வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (24/11/2017)

கடைசி தொடர்பு:17:47 (24/11/2017)

20 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா... ஜியோவுக்குச் சவால்விடும் பெங்களூரு ஸ்டார்ட்அப்! #WifiDabba

டந்த வருடம் ஜியோ அறிமுகமானபோது குறைந்த விலையில் அதிக டேட்டாவை கொடுத்து அசத்தியது. கிட்டத்தட்ட அதைப்போலவே ஆனால் ஜியோவை விடவும் குறைவான விலையில் அதிக டேட்டாவை கொடுத்துவருகிறது ஒரு ஸ்டார்ட்அப். பெங்களூரில் இரண்டு இளைஞர்கள் தொடங்கிய வைஃபை டப்பா எனும் ஸ்டார்ட்அப்தான், இப்படிக் குறைவான விலையில் அதிக டேட்டாவை அளித்துவருகிறது

வைஃபை டப்பா ஸ்டார்ட்அப்

பெங்களூரில் சுபந்து ஷர்மா மற்றும் கரம் லக்ஷ்மன் என்ற இரு இளைஞர்கள் ஆரம்பித்ததுதான் இந்த வைஃபை டப்பா. ஸ்டார்ட்அப்பாக தொடங்கப்பட்ட இந்தப் புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலமாக 100 MB டேட்டாவை 2 ரூபாய்க்குப் பெற முடியும். ஒரு வருடத்திற்கு முன்னால் இந்தியாவில் இன்டர்நெட் டேட்டாவின் விலை அதிகமாக இருப்பதாக இவர்களுக்குப் தோன்றவும் அதை மாற்றுவதற்கு ஏதாவது செய்யலாம் என்று யோசிக்கிறார்கள். அப்பொழுது தோன்றியதுதான் இந்த வைஃபை டப்பா யோசனை. அதே நேரத்தில் ஜியோவும் களமிறங்கி சந்தையைக் கலக்குகிறது. இருந்தாலும், அதையும் மீறி பலரின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது வைஃபை டப்பா.

எப்படிச் செயல்படுகிறது வைஃபை டப்பா?

இந்த ஸ்டார்ட்அப்  ஐடியா அவர்களுக்குத் தோன்றியவுடன் அவர்கள் செய்த முதல் காரியம். ஒரு நபர் எதற்காக டேட்டா உபயோகிக்க தயங்குகிறார் என்பதைக் கண்டறிந்ததுதான். இந்தியாவில் 90 சதவிகித டேட்டா உபயோகிப்பாளர்கள் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்கள்தான். அதில் ஒரு சிலர் டேட்டாவிற்காக 300 ரூபாயை செலவழிக்க தயங்குகிறார்கள். அவர்களுக்கு இந்த வைஃபை டப்பா சிறந்த தேர்வாக இருக்கும். அவர்களுக்கு எப்பொழுது டேட்டா தேவையோ அப்பொழுது அவர்களுக்குத் தேவையான பிளானைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். 

எப்பொழுதும் போல பெரும்பாலான இடங்களில் இருக்கும் வைஃபை ஹாட்ஸ்பாட் போலவே இதுவும் செயல்படுகிறது. மக்கள் கூடும் இடங்களான பெட்டிக்கடைகள், பேக்கரிகள் போன்ற சாதாரண பொழுதுபோக்கு இடங்களில் வைஃபை டப்பாக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கடையில் பிளானுக்குத் தேவையான கூப்பனை பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். மொபைல் எண் மற்றும் அந்த கூப்பனில் இருக்கும் நம்பரைப் பயன்படுத்தி வைஃபை டப்பாவில் இணையலாம்.

2 ரூபாய்க்கு 100 MB, 10 ரூபாய்க்கு 500 MB மற்றும் 20 ரூபாய்க்கு 1 ஜிபி என மூன்று பிளான்கள் இருக்கின்றன. எந்த பிளான் தேவையோ அந்த கூப்பனை வாங்கிக்கொள்ளலாம். மூன்று பிளான்களுக்கும் வேலிடிட்டி 24 மணி நேரம்.

வைஃபை டப்பா ஸ்டார்ட்அப்

விலை குறைவாக இருப்பதால் இணைய வேகமும் குறைவாக இருக்கும் என்று பலர் எண்ணியிருப்பர்கள். அதுதான் இல்லை. வைஃபை டப்பாவிற்கு இணைய இணைப்பை அளிப்பதற்காக தரைவழி ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைப் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலமாக அதிகபட்சமாக 50 Mbps வேகத்தில் இணைய இணைப்பு சாத்தியமாகிறது. ஒரு வைஃபை டப்பா மூலமாக 100-200 மீட்டர்கள் சுற்றளவிற்கு சேவையைத் தர முடிகிறது. 

தற்பொழுது ஒரு வைஃபை டப்பாவை தயார் செய்வதற்கு 4000 ரூபாய் செலவாகிறது. ஓர் இடத்தில் புதிய இணைப்பை உருவாக்க 6-7 நாள்கள் தேவைப்படுகின்றன. ஒரு செல்போன் டவரால் கவர் செய்யகூடிய சுற்றளவை 20 வைஃபை டப்பாக்களால் செய்து விட முடியுமாம். தற்பொழுது பெங்களூர் நகரில் 350 வைஃபை டப்பாக்கள் இருக்கின்றன. புதிதாக 1800 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். குறைந்த விலையில் அதிவேக இணைய இணைப்பை அளிப்பதுதான் எங்களது நோக்கம் என்று தெரிவித்திருக்கிறார்கள் இதன் நிறுவனர்கள். 

பெரிய டெலிகாம் நிறுவனங்களே செய்யத் திணறிக்கொண்டிருக்கும் விஷயத்தை மிக எளிதாகச் செய்துமுடித்துள்ளது வைஃபை டப்பா. ஸ்டார்ட்அப்களின் பலமே இதுதான்.


டிரெண்டிங் @ விகடன்