ஸ்க்ரீன் உடைந்த ஸ்மார்ட்போனிலிருந்து டேட்டாவை மீட்பது எப்படி? | How to recover data from broken Android phone

வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (13/12/2017)

கடைசி தொடர்பு:13:22 (13/12/2017)

ஸ்க்ரீன் உடைந்த ஸ்மார்ட்போனிலிருந்து டேட்டாவை மீட்பது எப்படி?

ஸ்மார்ட்போன்

மொபைல் கீழே விழுவது என்பது அடிக்கடி நடக்கும் விஷயம். அப்படி விழும்பொழுது பெரும்பாலும் பாதிக்கப்படுவது மொபைலின் டிஸ்ப்ளேதான். அதை புதிதாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் அல்லது தற்காலிகமாக செயல்படாமல் போகலாம். நீரில் விழுந்தாலும் மொபைலின் திரை பாதிக்கப்படும். அப்பொழுது மொபைலில் இருக்கும் தொடர்பு எண்கள், மெசேஜ், புகைப்படங்கள் போன்ற தகவல்களை அணுக முடியாது. தகவல்கள் மெமரி கார்டில் இருந்தால் பிரச்னையில்லை. மாறாக தகவல்கள் மொபைலின் உள்நினைவகத்தில் இருந்தால் என்ன செய்வது; இதுபோன்ற சமயங்களில் அவற்றை எப்படி மீட்பது?

இதுபோன்ற நேரங்களில் தகவல்களை மீட்பதற்காக பல மென்பொருள்கள் இருக்கின்றன அதில் ஒன்று Dr Fone. இந்த மென்பொருள், பயன்படுத்த எளிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி தகவல்களை அதிகமாக மீட்டுத்தருகிறது. அதுபோல பல சமயங்களில் தவறுதலாக மொபைலிலிருந்த தகவல்களை அழித்திருப்போம் அவற்றையும் இதன் மூலமாக பெற முடியும்.

எப்படி பயன்படுத்துவது:

மென்பொருள்

இந்த மென்பொருளால் ஆண்ட்ராய்டு மட்டுமின்றி ஐ.ஓ.எஸ் டிவைஸ்களிலிருந்தும் தகவல்களை மீட்க முடியும். இந்த மென்பொருள் இணையதளத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. இதை டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

ஸ்மார்ட்போனை USB மூலமாக கணினியில் இணைக்க வேண்டும். ஸ்மார்ட்போனில் USB debugging வசதியை ஆன் செய்து வைத்திருப்பது அவசியம். 

Dr Fone

ஸ்மார்ட்போன் கணினியில் இணைக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் தோன்றியவுடன் Scanning பக்கத்தில் நமக்குத் தேவையானவற்றை தேர்வுசெய்ய வேண்டும்.

இந்தப் பகுதியில் தொடர்பு எண்கள், மெசேஜ்கள், கேலரி என பல்வேறு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நமக்கு எது தேவையோ அதை தேர்ந்தெடுக்கலாம். அதன் பின்பு ஸ்கேன் செய்யலாம். Scan for deleted files என்பதை தேர்ந்தெடுப்பதன் மூலமாக அதிக தகவல்களைப் பெற முடியும்.

Dr Fone

அதன்பின்பு எவற்றையெல்லாம் மீட்க முடியுமோ அவற்றின் தகவல்கள் திரையில் காட்டப்படும். அவற்றை தேர்ந்தெடுத்து Recover செய்யலாம்.

USB debugging வசதி இல்லாத போது

மேலே குறிப்பிட்ட முறையைப் பயன்படுத்த மொபைலில் USB debugging வசதியை ஆன் செய்திருப்பது அவசியம். மொபைல் லாக் செய்யப்பட்டிருந்தாலோ, இயங்குதளம், டிஸ்ப்ளே போன்றவை பழுதடைந்தாலோ மொபைலில் இருக்கும் தகவல்களை மீட்க USB debugging ஆன் செய்யப்பட்டிருப்பது அவசியமான ஒன்று.

USB debugging

மொபைலின் செட்டிங்க்ஸ் பகுதியில் இருக்கும் Developer Options என்ற இடத்தில் சென்று இதை ஆன் செய்யலாம். கணினியில் ஸ்மார்ட்போன் இணைக்கப்பட்டிருக்கும்பொழுது மொபைலின் இயங்குதளத்தை நேரடியாக அணுக இது உதவும்.

ஆனால், ஒரு சில சமயங்களில் இந்த வசதியை ஆன் செய்ய மறந்திருப்போம். அந்த சமயத்தில் Android Broken Data Recovery என்பதை பயன்படுத்தலாம்.

வழக்கம் போல USB கேபிள் மூலமாக மொபைலை இணைக்க வேண்டும். பவர் பட்டன், ஒலியை குறைக்கும் பட்டன், ஹோம் பட்டன் மூன்றையும் சேர்த்து அழுத்த வேண்டும். இதன் மூலமாக டிஸ்ப்ளேவை பயன்படுத்தாமலே ஸ்மார்ட்போனை கணினியுடன் இணைக்கலாம். தற்பொழுது ஒரு சில ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது.

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மொபைலில் இருக்கும் தகவல்களை வேறொரு சாதனத்தில் பேக்அப் செய்து வைப்பது நல்லது. அல்லது மொபைலில் இருக்கும் கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை பயன்படுத்துவதன் மூலமாகவும் தகவல்களைப் பாதுகாக்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்