3 மாதத்தில் 91 லட்சம் மொபைல்கள்... முதலிடத்தில் சாம்சங் மற்றும் ஷியோமி!

மொபைல்

”இந்தியா ஏழை நாடுதான். ஆனா மார்க்கெட் பெருசு” - பூலோகம் திரைப்படத்தில் வரும் வசனம் இது. நிச்சயம் இது உண்மைதான். அதனால்தான் மற்ற பணக்கார நாடுகளை விட இந்தியாவில் தங்களது பொருள்களை விற்க கார்ப்பரேட்கள் கடும்போட்டியில் இறங்குகின்றன. மொபைல் நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மொபைல் அறிமுகமான காலம் முதல் நோக்கியாதான் இந்தியச் சந்தையின் இணையில்லா சூப்பர் ஸ்டார். ஆனால், மொபைல் என்பது ஸ்மார்ட்போன் என்றானபின் நோக்கியாவின் வளர்ச்சி குறைந்தது. சாம்சங் அந்தக் கிரீடத்தை எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டது. இதோ, இந்தியாவின் மொபைல் சந்தைக்கு மூன்றாம் தலைமுறை வந்துவிட்டது. சாம்சங்கின் கிரீடத்தில் “எனக்கும் கொஞ்சம் கொடு” எனப் பங்கு கேட்கிறது சீனாவை ஷியோமி(Xiaomi) நிறுவனம்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காலாண்டு விற்பனை கணக்குகள் வெளியாகும். எப்போதும் மூன்றாம் காலாண்டில்தான் பெரிய விற்பனையும் இருக்கும்; மாற்றங்களும் நிகழும். தீபாவளி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் ஆன்லைன் சேல்கள் அதற்கு முக்கியக் காரணம். 2017ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு ரிப்போர்ட் இப்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, சாம்சங்கும், ஷியோமியும் தலா 23.5% மார்க்கெட் ஷேரை வைத்திருக்கிறார்கள். இந்தக் காலாண்டில் மட்டும் ஷியோமி நிறுவனம் 92 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்றிருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் விற்கப்படும் மொபைல் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட எத்தனை மடங்கு அதிகரிக்கிறது என்பதுதான் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கான அடையாளம். அந்த வகையில் “வேகமாக வளரும் நிறுவனம்” என்ற பெயரைப் பெற்றிருக்கிறது ஷியோமி. 2016ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டோடு ஒப்பிட்டால் 2017-ம் ஆண்டில் 300 சதவிகித வளர்ச்சியை அடைந்திருக்கிறது ஷியோமி.
சாம்சங் இதே காலகட்டத்தில் 23 சதவிகித வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டால் 2017ல் அதன் வளர்ச்சி 39 சதவிகிதம்தான். Galaxy J2, Galaxy J7 Nxt, and GalaxyJ7 Max ஆகிய மாடல்கள்தான் சாம்சங்கின் ஹிட் மாடல்கள்.

ஷியோமியைப் பொறுத்தவரை அதன் மேன் ஆஃப் த மேட்ச் ரெட்மி நோட் 4 தான். இந்தக் காலாண்டில் விற்ற 91 லட்சம் ஷியோமி மொபைல்களில் 40 லட்சம் ரெட்மி நோட் 4 தான்.

“இந்தியச் சந்தைக்குள் நாங்கள் வந்து 3 ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்குள்ளாக முதலிடம் வர முடிந்தது நிச்சயம் பெரிய சாதனைதான்” என மகிழ்ச்சியாகச் சொல்லியிருக்கிறார் ஷியோமியின் இந்தியத் துணைத்தலைவர் மனு ஜெயின்.

மொபைல் கடைகள்

ஷியோமியின் மொபைல்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டவை. ஆனால், சாம்சங் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்கள் என இரண்டிலும் பலம் கொண்டது. ஷியோமியும் இப்போது ரீடெயில் கடைகள் மூலம் மொபைல்கள் விற்கத் தொடங்கியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக, சிற்றூர்கள் வரை ஷியோமி தன் கிளையைப் பரப்பினால், சாம்சங்கை மட்டுமல்ல; மற்ற அனைத்து மொபைல் பிராண்டுகளையும் எளிதில் பின்னுக்குத் தள்ளிவிடலாம்.

சாம்சங்கைப் பொறுத்தவரை அதன் மீது இன்னமும் வாடிக்கையாளர்கள் அபார நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். விலை என்னும் ஒரு விஷயத்தில் மட்டும்தான் ரெட்மி மொபைல்கள் சாம்சங்கை முந்துகின்றன. அந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு புது மொபைல்களை அறிமுகம் செய்தால், சாம்சங் நிச்சயம் ஷியோமிக்கும் மற்ற சீன மொபைல் நிறுவனங்களுக்கும் சவாலாக இருக்கும்.

 

 

 

.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!