Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா 43 வயது பெண்... நடந்தது என்ன? #GadgetTippedCrimes அத்தியாயம் - 2

பாலியல் குற்றம்

பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பது இந்த உலகில் அரிதிலும் அரிது. அமெரிக்காவும் அவ்வளவு பாதுகாப்பான நாடு அல்ல. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அங்கும் அதிகம். அப்படி ஒரு வழக்காகத்தான் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ரிஸ்லி என்ற பெண்ணின் வழக்கையும் பார்த்தது அமெரிக்க காவல்துறை.

ரிஸ்லிக்கு வயது 43. ஃப்ளோரிடாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அலுவலக வேலை விஷயமாக ரிஸ்லி 2015-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி லான்செஸ்டர் நகருக்குச் சென்றிருந்தார். அலுவலக டூர் என்பதால், அவர் பாஸுக்குச் சொந்தமான வீட்டின் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தார். நல்ல விசாலமான வீடு அது. ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தாலும் அவ்வளவு செளகர்யமாக இருந்திருக்காது. அது பனிக்காலம். வீட்டைச் சுற்றிலும் முட்டி வரைக்கும் பனிதான். அந்த இரவு ரிஸ்லிக்கு ரம்மியமாக இருந்திருக்க வேண்டிய சூழல்தான். ஆனால், அப்படியில்லை. ரிஸ்லிக்கு ஓர் ஆபத்து. அதிலிருந்து அவரால் தப்ப முடியவில்லை. கண்விழித்ததும் 911-க்கு அழைத்தார்.

911-க்கு ரிஸ்லி அழைத்ததும் காவலர்கள் அங்கு வந்துவிட்டார்கள். ரிஸ்லியிடம் விசாரணையைத் தொடங்கினார்கள். ரிஸ்லி சொன்னதன் சாரம்சம் இதுதான்:

அன்றிரவு ரிஸ்லி படுக்கையில் படுத்திருந்திருக்கிறார். திடீரென ஓர் உருவம் அந்த அறைக்குள் நுழைந்திருக்கிறது. அது ரிஸ்லியைத் தாக்க, அவர் பயந்துபோய் பாத்ரூமுக்குள் ஓடியிருக்கிறார். கதவை மூடுவதற்குள் அந்த உருவமும் பாத்ரூமுக்குள் நுழைந்துவிட்டது. கையில் கத்தி. ரிஸ்லியால் சத்தமும் போட முடியவில்லை. கத்திமுனையில் அந்த உருவம் ரிஸ்லியைப் பாலியல் வன்கொடுமை  செய்திருக்கிறது. 

இந்தத் தகவலை வைத்து காவல்துறை தனது விசாரணையைத் தொடங்கியது. அறையிலிருந்த நாற்காலிகள் உடைந்துபோயிருந்தன. ரிஸ்லியிடம் என்ன நடந்தது என்பதை நடித்துக் காட்டச் சொல்லியிருக்கலாம். அதுதான் வழக்கமாக நடக்கும். ஆனால், ரிஸ்லியின் மனநிலை காவலர்களை அப்படிக் கேட்க முடியாமல் செய்துவிட்டது. ரிஸ்லியின் முகம் பயத்தால் மூடியிருந்தது. வீட்டுக்கு வெளியே சென்று பார்த்திருக்கிறார்கள். பனி கொட்டிக் கிடந்திருக்கிறது. ஆனால், வீட்டுக்கு உள்ளே வந்த உருவத்தின் காலடித்தடங்கள் எங்கேயும் காணப்படவில்லை. விசாரணையை வேறு கோணத்துக்கு மாற்ற வேண்டியிருக்கும் என காவலர்களை யோசிக்க வைத்தது அந்தப் பனிதான்.

ரிஸ்லியின் புகைப்படங்கள் சிலவற்றை அவரது ஃபேஸ்புக்கில் பார்த்தது காவல்துறை. எல்லா புகைப்படத்திலும் அவரது கையில் ஒரு வாட்ச் இருந்தது. உண்மையில் அது வாட்ச் இல்லை; ஃபிட்னெஸ் பேண்டு. எப்போதும் அது ரிஸ்லியின் கைகளில்தான் இருக்கும். அந்த பேண்டு பற்றி ரிஸ்லியிடம் கேட்டது காவல்துறை. இரவு நடந்தப் போராட்டத்தில் அது எங்கோ விழுந்திருக்கலாம் என்றார் ரிஸ்லி. மீண்டும் அறைக்குள் சென்று சம்பவ இடத்தை நோட்டம் விட்டார்கள். ரிஸ்லியின் ரிஸ்ட் பேண்டு நாற்காலிக்கு அடியில் கிடந்திருக்கிறது. அந்த பேண்டின் அக்கவுண்டுடைய லாக் இன் ஐடி, பாஸ்வேர்டை வாங்கிக்கொண்டது காவல்துறை.

ரிஸ்லியின் பாஸ் சம்பவ இடத்துக்கு வந்தார். அவரிடம் காவலர்கள் விசாரணையை முடித்தார்கள். காவல்துறைக்கு ரிஸ்லியின் பாஸ் சில தகவல்களைச் சொன்னார். ரிஸ்லி அந்த நிறுவனத்தின் தற்காலிக இயக்குநராக இருந்திருக்கிறார். சம்பவம் நடந்த நாளுக்கு ஒரு வாரம் முன்புதான் அவர் அந்தப் பதவியில் இனி நீடிக்க முடியாது என ரிஸ்லியிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரிடம் வேலை செய்தவர்களிடம் இந்தத் தகவலை சொல்லச் சொன்னது நிறுவனம். ஆனால், ரிஸ்லி அதை சொல்லாமல் இருந்திருக்கிறார். இதெல்லாம் காவல்துறைக்கு சந்தேகத்தை அதிகமாக்கியது.

கேட்ஜெட்

ஃபிட்னெஸ் பேண்டின் டேட்டாவும் அந்த நேரம் கைக்கு கிடைத்திருக்கிறது. அதன்படி, சம்பவம் நடந்ததாக ரிஸ்லி சொன்ன நேரத்தில் அவர் படுக்கையில் இல்லை; நடந்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது மட்டுமல்ல; அன்றிரவு முழுக்கவே ரிஸ்லி தூங்காமல் நடந்தபடியே இருந்ததாக ஃபிட்னெஸ் பேண்டு சொன்னது. 

ரிஸ்லி தவறான தகவல்களை தந்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகச் சொன்ன இடம் அவரது பாஸுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ். இப்படி ஒரு பொய் சொல்வதன் மூலம் அவருக்கு நெருக்கடி தர நினைத்திருக்கிறார். அதை அவரது கையிலிருந்த ஃபிட்னெஸ் பேண்டே முறியடித்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்தது அமெரிக்கக் காவல்துறை. ஒருவேளை ஃபிடென்ஸ் பேண்டு காவல்துறைக்கு கிடைக்காமல் போயிருந்தால், ரிஸ்லிக்கு பதில் அவரது பாஸ் கம்பி எண்ண வேண்டியதாக இருந்திருக்கலாம். 

இனிவரும் காலத்தில் இந்த உலகமே டெக்னாலஜியின் கைகளில்தான். டெக்னாலஜி தான் நிஜமான பிக்பாஸ். அங்கு யாரும் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது.

_______________

அத்தியாயம் 1:

3 மாதங்கள் கழித்து மீண்டும் ஜேம்ஸ் வீட்டிற்கு போலீஸ் வருகிறது. எந்த வாரன்ட்டும் இல்லாமல் போலீஸ் ஜேம்ஸை கைது செய்கிறார்கள். ஜேம்ஸ்தான் கொலையாளி என்பதற்கு போலீஸிடம் இருந்தது ஒரே ஓர் ஆதாரம். அது, அவர் வீட்டு ’ஸ்மார்ட் வாட்டர் வாட்டர் டிஸ்பென்ஸர்’ தந்த டேட்டா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement