Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மின்பற்றாக்குறை முதல் குடிநீர் தட்டுப்பாடு வரை... இந்தியாவின் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் மனோஜ் பார்கவா!

மனோஜ் பார்கவா

ஒரு மனிதனுக்கு அத்தியாவசியத் தேவைகள் என்னென்ன? உணவு, உடை, இருப்பிடம். சமீபகாலமாக இணையத்தையும் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், இந்த நான்கையும் முழுமையாக்க இன்னொரு அத்தியாவசியத் தேவை உண்டு. அது மின்சாரம். 
பராமரிப்பு பணி என்று முன்னறிவிப்பு ஏதுமின்றி அரை நாள் மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் ஃபேஸ்புக்கில் பொங்கல் வைக்கும் நமக்கு, நம் நாட்டின் கணிசமான மக்களின் வீடுகளில் மின்சாரம் இல்லை என்பது தெரிவதில்லை. உலக மக்கள் தொகையில் 18 சதவிகிதத்தை இந்தியா வைத்திருந்தாலும், மின் இணைப்பு கிடைக்காத உலக மக்கள் தொகையில் நாம் 40 சதவிகிதத்தைக் கொண்டிருக்கிறோம்.

மின் இணைப்புகள் கொடுப்பதில் நம் நாட்டில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. முதல் சிக்கல் புவியியல் சார்ந்தது. சென்று சேர்வதற்குக் கடினமான இடங்களுக்கு மின்சார இணைப்புக்கான உட்கட்டமைப்புகளும், இணைப்பும் கொடுப்பது சற்றே கடினமானது. இரண்டாவது மின் கம்பிகள் திருடப்படுதல் மற்றும் கொக்கி போடுதல் எனப்படும் மின்சாரத் திருட்டு ஆகியவை. இதனால் உட்கட்டமைப்பு சேதமாகிறது. 

மின்சாரம் இல்லாத காரணத்தால் இரவு வெளிச்சத்துக்காக மண்ணெண்ணெய் விளக்குகள் அல்லது மெழுகுவத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் கண்பார்வை பாதிக்கப்படுவதுடன், மூச்சு விடுதல் தொடர்பான சிக்கலுக்கும் ஆளாகின்றனர். மரபு சாரா மின்சாரம், முக்கியமாக சூரிய சக்தியைப் பயன்படுத்துதல் இதில் பல சிக்கல்களைத் தீர்க்கும் என்றாலும், கிராமவாசிகளிடம் அவ்வளவு முதலீட்டை நாம் எதிர்பார்க்க முடியாது. இதுபோன்ற நிலையில்தான் மனோஜ் பார்கவா போன்றவர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். 

மனோஜ் பார்கவா அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தொழிலதிபர். 5 hours energy என்பதுதான் அவரின் முதல் அடையாளம். ஒரு நபரை ஐந்து மணி நேரம் விழிப்புடன் வைத்திருக்கக் கூடிய உற்சாக பானத்தை அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்திதான் அவர் அங்கே பிரபலமானார். தன் வருமானத்தில் 99 சதவிகிதத்தை உலக மக்களை அழுத்திக்கொண்டிருக்கும் முக்கியமான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் செலவழிக்க உறுதியெடுத்திருக்கிறார்.

அவர் நிறுவியிருக்கும் சோதனைச் சாலையில் சுத்தமான நீரைத் தரும் rainmaker, யூரியாவுக்கு மாற்றான இயற்கை உரம் தயாரிக்கும் முறை, சூழலை மாசுபடுத்தாத ஜெனரேட்டர்கள் என ஏகப்பட்ட திட்டங்கள் உண்டு.

“மின்சாரம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். கல்வி, தொழில், தகவல் தொடர்பு, வருமானம் என பல விஷயங்களில் உங்களை அடுத்தத் தளத்துக்குச் செல்லக் கூடியது. ஆனாலும் உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேல் 2-3 மணி நேர மின்சாரம் மட்டுமே கிடைக்கப் பெறுகிறார்கள்” என்கிறார் மனோஜ். இந்தச் சிக்கலைத் தீர்க்க நகர்த்தக் கூடிய மின்சாரம் மட்டுமே ஒரே வழி. எப்படி கைக்கு அடக்கமான, இடத்துக்கு இடம் சுமந்து செல்லக் கூடிய கைபேசி பல விஷயங்களை மாற்றி அமைத்ததோ அதுபோல நகர்த்திச் செல்லக் கூடிய, இடத்துக்கு இடம் மாற்றிக் கொள்ளக் கூடிய மின்சார அமைப்பே இதனைத் தீர்க்க முடியும் என்று மனோஜ் தீர்க்கமாக நம்புகிறார். 

மனோஜ் பார்கவா

இவர் ஒருங்கிணைத்த ஒரு பொறியாளர் குழு, சூரிய சக்தி மூலம் மின்சாரம்‌ தயாரித்து அளிக்கும் ஒரு சிறிய அமைப்பை வடிவமைத்திருக்கிறார்கள். டார்ச்லைட் போன்ற ஒரு விளக்கு, ஒரு‌ சிறிய அறைக்கு வெளிச்சம் வருமாறு ஒரு விளக்கு, ஒரு யு.எஸ்.பி போர்ட், சிறு சிறு எலெக்ட்ரானிக் உபகரணங்களை இயக்க 12 வோல்ட்‌ மின்சாரம் தரக்கூடிய ப்ளக் பாயின்ட் கொண்ட அமைப்பில் அடிப்படை‌ மின்சாரத் தேவைகள் பூர்த்தியாகிவிடும். மின்சாரம்‌ கிடைக்கும் நேரத்தில் இதனை மின்சாரம் மூலம் சார்ஜ் ஏற்றிக்கொண்டு பயன்படுத்தலாம். 2-3 மணி நே‌ரம் மட்டும் மின்சாரம் வரும் இடங்களில், மின்சாரம் இருக்கையில் சார்ஜ் போட்டுக்கொண்டு, இல்லாதபோது பயன்படுத்தலாம். இதற்கு ஹான்ஸ் பவர் பேக் HANS power pack என்று பெயரிட்டிருக்கிறார். 

சோலார் பேனல்கள் கொண்ட மடக்கக் கூடிய சூட்கேஸ் போன்ற அமைப்பின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் சூரிய சக்தி மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். வேண்டுமெனில் பவர் பேக்கைச் சார்ஜ் ஏற்ற சைக்கிள்‌ போன்ற ஒன்றையும் HANS free electric bike என்ற பெயரில் மனோஜ் பார்கவாவின் குழு வடிவமைத்திருக்கிறது. ஒரு மணி நேரம் அந்தச் சைக்கிளை ஓட்டுவதன் மூலம் ஒரு நாள் முழுமைக்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துவிட முடியும். ஹான்ஸ் பவர் பேக்கிற்கு 12 வருட வாரண்டியும் தருகிறார்கள். இதற்கு 14500 ரூபாய் விலை நிர்ணயித்திருக்கிறார்கள். பார்கவாவின் நிறுவனம் இதனை லாப நோக்குடன் செய்யவில்லை என்றாலும் தரம் குறைந்தப் பொருளைத் தரக்கூடாது என்பதால் இந்த விலை. கிராமவாசிகளுக்கு இந்தத் தொகை பெரிதாகத் தெரிந்தாலும் குறைந்தபட்சம் 12 வருடங்களுக்கு அவர்கள் மின்சாரக் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்ளலாம்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சரும், மாநில நிர்வாகமும் இந்தப் பவர் பேக்கின் மீது ஆர்வம் கொண்டு ஒரு லட்சம் பவர் பேக்குகள் வாங்கத் திட்டமிட்டுள்ளனர். மின்சாரம்‌ மட்டுமல்லாமல் மனோஜ் பார்கவாவின் ஆராய்ச்சி சுத்தமான நீர், அதிக மகசூல் தரும் யூரியாவுக்கு மாற்றான இயற்கை‌ உரம் என்று முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண விரும்பும் ஆராய்ச்சிகள். 

உலக மருத்துவமனைகளின் படுக்கைகளில் பாதிக்குப் பாதி சுகாதாரமான நீர் இல்லாததால் ஏற்படும் நோய்கள் தாக்கியவர்களால் நிரம்பியுள்ளன‌. இதற்குத் தீர்வாக ரைன் மேக்கர் Rainmaker என்ற கருவியை வடிவமைத்து அதன் மூலம் குடிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தகுதி இல்லாத நீரையும் குடிக்கத் தகுந்ததாக மாற்றமுடியும் என்கிறார். ஒரு நிமிடத்துக்கு பத்து லிட்டர் நீரைச் சுத்திகரிக்க ரைன்மேக்கர் வெறும் 1.5 கிலோவாட் மின்சாரத்தையே பயன்படுத்துகிறது. இது, ஒரு ஹேர் டிரையர் ஓடும்போது எடுத்துக்கொள்ளும் மின்சாரத்தின் அளவே என்பதால் ஒரு சிறு ஜெனரேட்டர் மூலம் இதை இயக்கிவிட முடியும். நீராதாரம் குறைந்த பகுதிகளில், வறட்சி்யின் முழு கோரத்தில் சிக்குவதை ரைன்மேக்கர் சில பத்தாண்டு காலம் தள்ளிப்போடும் என்று‌ நம்பிக்கை அளிக்கிறார். 

யூரியா போன்ற செயற்கை உரங்களால் நிலம் பாதிப்படைவதும், பாசனத்துக்கு அதிக நீர் செலவாவதும் இன்றைய மிகப்பெரிய விவசாயச் சிக்கல்கள். யூரியா பயன்படுத்துகையில் மண்ணின் நுண்ணுயிர் வளம் பாதிப்படைகிறது. இதனால்‌ தாவரங்களின் நோய் எதிர்ப்புத்திறன் குறைகிறது. இப்படி பலதரப்பட்ட சிக்கல்களால் விவசாயிகள் வெறும் 2% லாபம் மட்டுமே ஈட்டுகிறார்கள்‌. சிவான்ஷு ஃபார்மிங் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட முறையில் வயலுக்கு அருகில்‌ கிடைக்கும் எதைக்கொண்டு வேண்டுமானாலும் நுண்ணுயிர்ச் சத்துகொண்ட உரத்தை 12 நாள்களில் உற்பத்தி செய்து பயன்படுத்தலாம் என்று உறுதியளிக்கிறார் பார்கவா. கள ஆய்வுகளும் சிவான்ஷு முறையில் நம்பிக்கை அளிக்கின்றன. 

”மத்திய அரசு எங்களுடன் ஒத்துழைத்தால்‌ இதை எங்களால்‌ இன்னமும் சிறப்பாகச் செய்யமுடியும். ஆனால் தொழில் நடத்துவதற்கு இந்தியா சற்றே கடினமான நாடு” என்கிறார் மனோஜ் பார்கவா. சிக்கிம்‌ மாநிலத்தில் பார்கவாவின் பொறியாளர் குழு வடிவமைத்த பொருட்களைப் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 

மனோஜ் பார்கவாவின் முயற்சிகள் அனைத்துமே இந்தியா எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளுக்கான தீர்வை நோக்கியே இருக்கின்றன. அதில் அவர் வெற்றிப்பெற்று, நமக்கான விடிவெள்ளி ஆவாரா என்பது அரசின் கையிலும் காலத்தின் கையிலும் இருக்கிறது. ஆனால், காலம் குறைவாகவே இருக்கிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ