வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (07/12/2017)

கடைசி தொடர்பு:14:57 (07/12/2017)

``ஹலோ மிஸ்டர் ரெட்மி... உங்க கூட மோத நான் ரெடி..!” - ஹுவாயின் அசத்தல் புது மொபைல் #Honor7X

ஹானர் 7X மொபைல்

5.93 இன்ச்  ஃபுல் வியூ டிஸ்ப்ளே ,டூயல் கேமரா,  4 ஜிபி ரேம் இது போன்ற வசதிகளைக் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனின் விலை எவ்வளவு இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? குறைந்தபட்சம் பதினைந்தாயிரத்துக்கும் மேல். இந்த எண்ணத்தை மாற்றும் வகையில் ஹுவாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஸ்மார்ட்போன் ஹானர் 7X. டூயல் கேமரா வசதியுடன் கடந்த வருடம் வெளியான ஹானர் 6X மொபைலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  ஹுவாயின் மற்ற மாடல்களை விட ஹானர் 6X அந்த நிறுவனத்தை பெரும்பாலோனோருக்கு அறிமுகப்படுத்தியது. அதன் அடுத்த தலைமுறை மொபைல் ஹானர் 7X ன்  விலையும் குறைவாகவே நிர்ணயிக்கப்படும் என்று ஹுவாய் அறிவித்திருந்தது. கடந்த அக்டோபர் மாதமே சீனாவில் வெளியான நிலையில் தற்பொழுது இந்தியாவிலும் வெளியாகியிருக்கிறது.

ஹானர் 7X வசதிகள்

5.93 இன்ச் IPS 1080 x 2160 திரை.
1.7GHz ஹைசிலிக்கான் கிரின்  659 ஆக்டாகோர் ப்ராசஸர்.
4 ஜிபி ரேம் மற்றும் 32/64 ஜிபி இன்டர்னல் மெமரி.
16+2 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமரா.
8 மெகாபிக்சல் முன்புற கேமரா.
3340mAh பேட்டரி திறன்.
ஆண்ட்ராய்டு 7.0 நெளகட் இயங்குதளம்.

ஃபுல் வியூ டிஸ்ப்ளே

ஸ்மார்ட்போனில் ஃப்ளாக்ஷிப் முதல் மிட்ரேன்ஜ் வரை தற்பொழுது ட்ரென்டிங்கில் இருக்கும் விஷயம் ஃபுல் வியூ டிஸ்ப்ளே. 18:9 விகிதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இதன் மூலமாக சாதாரணத் திரையை விட சிறப்பாக காட்சிகளை பெற முடியும். சில மாதத்திற்கு முன்பு வரை விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இருந்த இந்த வசதி படிப்படியாக அனைத்து மொபைல்களிலும் கிடைத்து வருகிறது. ஹானர் 7X ம் இந்த வசதியை கொண்டிருகிறது. இதே செக்மன்டில் இந்த வசதியைக் கொண்ட மொபைல்கள் குறைவு என்பது இதன் பிளஸ். ஃபுல் மெட்டல் வடிவமைப்பைக் கொண்டிருப்பதால் இதன் பில்ட் குவாலிட்டி சிறப்பாக இருக்கும். மேலும் இது மொபைலுக்கு ஒரு ப்ரீமியம் லுக்கையும் தருகிறது. 

டூயல் கேமரா

இதன் முந்தைய தலைமுறை மொபைலான ஹானர் 6X வெளியான போது அதனோடு போட்டியிட்டது ரெட்மி நோட் 4. ஆனால் ஒரு சில வசதிகள் குறைவாக இருந்ததால் பலரும் ரெட்மியையே தேர்ந்தெடுத்தனர். தற்பொழுது உஷாரான ஹுவாய் வசதியை அதிகரித்து விலையை குறைவாக நிர்ணயித்திருக்கிறது. இப்பொழுது இதன் போட்டியாளர் Mi A1. இவை இரண்டுமே டூயல் கேமரா அமைப்பைக் கொண்டிருகின்றன. இரண்டு மொபைல்கள் மூலமாகவும் கிட்டத்தட்ட ஒரே தரத்தில் புகைப்படம் எடுக்க முடியும். ஆனால் ஒரு சில விஷயங்களில் ஒரு படி முன்னால் இருக்கிறது ஹானர் 7X. இரண்டுமே ஒரே எடையைக் கொண்டிருந்தும் ஹானர் 7X ல் 3340 mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கிறது. இது Mi A1 ஐ விட சற்று அதிகம். இது ஒரு நாளைக்கு போதுமானதாக இருக்கும் என்கிறது ஹுவாய்.

மற்ற வசதிகளில் அப்டேட்டாக இருக்கும் ஹானர் 7X இரண்டு விஷயங்களில் பின்தங்கியிருக்கிறது, ஒன்று Type-C மற்றொன்று ஃபாஸ்ட் சார்ஜிங். இவை இரண்டும் இருந்திருந்தால் இன்னும் அசத்தியிருக்கும். ஃபுல் வியூ டிஸ்ப்ளே ,டூயல் கேமரா,  4 ஜிபி ரேம் போன்ற வசதிகள் இருப்பதால் முன்னர் குறிப்பிட்ட இரண்டும் அவசியமில்லை என்பவர்களுக்கு இந்த மொபைல் சிறந்த தேர்வாக இருக்கும். பேஸிக் மாடலான  4 ஜிபி ரேம் மற்றும் 32 இன்டர்னல் மெமரி மாடல் 12,999 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

 

.


டிரெண்டிங் @ விகடன்