“இவங்கள பத்தின தகவல்களைக் கொடுங்க..!” - ஃபேஸ்புக்கிடம் கோரிக்கை வைக்கும் அரசு

ஃபேஸ்புக்

இன்று உலகை ஆளும் சாம்ராஜ்யம் டிஜிட்டல் என்று வைத்துக்கொண்டால், அதன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது இருப்பது டேட்டா என்னும் ராஜாதான். ஸ்மார்ட்போன், கணினி, இணையம் என ஒருவர் எந்த நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும் அவரைப் பற்றிய தகவல்கள் அவருக்கே தெரியாமல் அறுவடை செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கூகுளில் ஒருவர் தேடும் ஒவ்வொரு வார்த்தை முதல் மேப்பில் ஒரு இடத்துக்கு வழி தேடுவது வரைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்படுகின்றன.  

இப்படி சேகரிக்கப்படும் டேட்டாவை கூகுள், ட்விட்டர், ஃபேஸ்புக் என அனைத்து நிறுவனங்களும் தங்களது லாபத்துக்காக பயன்படுத்துவது தெரிந்ததுதான். அதே டேட்டாவை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுகளும் பயன்படுத்துகின்றன என்பது பெரும்பாலோனோர் அறியாத விஷயம். சரி பொதுமக்களின் தகவல்களை அரசு எதற்காக பயன்படுத்துகிறது?


குற்றமும் டேட்டாவும்

டேட்டா

ஃபேஸ்புக் நிறுவனம் ஒவ்வொரு அரையாண்டுக்கு ஒரு முறை transparency report என்ற அறிக்கையை வெளியிடுகிறது. இந்த அறிக்கையில் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்காக அரசாங்கம் தங்களிடம் வைத்த கோரிக்கைகளின் எண்ணிக்கையை ஃபேஸ்புக் தெரிவிக்கும். அப்படி இந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலத்துக்கான அறிக்கையை தற்பொழுது வெளியிட்டிருக்கிறது.

குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், அரசின் கண்காணிப்பில் இருப்பவர்கள் போன்றவர்களின் ஃபேஸ்புக் தகவல்களை அணுக அரசு அனுமதி கேட்கும். இதன் மூலம் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள், அவரின் இருப்பிடம், IP முகவரி போன்ற தகவல்களைப் பெற முடியும். பெரும்பாலும் திருட்டுச் சம்பவங்கள், ஆள்கடத்தல் போன்ற குற்றச்செயல்களுக்காகவே அரசு அணுகுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கிறது. 

தகவல்

உலகம் முழுவதும் கடந்த வருடம் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்காக 64,279 கோரிக்கைகளை அரசுகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் வைத்திருக்கின்றன. அது இந்த வருடம் 78,890 ஆக அதிகரித்திருக்கிறது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்பொழுது 21 சதவிகிதம் அதிகம். இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த வருடம் மொத்தமாக 9,690 கோரிக்கைகள் அரசிடம் இருந்து வந்துள்ளன. 13,490 க்கும் மேற்பட்ட தனிநபர் தகவல் தொடர்பான கோரிக்கைகளும் வந்தன.. இதில் அவசரமாக தகவல் தேவைப்பட்டவை 262 கோரிக்கைகள். கடந்த 2013-ம் ஆண்டு 3,245 ஆக இருந்த கோரிக்கைகளின் எண்ணிக்கை தற்பொழுது 9,690 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அதிகரித்துவருகிறது. அரசு வைக்கும் கோரிக்கைகள் தவிர காப்புரிமை, தனிப்பட்ட தகவல்கள் நீக்கம் போன்ற கோரிக்கைகளும் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் வைக்கப்படுகின்றன. அரசோ அல்லது தனிநபரோ அவர்கள் கேட்கும் தகவல்களின் கோரிக்கைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் சட்டத்துக்கு உட்பட்டு அவற்றை அளிக்கிறது ஃபேஸ்புக் . 

facebook

இதுபோன்ற தகவல்களை அரசு பாதுகாப்புக் காரணங்களுக்காக பல நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறது. ஆனால், ஃபேஸ்புக் மட்டுமே இதுதொடர்பான அறிக்கையை வெளியிடுகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களைப்  பெற முடியும் என்பதால் குற்ற வழக்குகளில் இது அரசுக்கு உதவியாக இருக்கிறது. இந்தியாவின் இணையதள சட்டத்துக்கு உட்பட்டு இந்தத் தகவல்களை அளிக்கிறது ஃபேஸ்புக். நாட்டுக்கு நாடு இந்தச் சட்டம் மாறுபடுவதால் மற்ற நாடுகளில் ஒருவரின் அக்கவுண்டை  முழுமையாக அரசால் அணுக முடியும்.

ஸ்டேட்டஸ்லாம் விளையாட்டா போடாதிங்க ப்ரோ... உஷார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!