Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இவான்கா டிரம்ப் மற்றும் மோடியை வரவேற்ற 'மித்ரா' ரோபோவை உருவாக்கிய தமிழன்! #VikatanExclusive

உலகத் தொழில்முனைவோர் மாநாடு ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் (முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட) உருவான மித்ரா எனும் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோதான் இவான்கா ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோரை வரவேற்றது. பல அமெரிக்க, இந்திய அதிகாரிகளுக்கே இடமில்லாத மேடையில் கம்பீரமாக சிறப்பு விருந்தினர்களோடு மேடையை வலம் வந்தது மித்ரா. 

மித்ரா ரோபோ

மித்ரா வாடிக்கையாளர்களோடு உரையாடும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ஓர் இந்திய ரோபோ. இந்த ரோபோவை தயாரித்த இன்வென்டோ நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். இன்வென்டோ நிறுவனத்தின் மித்ரா ரோபோவுக்கான விற்பனை பிரிவு தலைவர் கவுந்தின்யா பன்யம் பேசுகையில்,

''இந்த ரோபோ இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோ. எங்கள் நிறுவனத்தின் சிஇஓ பாலாஜி விஸ்வநாதன்தான் இந்த ரோபோ உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர். திருச்சியைச் சேர்ந்த இவர் மதுரை தியாகராஜ கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தவர். யுனிவர்சிட்டி ஆஃப் மரிலாண்டில் செயற்கை நுண்ணறிவு பற்றியும், பாப்சன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏவும் படித்தவர். ஆரம்பக் காலத்தில் இஸ்ரோவில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமுடன் டிஆர்டிஓ-வில் பணியாற்றியவர். ரோபோட்டிக்ஸ் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் உருவாக்கியதுதான் இன்வென்டோ நிறுவனம். மித்ரா வாடிக்கையாளர்களுடன் சிறந்த முறையில் தொடர்புகொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. வங்கிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்கி அசத்துகிறது. கனரா வங்கி மற்றும் பெங்களூரு PVR சினிமாஸ் போன்ற இடங்களில் தற்போது இந்த ரோபோ பயன்பாட்டில் உள்ளது. 

மித்ரா ரோபோ

முழுக்க முழுக்க ஹியுமனாய்டு ரோபோவாக வடிவமைக்கப்பட்டுள்ள மித்ரா, முகத்தை வைத்து ஒருவரை அடையாளம் காணுவது, குரல் மூலம் அடையாளம் காணுவது போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோவின் தானியங்கி நகரும் அமைப்பும், கமென்டுகள் மூலம் ஆப்பரேட் செய்யும் வசதியும் இதன் தனித்தன்மைகளாகக் கருதப்படுகிறது. இந்த ரோபோவை மிகப்பெரிய அளவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நாங்கள் உலகத் தொழில்முனைவோர் மாநாட்டை நடத்தும் ஈவன்ட் மேனஜர்களோடு தொடர்பில் இருந்தோம். அவர்களிடம் இந்த ஐடியாவைக் கூறியதும் மித்ராவின் அறிமுகம் பிரதமர் முன் நடைபெற்றது. 

ஆரம்பத்தில் எங்களது சவால் என்பது இதற்கான சந்தையை இந்தியாவில் உருவாக்குவதாகத்தான் இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு இது கஸ்டமைஸ்டு தயாரிப்பாக இருக்கும். இதனை விற்பனைக்கும், வாடகைக்கும் வழங்குகிறோம். வாடிக்கையாளர்களின் தேவையைப் பொருத்து கட்டணம் அமையும். வாடகைக்கு 30 ஆயிரம் ரூபாயிலிருந்து இந்த ரோபோ கிடைக்கிறது. பிரதமரின் டிவிட்டர் பக்கத்தில் எங்கள் ரோபோவுடன் பிரதமர் இருந்த புகைப்படம் இடம்பெற்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம். மித்ரா இந்திய ரோபோ சந்தையில் புதிய சாதனைகளைப் படைக்கும்" என்றார்.

எந்திரன் படத்தில் வருவது போல இந்த ரோபோ நன்றாகப் புகைப்படம் எடுக்கும், டிஜேயாக செயல்படும், ட்விட் செய்யும் என்கிறார்கள் இன்வென்டோ அணியினர். தற்போது பெரிய திருமணங்களிலும், பிறந்தநாள் விழாக்களிலும் மித்ரா இடம்பெறுகிறதாம். எங்கயாவது டூர் போய் செல்ஃபி எடுக்கக் கூட ஆள் இல்லன்னா கூட்டிட்டு போலாமா என்று கேட்டால். ”பீஸ் ப்ரோ” எனக் கூடவே வரும் அளவுக்கு மித்ரா ஸ்மார்ட். புதிய மனிதா வீட்டுக்கு வா!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement