வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (16/11/2017)

கடைசி தொடர்பு:09:40 (16/11/2017)

ஃப்ளிப்கார்ட்ல மொபைல் வாங்கியிருப்பீங்க... இனி ஃப்ளிப்கார்ட்டின் மொபைலை வாங்கலாம்! #CapturePlus

ஃப்ளிப்கார்ட்

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் தனது வர்த்தகத்தை படிப்படியாக விரிவாக்கிக்கொண்டே இருக்கிறது. ஏற்கெனவே ஸ்மார்ட்பை என்ற பெயரில் சொந்தமாக துணை நிறுவனத்தை ஆரம்பித்திருந்தது. அதன் மூலமாக வீட்டு உபயோக சாதனங்கள், மொபைல் ஆக்சசரீஸ் என பல்வேறு பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது. அதைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் சந்தையிலும் தற்பொழுது களமிறங்கியிருக்கிறது  ஃப்ளிப்கார்ட். தனது ஸ்மார்ட்போன் பிராண்ட்டுக்கு பில்லியன் என்று பெயரிட்டிருக்கிறது.

பில்லியன் பிராண்ட்டிலிருந்து வெளியாகியிருக்கிறது ஃப்ளிப்கார்ட்டின் முதல் ஸ்மார்ட்போன் கேப்சர் பிளஸ் (Billion Capture Plus). மீடியம் பட்ஜெட் செக்மென்டில் விற்பனைக்கு வந்திருக்கும் கேப்சர் பிளஸ் எப்படி இருக்கிறது.

கேப்சர் பிளஸ் வசதிகள்

  • 5.5 இன்ச் IPS LCD 1920 x 1080 திரை.
  • 2 GHz குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 625 ஆக்டாகோர் ப்ராசஸர்.
  • 3/4  ஜிபி ரேம் மற்றும் 32/64 ஜிபி இன்டர்னல் மெமரி.
  • 13+13 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமரா.
  • 8 மெகாபிக்சல் முன்புற கேமரா.
  • 3500mAh பேட்டரி திறன்.
  • ஆண்ட்ராய்டு 7.1.2 நெளகட் இயங்குதளம். 

மீடியம் பட்ஜெட் செக்மென்டில் டாப்பில் இருக்கும் ரெட்மி நோட் 4 உடன் போட்டி போடும் வகையில் கேப்சர் பிளஸ்ஸை உருவாக்கியிருக்கிறது ஃப்ளிப்கார்ட். அதனாலோ என்னவோ கிட்டத்தட்ட ரெட்மி நோட் 4 போலவே இருக்கிறது. அதே வேளையில் ரெட்மி நோட் 4 இல் இருந்த குறைகளை ஆராய்ந்து அதை இதில் கவனமாக தவிர்த்திருக்கிறது. ரெட்மி நோட் 4 ல் கேமரா கொஞ்சம் தரம் குறைவாக இருக்கும். அது அதன் மைனஸ். ஆனால் கேப்சர் பிளஸின் சிறப்பம்சமே அதன் கேமராதான். இதன் பின்னால் இருக்கும் இரண்டு கேமராக்களும் 13 மெகாபிக்சல் திறன் கொண்டவை. RGB + Monochrome சென்சார் அமைப்பைக் கொண்ட இதன் மூலமாக சிறந்த படங்களை எடுக்க முடியும். அதே போல முன்புறமும் 8 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது.

ஃப்ளிப்கார்ட்


ரெட்மி நோட் 4 ல் இருக்கும் அதே ஸ்னாப்ட்ராகன் 625 ஆக்டாகோர் ப்ராசஸர் இதிலும் இருக்கிறது. நேவிகேஷன் பட்டன்கள் திரையின் உள்ளே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மற்றபடி இதில் இருப்பது 3500mAh பேட்டரி. Type-C மற்றும் குவிக் சார்ஜிங் வசதியும் இருக்கிறது. ஸ்டாக் ஆண்ட்ராய்டு நெளகட் வெர்ஷனில் தற்பொழுது இயங்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு ஒரியோ அப்டேட் நிச்சயமாக உண்டு என உறுதியளிக்கிறது.

ஃப்ளிப்கார்ட்


கேப்சர் பிளஸின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் இதன் கிளவுட் ஸ்டோரேஜ் வசதி. இதற்காக Smartron என்ற நிறுவனத்துடன் கைகோத்திருக்கிறது ஃப்ளிப்கார்ட். இந்திய நிறுவனமான Smartron ஏற்கெனவே இரண்டு ஸ்மார்ட்போன்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் tronx எனப்படும் கிளவுட் ஸ்டோரேஜ் வசதியின் மூலமாக அன்லிமிடெட்டாக தகவல்களை சேமித்துக்கொள்ள முடியும். மூன்று மாதங்களுக்கான சோனி லைவ் சந்தாவும் இந்த ஸ்மார்ட்போனுடன் இலவசமாக கிடைக்கும். 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி மாடல் 10,999 ரூபாய்க்கும். 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி மாடல் 12,999 ரூபாய்க்கும் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கும்.


டிரெண்டிங் @ விகடன்