மொபைலுக்கு தேவையான 6 அத்தியாவசிய ஆக்சஸரீஸ்... சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பது எப்படி...? | Tips to choose good mobile accessories

வெளியிடப்பட்ட நேரம்: 11:18 (23/11/2017)

கடைசி தொடர்பு:11:18 (23/11/2017)

மொபைலுக்கு தேவையான 6 அத்தியாவசிய ஆக்சஸரீஸ்... சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பது எப்படி...?

ஒரு மொபைலை தேர்ந்தெடுப்பதில் அதிகக் கவனம் செலுத்தும் நாம் அதனுடன் பயன்படுத்தும் ஆக்சஸரீஸ்களை அவ்வளவாகக் கவனித்து வாங்குவதில்லை. ஆக்சஸரீஸ்கள் மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவை. ஆக்சஸரீஸ்களில் இருக்கும் தரமில்லாத பொருட்கள்  மொபைல் போன்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆக்சஸரீஸ்களை அடிக்கடி மாற்றுவதால் தேவையில்லாத செலவும் ஏற்படலாம். எனவே முதல் முறை வாங்கும்போதே நல்ல தரமான ஆக்சஸரீஸ்களை வாங்குவது நல்லது. நல்ல மொபைல் ஆக்சஸரீஸ்களை எப்படி தேர்ந்தெடுக்கலாம்? 

 Screen Guards

மொபைல் ஆக்சஸரீஸ்கள்


மொபைல் திரையை கீறல்கள் விழாமலும், கீழே விழுந்தால் பாதிப்படையாமல் தடுப்பதும் இந்த ஸ்க்ரீன் கார்டுகள்தான். எனவே மொபைலை வாங்கிய கையோடு இதையும் ஒட்டிவிடுவது நல்லது. தற்பொழுது முழுமையாக திரையை பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் கார்டுகள் கிடைக்கின்றன. oleophobic coating பயன்படுத்தப்பட்டிருக்கும் ஸ்க்ரீன் கார்டுகள் கைரேகை பதியாமல் தடுக்கும். தடிமனாக இருப்பதைத் தவிர்த்து மெலிதாக இருக்கும் ஸ்க்ரீன் கார்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல இதன் விளிம்புகள் 2.5D வசதியை கொண்டிருப்பது நல்லது. தரமில்லாத ஸ்க்ரீன் கார்டுகள் வெயிலில் செல்லும்போது ஒளியை பிரதிபலிக்கும் இதனால் திரையை பார்ப்பதில் சிரமம் இருக்கலாம். எனவே விலை சற்று அதிகம் இருந்தாலும் தரமானதைத் தேர்ந்தெடுங்கள்

Mobile Case

பேக் கேஸ்

மொபைல்களில் கீறல்கள் விழாமல் பாதுகாப்பது மொபைல் கேஸ்கள்தான். தரமில்லாத பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கேஸ்களால் மொபைலின் நிறத்தில் மாறுதல் ஏற்படலாம் என்பதால் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். மெலிதான கேஸ்கள் மொபைலின் தோற்றத்தை மாற்றாமல் இருக்கும். எடை குறைவான கேஸ்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அடிக்கடி கீழே விழும் வாய்ப்பிருந்தால் Hard Case களை வாங்கி பயன்படுத்தலாம். அதனுடன் மொபைல் ஸ்டான்ட் அமைப்பு இருக்குமாறு தேர்ந்தெடுக்கலாம். விலை மலிவு என்பதற்காக, தமற்ற பிளாஸ்டிக் கவர்களை நிச்சயம் வாங்கவேண்டாம். அது மொபைலின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் உதவாது.

Memory card

மெமரி கார்டு

தற்பொழுது மொபைலின் இருக்கும் இன்டெர்னல் மெமரியின் அளவே  பலருக்கு போதுமானதாக இருக்கிறது. அதே வேளையில் ஹைபிரிட் சிம் ஸ்லாட்கள் மெமரிகார்டின் தேவையை குறைத்து விட்டன. குறைவான ஜிபி கார்டுகளுக்கும் அதிக ஜிபி கொண்ட கார்டுகளுக்கும் விலை வித்தியாசம் குறைவாகவே இருக்கும். எனவே மெமரி கார்ட் வாங்க விரும்புபவர்கள் குறைந்த அளவு ஜிபி கார்டுகளை வாங்குவதை தவிர்க்கலாம். மெமரி கார்டுகள் வாங்க நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் அதன் வேகம். தகவல்கள் பதியப்படும், பெறப்படும் வேகத்திற்கு தகுந்தவாறு மெமரி கார்டுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மெமரி கார்டின் மேலே ஒரு சிறிய வட்டதிற்குள் 1 முதல் 10 வரை எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். பத்தாம் எண் கொண்ட மெமரி கார்டானது அதிக வேகத்தில் செயல்படும். பத்தாம் எண்னிற்கு மேல் வேகம் கொண்டவை U என்ற வடிவத்திற்குள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

Earphones

 இயர்போன்


தற்பொழுது ஒரு சில நிறுவனங்கள் புதிதாக மொபைல் வாங்கும் பொழுது இயர்போன்கள் கொடுப்பதை தவிர்த்துவிடுகின்றன. எனவே தனியாக இயர்போன்கள் வாங்க வேண்டியிருக்கிறது. இயர்போன்களை பொருத்தவரையில் அதை சுருட்ட வேண்டியிருப்பதால் விரைவில் பாதிப்படைகின்றன. அதற்கென தரப்படும் பாக்ஸ்களில் வைத்து பாதுகாத்தால் இயர்போன்களின் ஆயுளை அதிகரிக்க முடியும். Flat Cable அமைப்பை கொண்ட இயர்போன்களில் சிக்கல்கள் குறைவாகவே வரும் என்பதால் எளிதாக பயன்படுத்தலாம். தரமான இயர்போன்களுக்கு எப்படியும் குறைந்தது 600 ரூபாயாவது செலவு செய்யவேண்டியிருக்கும்.

Power Banks

பவர்பேங்க்


மொபைலில் சார்ஜ் இல்லாத பொது கைகொடுப்பது இந்த பவர் பேங்குகள்தான். மொபைல் பேட்டரியின் அளவை விட இருமடங்கு அளவை கொண்ட பவர் பேங்குகளை தேர்ந்தெடுப்பது நல்லது. குறைந்த விலையில் அதிக அளவை கொண்ட பவர் பேங்குகளை கவனமாக இருக்க வேண்டும் அவை போலியானதாக இருக்கலாம். சாலையோரங்களில் விற்கப்படும் பெரும்பாலான பவர் பேங்குகள் போலியானவை என்பதால் கவனமாக வாங்க வேண்டும். ஆன்லைன் தளங்களில் நிறைய போலி பவர்பேங்குகள் கூட விற்பனைக்கு  கிடைக்கின்றன. அவற்றிடம் இருந்து தப்பிக்க பிராண்டட் பவர்பேங்குகள்தான் ஒரே வழி. 

Mobile Charger

 

மொபைல் ஆக்சஸரீஸ்கள்


மொபைல்கள் வெடிப்பதை பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன. வேறு நிறுவனத்தின் அல்லது தரமில்லாத மொபைல் சார்ஜர்களை பயன்படுத்துவதுதான் அதற்கு காரணம் என்று மொபைல் நிறுவனங்கள் கூறுகின்றன. தவறான மொபைல் சார்ஜர்களை பயன்படுத்துவது மொபைலின் பேட்டரியை பாதிப்படைய செய்யலாம். எனவே அதற்கென கொடுக்கப்பட்ட மொபைல் சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். புதிதாக சார்ஜர் தேவைப்பட்டால் விலை அதிகமாக இருந்தாலும் மொபைல் நிறுவனத்தின் ஒரிஜினல் சார்ஜர்களை வாங்குவது நல்லது.


டிரெண்டிங் @ விகடன்