ஸ்மார்ட்போன் உமிழும் ஒளி... தடுமாறும் உடலும் மூளையும்!

ஸ்மார்ட்போன்

இந்தக் காலத்தில தலைவலிக்குது என அம்மாவிடம் சொன்னால் “அப்பவே சொன்னேன் மொபைல் நைட்ல யூஸ் பண்ணாதனு... கேட்டியா? அதான் தலைவலி வந்திருச்சு” என்பதே பெரும்பாலான அம்மாக்களின் குமுறலாக இருக்கும். அவர்கள் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான்.  ஸ்மார்ட்போன் இல்லையென்றால் அன்றைய நாள் ஒரு யுகம் போன்று நகர்வதாகவே உணர்கின்றனர் இன்றைய இளசுகள். உணவில்லாமல் வாழ்ந்து விடுவார்கள்;  ஆனால் இந்த செல்போன் இல்லாமல் வாழ்வது என்பது கொடுமையே என்ற அளவுக்கு செல்போன் மனிதனின் அன்றாட வாழ்க்கையோடு இயைந்து விட்டது. தற்பொழுது செல்போனை பகல் நேரங்களை விட இரவு தூங்கப் போகும் முன் பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. பலவிதமான அழுத்தங்களை அன்றைய நாள் முழுவதும் சந்தித்து விட்டு இரவு தூங்கப் போகும்போது படுக்கையில் அந்த மொபைலை அரை மணி நேரமாவது பார்த்து விட்டு உறங்கினால் தான் மனதிற்கு சந்தோஷம் என்ற நிலை உண்டாகி விட்டது.

இரவு நேரங்களில்  ஸ்மார்ட்போன் உபயோகிப்பது மனதிற்கு சந்தோஷம் தந்தாலும் மூளையைப் பாதித்து விடும் அபாயம் உள்ளது. செல்போன், டேப்லெட் முதலியவற்றின் திரை(screen) ஊதா நிற ஒளிகற்றையை உமிழ்கிறது. இந்த நிறக்கற்றை கண்ணுக்கும் மூளைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிரகாசமான ஒளியை உமிழ்வதன் காரணத்தால் பகல் நேரங்களில் சூரிய வெளிச்சத்தில் கூட செல்போனை நம்மால் பயன்படுத்த முடியும். செல்போனின் ஸ்கிரீன் ஆனது சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் எட்டிப்பார்க்க வழிதரும் சின்ன ஜன்னலுக்கு ஈடாக கருதப்படுகிறது. காலையில் சூரியன் வீட்டிற்குள் எட்டிப்பார்ப்பது போன்று இரவில் செல்போனின் ஸ்கிரீன் வெளிச்சம் வீட்டிற்குள் எட்டிபார்க்கிறது.

மனித உடலானது குறிப்பிட்ட சுழற்சியின் கீழ் வேலை செய்கிறது. பகல் பொழுதில் விழித்துக் கொள்வது இரவு நேரங்களில் தானியங்கியாக தூங்கச் செல்வது போன்றவை மனிதனின் இயல்பு. ஆனால் இரவுகளில் தூங்கப் போவதற்கு முன்பு சூரியஒளி போன்ற ஒளிக்கற்றையை பார்ப்பதனால் மனிதனின் மூளை குழப்பமடைந்து விடுகிறது. இதனால் மூளை உற்பத்தி செய்யும் மெலோட்டனின் சுரப்பியை உற்பத்தி செய்வது  தடைப்பட்டு விடுகிறது. இந்த மெலோட்டனின் சுரப்பி மனிதனின் தூக்கத்தை முறைப்படுத்தும் ஒரு சுரப்பி. இச்சுரப்பியின் உற்பத்தி தடைப்பட்டு விடுவதால் மனிதனின் தூக்கத்தில் குளறுபடி ஏற்பட்டுவிடுகிறது. இதனால் படுக்கைக்கு சென்று பலமணி நேரத்திற்கு பின்பும் கூட தூக்கம் வராமல் தவிக்கின்றனர். ஆழ்ந்த உறக்கமும் கிடைப்பதில்லை. பலவிதமான உடல்நல குறைபாடுகள் உண்டாவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

மொபைல்

இதனைத் தவிர்ப்பதற்காக night shift mode போன்ற வசதி சில ஸ்மார்ட்போன்களில் உள்ளது. இந்தச் செயலிகள் பயன்பாட்டின் மூலம் செல்போன் உமிழும் அதிகபட்ச ஒளியைக் குறைக்க முடியும். ஊதா நிற ஒளிகற்றையை தவிர்த்து ஆரஞ்சு நிற ஒளியை உமிழ்வதன்  மூலம் ஏற்படும் விளைவை ஓரளவு குறைக்கலாம். மேலும் குறைவான அளவிற்கு மொபைல் ஸ்கிரீன் ஒளியைக் குறைத்து உபயோகிப்பதன் மூலம் படுத்தவுடன் தூங்குவதற்கான சூழலை ஏற்படுத்த முடியும் என ஆய்வு கூறுகிறது.

செல்லின் பலவிதமான பயன்பாடுகள் நம் உடல்நலனை கெடுக்கின்றன. நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் இரவில் மொபைல் உபயோகிப்பதை முற்றிலும் குறைத்து கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் மெயில் மற்றும் வாட்ஸ் ஆப்பின் நோட்ஃபிகேஷன் ஒளியை ஆஃப் செய்வதே சிறந்தது.

பலவிதமான மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தவிர்க்க, படுத்தவுடன் உறக்கம் கிடைக்க முடிந்தளவு செல்லை படுக்கையை விட்டு தூரத்தில் வைத்து விட்டு தூங்கச் செல்வது நல்லது.

தூக்கம் கலைக்க பல ஆப் உண்டு. நன்றாக தூங்க உதவும் ஆப் எதுவுமில்லை. அது நம் கையில் தான் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!