எம்பாமிங் தொடங்கி அம்ருதா வரை... ஜெயலலிதாவைப் பற்றி என்னவெல்லாம் தேடியது இணையம்!

ஜெயலலிதா

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து இன்றோடு ஒரு வருடம் ஆகியுள்ளது. ராஜாஜி அரங்கில் அவர் உடல் வைத்திருந்த போது முகத்தில் கறுப்புப் புள்ளிகள் இருந்தன. ஜெயலலிதாவுக்கு எம்பாமிங் செய்திருக்கிறார்கள் என்பது தொடங்கி ஜெயலலிதாவின் சொத்து யாருக்கு, வீடு யாருக்கு, சின்னம் யாருக்கு, கட்சி யாருக்கு எனப் பல விஷயங்கள் பேசப்பட்டன. அதன் பின் அதிமுக உடைந்தது. தீபா அத்தை என்று உறவு கொண்டாடினார். இன்னும் சில புதுமுகங்கள் ஜெயலலிதா என் தாயார் என்று உறவு சொல்லின. ’எப்படி இருந்த ஜெயலலிதாவை இப்படி ஆக்கிவிட்டார்கள்’ என்று அதிமுக-வின் ஆரம்ப கால தொண்டனை மனம் குமுற வைத்திருக்கிறது இந்த ஓராண்டு. இதெல்லாம் கள நிலவரம் என்றால். இணையம் இன்னும் வேகமாய் இருக்கிறது.  

என்ன தேடியது இணையம்?

* ஓராண்டில் ஜெயலலிதா என்ற வார்த்தையை உலகம் முழுவதும் 6 கண்டங்களில் உள்ள 132 நாடுகளில் தேடியுள்ளனர். 

* உலக அளவில் ஜெயலலிதாவின் பெயர் அதிக அளவில் தேடப்பட்ட ஊர் தஞ்சாவூரும், மன்னார்குடியும்தான். 

* அதிகமாகத் தேடப்பட்ட தலைப்புகள் எம்பாமிங், ராஜாஜி ஹால் மற்றும் சிமி கரேவால்.

* அதிகமாகத் தேடப்பட்ட வாக்கியங்களில் முதலிடம் பிடித்திருப்பது ''சசிகலா ஜெயலலிதாவைக் கொன்றார்'' என்பதுதான். அடுத்தடுத்த இடங்களில் ராஜாஜி ஹால், எம்பாமிங், ஜெயலலிதா மரணம் மர்மம், ஜெயலலிதா மகள் அம்ருதா ஆகியவை இடம்பிடித்துள்ளன.

* இதுமட்டுமன்றி ஜெயலலிதா மரணத்தில் மர்மம், சோபன்பாபு, V.K.சசிகலா, நடராஜன், டிடிவி தினகரன் என ஜெயலலிதாவோடு தொடர்புடைய எல்லாருமே இந்த ஓராண்டின் வைரல் வார்த்தைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

* ஜெயலலிதாவின் மரணம் இந்தியாவின் இணையச் சேவை உள்ள எல்லா இடங்களிலும் தேடப்பட்டது. அதேபோல் இந்த ஓராண்டும்  தேடல் தொடர்ந்துள்ளது.

* ஜெயலலிதாவின் படத்தை 84 நாடுகளிலும், ஜெயலலிதா குறித்த வீடியோவை 98 நாடுகளிலும் தேடியுள்ளனர்.

உலக அளவில் தேடப்பட்ட தலைப்புகளில் மன்னார்குடி குடும்பம் அதிகம் பங்களிப்பதால் தஞ்சை ட்ரெண்ட் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இன்னமும் அப்போலோ மர்மங்கள் தொடர்வதால் மர்மம் என்ற வார்த்தையும், எம்பாமிங்கும் இன்றுவரை அதிகம் தேடப்படுகின்றன.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிஸியாக இருக்கும் கட்சி நிர்வாகிகளை விட இணையம் அதிகம் ஜெயலலிதாவைத் தேடுகிறது, ஜெயலலிதாவை மிஸ் செய்கிறது. ஜல்லிக்கட்டு, நீட், ஜி.எஸ்.டி பிரச்னைக்கெல்லாம் அவர் இருந்திருந்தால் என்று ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் தொடர்பதிவுகளை முன்னிறுத்துவது உலகறிந்த உண்மை. ஓராண்டில் ஆயிரம் பிரச்னைகள், பிளவுகள் வந்தாலும் இணையம் இன்னும் ஜெயலலிதாவை மறக்கவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!