Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹாய் டிஜிட்டல் ரேடியோ... பை பை எஃப்.எம்! - ரேடியோவுக்கு மூடுவிழா நடத்தின நார்வே

டிஜிட்டல் ரேடியோ

இந்தியா 1983ல் கிரிக்கெட்டில் உலகக் கோப்பை வென்றதை நிறைய மக்களுக்குத் தெரிவித்த ஊடகம் ரேடியோவாகத்தான் இருக்கும். அந்தக் காலத்தில் ரேடியோ கமென்ட்ரிக்கென ஒரு பெரிய ரசிகப் பட்டாளமே இருந்தது. இடையில் சில ஆண்டுகள் தொலைக்காட்சியின் அசுர வளர்ச்சிக் காரணமாக ரேடியோ ஓய்வெடுத்தது. அதன் பின், 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எஃப்.எம். சேனல்கள் மீண்டெழுந்தன. மொபைல் போன்களின் வளர்ச்சியும் எஃப்.எம். ரேடியோக்களுக்கு வாழ்வளித்தன. ஆனால், ஸ்மார்ட்போன்கள் காலத்தில் அது மீண்டும் சரிவைச் சந்தித்தது. ஃப்ளாக்‌ஷிப் மாடல் மொபைல்களில் எஃப். எம் வசதியே தரப்படுவதில்லை. இந்தச் சூழ்நிலையில், நார்வே நாடு தனது மொத்த ரேடியோச் சேவையையும் டிஜிட்டலாக மாற்றியிருக்கிறது. இனி அந்த நாட்டில் எஃப்.எம் சேனல்களே கிடையாது. வெறும், டிஜிட்டல் ரேடியோ மட்டும்தான். இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது டிஜிட்டலை நோக்கியப் பயணத்தை நார்வே தொடங்கியது. அது, டிசம்பர் மாதம் முழுமையடைந்திருக்கிறது.

டிஜிட்டல் ரேடியோ:
ரேடியோ அலைகளின் அடுத்த தலைமுறைதான் டிஜிட்டல்ரேடியோ. இதில், டிஜிட்டல் சிக்னல்களை டிஜிட்டல் ரிசீவர்கள் உள்வாங்கி, நமக்கு ஏற்ற வகையில் கேட்கும் ஒலிகளாக மாற்றும். டிஜிட்டல் என்பதால் இதன் துல்லியமும் தரமும் அதிகம். எஃப்.எம் ரேடியோக்களில் இந்த சிக்னல் அனலாக் சிக்னலாக இருந்தன.

என்ன வித்தியாசம்:
டிஜிட்டல் ரேடியோவில் ஒலியின் தரம் அதிகம். துல்லியமான சத்தத்தையும் நம்மால் கேட்க முடியும். கூடவே, அந்த ஒலிக்கேற்ற குறிப்புகளை எழுத்துகளாக சிக்னல் கடத்தும். நமது ரிசீவரின் டிஸ்ப்ளேயில் பாடல் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம். இவை தவிர வானிலை அறிவிப்புகள், செய்திகள் ஆகியவையும் பகிர முடியும். மேலும், குறைவான பேண்ட்விட்த் கொண்டு அதிக சிக்னல்களைக் கடத்தும். அதனால், குறைவான செலவே ஆகும்.

என்ன மைனஸ்:
என்ன மழை பெய்தாலும் கேபிள் டிவி வேலை செய்யும். ஆனால், டி.டி.ஹெச் செய்யுமா? அதே பிரச்னைதான் இங்கேயும். ‘ஆனா ஹீரோதான் சார். நான் வெயிட் பண்றேன்” என்பதுதான் டிஜிட்டல்ரேடியோவின் பன்ச் ஒன்று, தரமான சிக்னல்களைத் தரும். அல்லது, வரவே வராது.

digital radio

செலவு:
அனலாக் எஃப்.எம் ரிசீவர்கள் மிக குறைந்த விலையிலே கிடைத்தன. ஆனால், டிஜிட்டல் ரிசிவர்கள் அப்படி இருக்காது. அதனால், ஆரம்பச் செலவு என்பது அதிகமாக இருக்கும். 

எதிர்காலம்:
டிஜிட்டல்ரேடியோ நல்ல விஷயம்தான். ஆனால், கூடவே இணைய ரேடியோ என்ற விஷயமும் வளர்ந்து வருகிறது. இன்டெர்நெட் டேட்டா அதிகப் பணமெடுக்கும் விஷயமாக இருந்தவரை வேறு கதை. இன்று தினமும் 2 ஜி.பி. மொபைல் டேட்டாவே 15 ரூபாய்க்கு கிடைக்கிறது. மாதம் 1000 ஜி.பி பிராட்பேண்டுக்கு 1000 ரூபாய் மட்டுமே செலவாகிறது. இந்தச் சூழலில் இணைய ரேடியோ பெரிதாக வளரும் வாய்ப்புண்டு. டிஜிட்டல் ரேடியோவை விட இணைய ரேடியோவில் துல்லியமும் தரமும் அதிகம். அது மட்டுமின்றி, நமக்குப் பிடித்த பாடலை கேட்கும் வசதியும் அதிலுண்டு. இருந்தாலும், டிஜிட்டல் ரேடியோவுக்கு இணையம் தேவையில்லை என்பது வலுவான பாயின்ட் தான்.

நார்வே:
ஐரோப்பா நாடுகள் அனைத்துமே டிஜிட்டல் ரேடியோ பக்கம் திரும்பிவிட்டன. அதில் நார்வேதான் முழுமையாக மாறின நாடு. டிஜிட்டல் ரேடியோவுக்கு மாறிய ஸ்டேஷன்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை முதலில் கடும் சரிவைச் சந்தித்தது. ஆனால், பின்னர் அது சரியானதாகச் சொல்கிறார்கள். அதனால், மக்கள் மாற்றத்துக்குச் சரியான கால அவகாசம் தந்தால், டிஜிட்டல் ரேடியோவுக்கு அவர்கள் தயாராகிவிடுவார்கள் என்கிறது நார்வே.

இந்தியா:
இந்தியாவிலும் டிஜிட்டல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. TRAI தான் இதை முன்னெடுக்க வேண்டும். சென்ற ஆண்டு இதுபற்றி பேசப்பட்டது. ஆனால், அதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஏனெனில், இந்திய எஃப்.எம் நிறுவனங்கள் அடுத்த 15 ஆண்டுக்கும் சேர்த்து முன்பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்கியிருக்கிறார்கள். இப்போது டிஜிட்டலாக மாறினால் அந்த லைசென்ஸ் செல்லா காசாகிவிடும். மேலும், டிஜிட்டல் ரிசிவரின் விலை இந்திய ரூபாயில் 2000 முதல் 20000 வரை இருக்கும். அந்த மாற்றத்துக்கு இந்தியர்கள் செலவு செய்வார்களா என்பது கேள்விக்குறி. அப்படி மாறாமல் போனால், ரேடியோ என்ற துறையின் வருமானம் பாதிக்கப்படும். இப்போதைக்கு இந்தியாவுக்கு டிஜிட்டல் ரேடியோ முழுமையாக வர வாய்ப்பில்லை. சில குறிப்பிட்ட நகரங்களுக்கு வரலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement