தெரிந்துகொள்ள வசதி வேண்டும். அப்போதுதான் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயலாம்.

சமூக வலைத்தளம்: இந்த ஆப் ஒரு சமூக வலைத்தளம் போல செயல்பட்டால் இன்னமும் நலம். அதாவது, ஒவ்வொருவருக்கும் ஒரு ப்ரொபைல் கொடுக்கப்பட்டு, அவர் இதுவரை பதிந்த அனைத்தையும் அதன் கீழ் காட்ட வேண்டும். மற்ற ப்ரொபைல்களை பார்க்கும் வசதி வேண்டும். அவர்கள் பதியும் விஷயங்கள் அனைவருக்கும் புலப்பட வேண்டும். இதன் மூலம், நடக்கும் குற்றங்கள் அனைவருக்கும் எளிதில் தெரியவரும். கமல் போன்ற ஆளுமைகள் ஒவ்வொரு ப்ரொபைல்களாக இதில் இணைக்கப்பட்டு, அவர்களைத் தொடர்புகொள்ளும் வசதிகளைக்கூட ஏற்படுத்தலாம். முடிந்தால், இதில் பதியப்படும் தகவல்களை, அதாவது மக்களின் குறைகளை ஊடகங்கங்களுக்கு இலவசமாக வழங்கினால், பல்வேறு குற்றங்கள் உடனடியாக அம்பலப்படுத்தப்படும்.

ஒரு குறைதீர்க்கும் தளமாக மட்டுமே இந்த ஆப் இருக்கும் என்ற எண்ணத்தில் மேற்கூறிய விஷயங்கள் அனைத்தும் கூறப்பட்டுள்ளன. அதுவும் கமல் சொன்ன ‘Whistleblowing’ வார்த்தையை வைத்துத் தான். இப்படி ஒரு ஆப் உருவாகி, இதில் பதியப்படும் விஷயங்கள் அனைவரின் கவனங்களையும் பெற்று, முக்கியமாகச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்தை பெறுமாயின், மாபெரும் சமுதாய மாற்றத்தை இதன்மூலம் நிச்சயம் ஏற்படுத்த முடியும். இதுவே நிஜ டிஜிட்டல் இந்தியாவாக இருக்கும். டிஜிட்டல் இந்தியா என்றவுடன் நினைவுக்கு வருகிறது. இதிலும் ஆதார் கார்டு இணைக்க சொல்லிடாதீங்க பாஸ்!

கமல் வெளியிடப்போகும் ‘Maiam Whistle’ ஆப்பில் என்னென்ன வசதிகள் வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? கமெண்ட்டில் சொல்லுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!