நோக்கியாவைப் போல 'ஐ யம் பேக்' சொல்ல, புதிய மொபைலுடன் போராடும் சோனி..! | Sony future mobiles images Leaked

வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (19/12/2017)

கடைசி தொடர்பு:13:31 (19/12/2017)

நோக்கியாவைப் போல 'ஐ யம் பேக்' சொல்ல, புதிய மொபைலுடன் போராடும் சோனி..!

சோனி எரிக்சன் மொபைல்

நோக்கியாவைத் தவிர்த்து உங்களுக்குப் பிடித்த மொபைல் எதுவென்று கேட்டால் பலரின் பதில் சோனி எரிக்சன் என்பதாகத்தான் இருக்கும். ஒரு காலத்தில் மொபைல் சந்தையில் பெரும் இடம் நோக்கியாவின் கையில் இருந்தது. அதைத் தவிர மோட்டோரோலா, எல்ஜி போன்ற நிறுவனங்களின் பங்கும் சந்தையில் இருந்தது. ஆனால், ஒரு முழுமையான மல்டிமீடியா மொபைலாக பார்க்கும்பொழுது சோனி எரிக்சன் மற்றவற்றைவிட முன்னிலையில் இருந்தது.

sony ericsson

மியூசிக் என்றல் வாக்மேன், கேமராவுக்கு சைபர்ஷாட் என்பது சோனியின் தாரக மந்திரம். மற்ற போன்களில் பாடல்களை ரிங்டோன்கள் வைப்பதே சாதனையாக இருக்க, ஒரு முழுமையான மல்டிமீடியா மொபைலாக அசத்தியது சோனி எரிக்சன். சோனியின் கேமராவும், சவுண்ட் குவாலிட்டியும் பலரைக் கவர்ந்திழுத்தது. டெக்னாலஜி உலகில் ஏற்படும் வேகச்சுழலலில் சோனியும் சிக்கியது. 2009-ம் ஆண்டு வரை அதிகம் விற்பனையான மொபைல்கள் இடத்தில் முதல் 5 இடங்களைப் பிடித்திருந்தது சோனி. அதன் பிறகு படிப்படியாக அந்த இடம் அதன் கையை விட்டுப் போனது. இருந்தாலும், நோக்கியா அளவுக்கு தனது நிலைமையை மோசமாக்க விடவில்லை சோனி. முரண்டு பிடிக்காமல் இடத்துக்குத் தகுந்தவாறு மாறியது. 2010-க்குப் பின்னர் ஆண்ட்ராய்டின் ஆதிக்கம் தொடங்கவும் தனது மொபைல்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தது. அதன் பின்னரும் தனது மொபைல்களில் வசதிகளை சிறப்பாகவே கொடுத்து வந்தது.

மென்பொருள் விஷயத்தில் அப்டேட்டான சோனி அதன் வடிவமைப்பில் அப்டேட்டாக மறந்தது. சோனி ஸ்மார்ட்போன்களின் தனித்தன்மையான வடிவமைப்பு அதற்கு வேறு விதத்தில் பிரச்னையைக் கொண்டுவந்தது. ஒரு மொபைலை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கினாலும் சரி, ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கினாலும் சரி இரண்டுமே ஒரே மாதிரியாக இருந்தது. எடுத்துக்காட்டாக ஸ்மார்ட்போன்களில் 4K டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருப்பது Sony Xperia Z5 Premium என்ற ஒரே ஒரு ஸ்மார்ட்போன் தான் விலை ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் அதிகம். ஆனால், தோற்றம் என்று பார்த்தால் அதே பழைய வழக்கமான வடிவமைப்பு. எனவே, ஏற்கெனவே சோனி மொபைல் வைத்திருப்பவர்கள் மீண்டும் அதை வாங்குவதற்குத் தயக்கம் காட்டினார்கள். அதனாலேயே, பல புதிய வசதிகளை சோனி தனது மொபைல்களில் கொடுத்தாலும் அது மக்களை பெரிதாக கவரவில்லை.

இணையத்தில் வெளியானவை

இந்த நிலையில்தான் சோனி நிறுவனம் தனது மொபைல்களில் வடிவமைப்பை மெருகேற்றும் முயற்சியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் சில படங்கள் இணையத்தில் வெளியாகியிருகின்றன.

சோனி

இந்தப் படங்களில் சோனி தனது வடிவமைப்பை பெருமளவில் மேம்படுத்தியிருப்பது தெரிகிறது. இதுதவிர டூயல் கேமராக்கள் இருப்பது இன்னும் அந்த மொபைல்கள் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. ஃபுல் வியூ டிஸ்ப்ளே, டூயல் கேமரா வசதிகள் இன்னும் சோனி மொபைல்களில் கிடையாது. இந்த போன்களில் புதிய குவால்கோம் ஸ்னாப்ட்ராகன்  845 ஆக்டாகோர் ப்ராசஸர், 6 ஜிபி ரேம், டூயல் கேமரா, ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் ஃபுல் வியூ வசதியைக் கொண்ட 4K டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்த வருடம் நோக்கியா மீண்டு வந்ததுபோல மீண்டும் தனது இருப்பைப் பதிவு செய்யும் முயற்சியில் இருக்கும் சோனிக்கு இந்த மாற்றம் நிச்சயமாக உதவியாக இருக்கும். எனவே, அடுத்த வருட கொண்டாட்டத்துக்குத் தயாராக இருங்கள் சோனி ரசிகர்களே..!


டிரெண்டிங் @ விகடன்