``ரேடியம் லைட்... 4டி, 5டி கேஸ்தான் இப்ப ஃபேஷன்..!” - மொபைல் விற்பனையாளரின் டிப்ஸ் #MobileAccessories

மொபைல் கவர்

ஒரு மொபைல் வாங்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள்? எவ்வளவு பட்ஜெட் ஒதுக்குகிறீர்கள்? அதே, அதற்கான இதர உபகரணங்களை வாங்க எவ்வளவு நேரம், என்ன பட்ஜெட் தருகிறீர்கள்?

ஒரு மொபைலைத்  தேர்ந்தெடுக்க  காட்டும் ஆர்வத்துக்கு ஈடாக அல்லது அதிகமாகவே மொபைலின் அக்சஸரீஸ்களை வாங்குவதற்கு காட்டுகின்றோம். மொபைலின் கவரையோ அல்லது ஸ்க்ராட்ச் கார்டையோ மாற்றினாலே புதிது போல ஆகிவிடும். அதற்காகவும் பலர் அவற்றை அடிக்கடி மாற்றுவதுண்டு. தண்ணீரை மண் உறிஞ்சுவதைப்போல் சத்தமில்லாமல் நமது பட்ஜெட்டை அது  உயர்த்தி விடுகிறது. 
கடந்த ஆண்டு இந்தியத் தொலைத்தொடர்பு ஆணையம் கொடுத்த அறிக்கையில் இந்தியாவில் 100 கோடி மொபைல் பயனாளிகள் உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. மொபைல் பயன்பாடு அதிகமாக உள்ளதால், மொபைல் அக்சஸரீஸ்களின் விற்பனையும் இங்கு அதிகமாகவே உள்ளது. தனியார் புள்ளி விவர நிறுவனம் ஒன்றின் புள்ளி விவரங்களின்படி, கடந்த 2015-ம்  ஆண்டு இந்தியாவில் மொபைல் போன் அக்சஸரீஸ்கள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் 1,202.7 மில்லியன் டாலர் ஆகும். இந்திய ரூபாயில் 7700 கோடி. இது வரும் 2026-ம் ஆண்டுக்குள் 3,545 மில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாயில் 22800கோடி.

அக்சஸரீஸ் விற்பனையில், விற்பனையாளருக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தருவது மொபைல்போன் பேக் கேஸ். ட்ரெண்டுக்கேற்ப பேக் கேஸ்(Back Case) விற்பனையில் மாற்றம் ஏற்படுவதால், மக்களிடையே இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கின்றது. இதைப் பற்றி அறிந்துகொள்ள சென்னையில் உள்ள ஸ்பென்சர் வணிக வளாகத்துக்குச் சென்று அங்குள்ள ஒரு கடைக்காரரிடம் அவர்கள் வணிகம் பற்றி பேசினேன்.

"நாங்கள் பெரும்பாலும் பொருள்களை  லோக்கல் டீலர்களிடமிருந்து வாங்குகிறோம். எண்ணிக்கை அதிகமாகும்போதும், வெரைட்டியான டிசைன் கேஸ்கள் தேவைப்படும்போதும் மீடியேட்டர்கள் மூலம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்றோம். வாங்கிய கேஸ்களை இயந்திரம் மூலம் வடிவமைத்து, விற்பனை செய்கின்றோம். ஒவ்வொரு பயன்பாட்டாளர்களின் தேவையும் வெவ்வேறாக இருப்பதால், அவர்களுக்கு ஏற்றாற்போல் வடிவமைத்து விற்பனை செய்கின்றோம். மக்கள் எங்களிடம் அதிகம் கேட்பது விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள், அனிமேஷன் கேரக்டர்களின் படங்கள் பொருந்திய கேஸ்களைத்தான். பெண்கள் கொஞ்சம் soft designs கேஸ்கள் பெறுவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்களுக்கு அதிரடி டிசைன்தான் விருப்பம்.

மொபைல்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு விற்பனையானதற்கும் தற்போது விற்பனையாகும் கேஸ்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. முன்புள்ளவைகள் ஒரே கலரில் டிசைன்கள் குறைவாக இருந்தான. ஆனால், தற்போது பம்பர் மாடல், சிலிகான், மேட் பினிஷ், க்ளாஸி  பினிஷ் (Glossy Finish) எம்போர்ஸ்ட் பிரின்டிங் (Emborsed Printing) மாடல்கள் அதிகம் விற்பனையாகின்றன. இதில் பம்பர் மாடல் கேஸ்களே அதிக எண்ணிக்கையில் தற்போது விற்பனையாகி வருகிறது.  விலை 150 ரூபாயில் தொடங்கி 800-1000 ருபாய் வரையிலான கேஸ்கள் கிடைக்கின்றன. தற்போது புதிதாக மார்க்கெட்டில் விற்பனையாவது ரேடியம் லைட் கேஸ்களும் 4D மற்றும் 5D ப்ரிண்டட் கேஸ்களும் தான். 

பலர் ஒரு கேஸ் உபயோகித்து சில மாதங்கள் கழித்து புதிய ஒன்றை வாங்குகின்றனர். ஆனால் ஒரு சிலர், வாங்கும்போதே 4-5 கேஸ்கள் வாங்கிக்கொள்கின்றனர். வீட்டில் இருக்கும்போது ஒரு கேஸையும் பணி  இடத்துக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்லும்போது வேறொன்றையும்  விழாக்களுக்குச் செல்லும்போது வேறென்றையும் பயன்படுத்த பல டிசைன் கேஸ்களை வாங்கிச் செல்கின்றனர். தொழில் முறையில் பார்க்கும்போது கேஸ் விற்பனையாளர்கள் அதிகமாக இருந்தாலும், எங்களைவிட பயனாளர்கள் அதிகமாக உள்ளதால், எங்களுக்கு கேஸ் வியாபாரம் செய்வதில் பிரச்னைகள் ஏதும் இல்லை" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!