வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (28/12/2017)

கடைசி தொடர்பு:16:23 (28/12/2017)

ஃபேஸ்புக் கணக்குத் தொடங்க ஆதார் அவசியம்... வைரலான செய்தி உண்மையா? #Facebook

ஃபேஸ்புக் ஆதார்

இந்தியாவில் மட்டும் சுமார் 24 கோடி பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். உலகளவில் பார்த்தால் நாம் 2-வது இடம். ஆனால், இன்னும் முக்கால்வாசி மக்கள்தொகை ஃபேஸ்புக் உலகுக்குள் வர வேண்டியிருக்கிறது. அது தானாக கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதற்கு சின்ன சறுக்கல் வந்திருக்கிறது. 

“இனிமேல் ஃபேஸ்புக்கில் கணக்கு ஆரம்பிக்க ஆதார் இருக்க வேண்டுமாம்” - என்ற செய்தி நேற்று இணையத்தில் வைரல் ஆனது ஆதார் இணைப்பு என்பது நமக்கு புதிதல்ல. சிம் கார்டில் தொடங்கி பான் கார்டு வரை அத்தனை கார்டுகளையும் ஆதாருடன் இணைத்துக் கொண்டுதானிருக்கிறோம். இருந்தாலும் இந்தச் செய்தி கொஞ்சம் நெட்டிசன்கள் மத்தியில் திகிலைக் கூட்டியது என்றே சொல்ல வேண்டும். ஆனால், உண்மையில், ஃபேஸ்புக் ஆதாரைக் கேட்கவில்லை. ஆதார் கார்டில் இருப்பது போலவே பெயரைக் குறிப்பிடத்தான் கேட்டிருக்கிறது.  

ஃபேஸ்புக் நிறுவனமும் இதை உறுதி செய்திருக்கிறது. இதுதொடர்பாக பேசிய ஃபேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் "இந்த டெஸ்டிங் சில காலமாகவே நடந்து வருவதுதான். பயனர்கள் தங்கள் நிஜப்பேரை பயன்படுத்தினால் நண்பர்கள் மற்றும் உறவினர்களால எளிதில் தேட முடியும். அதனால், ஐ.டி. கார்டில் இருப்பது போலவே பெயரைக் கேட்கிறோம். இது ஒரு ஆப்ஷனல் வசதிதான். ஆதார் கார்டில் இருப்பது போன்றே பெயர் தர வேண்டும் என்ற அவசியம் கிடையாது” என்றார்.

ஃபேஸ்புக் கொஞ்சம் லேட் தான். அமேசான்(amazon ) நிறுவனம் பயனாளர்களிடம் ஆதார் விவரங்களைக் கேட்கத் தொடங்கி உள்ளது. பெங்களுரைச் சேர்ந்த zoom Car நிறுவனம் கூட ஆதார் கார்டு இல்லாமல் புக்கிங் செய்யப்படமாட்டாது என்று கூறியுள்ளது. இப்படி தனியார் நிறுவனங்கள் கூட ஆதாரை கட்டாயப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவற்றைப் போலவே ஃபேஸ்புக்கும் ஆதாரை கேட்கும் காலம் விரைவில் வருமென்றும் டெக் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

சமூக வலைதள கணக்குக்கு ஆதார் எப்படி பயன்படும்? பேஸ்புக்கில் ஏன் ஆதாரை இணைக்க வேண்டும்? எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்? இந்த முறை சரியானதா? 

24 கோடிக்கும் மேல் ஃபேஸ்புக் கணக்குகள் இந்தியாவில் இருக்கின்றன. ஆனால், அவற்றில் சுமார் 30% - 35% போலி கணக்குகளும், ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களும் மற்றும் தேவையில்லாத ஆபாசக் கணக்குகளும் உண்டு. அவற்றை நீக்குவதற்கு ஆதாரை இணைக்கும் நடைமுறை பயன்படப் போகிறது.

எப்படி நடைமுறைப்படுத்தப்படும்?

ஃபேஸ்புக் அல்லது வேறு ஒரு சமூக வலைதளத்தில் கணக்கை ஆரம்பிக்க உங்களிடம் ஆதார் இருந்தால் மட்டும் போதும். ஆதாரின் ஸ்கேன் நகலை (Scanned Copy) அப்லோட் செய்ய வேண்டும். அதை ஃபேஸ்புக் ஆராய்ந்து, அதன் பின் கணக்கு திறக்கப்படும். ஒரு வேளை தவறான நகலை ஸ்கேன் (scan) செய்து அப்லோடு பண்ணினாலோ உங்கள் கணக்குடன் ஒத்துவரவில்லை என்றாலோ உங்கள் கணக்கு 15 நாள்கள் முடக்கி வைக்கப்படும் (Suspend). இதனால் தவறான எண்ணத்தில் புதுக் கணக்குகளை இனிமேல் உருவாக்க முடியாது. 

இதே காரணத்துக்காகத்தான் இந்திய அரசு மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி வருகிறது. 

நீங்கள் என்ன நினைக்கறீர்கள்? ஃபேஸ்புக் கணக்குக்குக் கூட ஆதார் அவசியமா? உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.


டிரெண்டிங் @ விகடன்