உங்கள் ‘மாடர்ன் கைரேகை’ எது என்பதை உணர்த்திய கொலை வழக்கு! #GadgetTippedCrimes அத்தியாயம் 5 | Mobile phones are fingerprints of gadget era

வெளியிடப்பட்ட நேரம்: 08:56 (02/01/2018)

கடைசி தொடர்பு:19:27 (02/01/2018)

உங்கள் ‘மாடர்ன் கைரேகை’ எது என்பதை உணர்த்திய கொலை வழக்கு! #GadgetTippedCrimes அத்தியாயம் 5

மொபைல்

மொபைல் போன்தான் மாடர்ன் கைரேகை. திருடர்களும் குற்றவாளிகளும் இனி அதிகம் பிடிபடப் போவது கைரேகைகளால் அல்ல; மொபைல் போன்களால்தான். அப்படி ஒரு வழக்குதான் இது.

பிரகாஷ் வான்கடே மும்பையைச் சேர்ந்தவர். அதிகம் உடலுழைப்புத் தேவைப்படாத வங்கி வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். வயது 60. அவர் மனைவி பெயர் ஆஷா வான்கடே. 

2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆஷா வான்கடே அவர்கள் வீடிருக்கும் பகுதியின் காவல் நிலையத்துக்கு வந்தார். தன் கணவர் 15 நாள்களாக வீட்டுக்கு வரவில்லையென்றும் அவர், தான் இரண்டு வாரங்கள் தனியே வாழ விரும்புவதாகவும் அதுவரை தன்னைத் தேட வேண்டாம் எனச் சொன்னதாகவும் அழுதுகொண்டே சொன்னார் ஆஷா. சின்னச் சின்ன சண்டைகள் தங்களுக்குள் வந்தாலும் பெரிய பிரச்னையில்லை என்பது ஆஷாவின் ஸ்டேட்மெண்ட். 15 நாள்கள் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவருக்குப் பயம் அதிகம் ஆகி காவல் நிலையத்துக்கு வந்ததாக சொன்னார் ஆஷா.

காவல்துறை ஆய்வாளர் தனது விசாரணையைத் தொடங்கினார். சரியாக ஏப்ரல் 27 ஆஷா புகார் தெரிவித்திருக்கிறார். ஆஷா பிரகாஷைக் கடைசியாக பார்த்தது ஏப்ரல் 12. காவலர்களின் விசாரணையில் ஆஷாதான் சந்தேகப் பட்டியலில் முதல் ஆள். ஆனால், ஆஷாவுக்கு எதிராக எந்த சாட்சியும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு மேல் விசாரணை நீடித்தது. ஆனாலும், போலீஸால் உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

போலீஸாரால் அடுத்தக் கட்டத்துக்கே நகர முடியாத சூழல். அவர்கள் மொபைலை ஏற்கெனவே வாங்கி அலசியிருந்தார்கள். ஆனால், எந்த க்ளூவும் சிக்கவில்லை. எப்படியும் ஒரு க்ளூ ஆவது கிடைக்குமென மீண்டும் ஆஷாவின் குடும்ப உறுப்பினர்களின் மொபைல்களை ஆராயத் தொடங்கியது போலீஸ். இந்த முறை அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அது, ஆஷா பிரகாஷைக் கடைசியாக பார்த்த ஏப்ரல் 12-ம் தேதி மூன்று பேர் ஒன்றாக இருந்தார்கள் என்ற தகவல். அந்த மூவர், ஆஷா, அவரது தங்கை வந்தனா கோர்வே மற்றும் வந்தனாவின் பாய் ஃப்ரெண்ட் நிலேஷ். நிலேஷ் ஒரு ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல தகவல்களைப் பெற்று அது தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டவர். இருவரும் வசித்து வந்தது அகமதுநகரில்.

மீண்டுமொருமுறை மொபைல் சொன்ன தகவலைச் சரி பார்த்தார்கள். மொபைல் எப்படி பொய் சொல்லும்? அவர்கள் ஒரே லொகேஷனில் இருந்திருக்கிறார்கள். ஆனால், விசாரணையின்போது இந்த விஷயம் மூவராலும் சொல்லப்படவே இல்லை. அலெர்ட் ஆனது போலீஸ். உண்மை என்ன என்பது தெரியும்வரை தான் போலீஸால் குற்றவாளியிடமிருந்து விஷயத்தை வரவைப்பது சிரமம். இவர்கள்தான் குற்றவாளி எனத் தெரிந்தால் போலீஸின் டிரீட்மெண்ட்டே வேறதானே? 

மொபைல்

முந்தைய அத்தியாயங்கள்

இந்த முறை ஆஷா வாய் திறந்துவிட்டார். “அவர் என்னை சந்தேகப்பட்டுட்டே இருந்தார். எனக்கு குழந்தைப் பொறக்கலைன்னா தப்பு என்கிட்டதான் இருக்கணுமா? அவர்ட்டயும் இருக்கலாம்ல? அதெல்லாம் புரிஞ்சிக்காம என்னைச் சந்தேகப்பட்டாரு. அதான் அவரைத் தீர்த்துக் கட்ட திட்டமிட்டோம்” என்றார் ஆஷா. திட்டமிட்டோம் என்றதுமே வந்தனாவையும் நிலேஷையும் அழைத்து வந்தது போலீஸ். மூவரும் உண்மையைக் கக்கினர்.

பிரகாஷைக் கொன்றுவிடலாம் என்ற எண்ணம் வந்ததும் வந்தனாவிடம் உதவி கோரியிருக்கிறார் ஆஷா. வந்தனா தன்னால் முடியாது என தனது பாய் ஃப்ரெண்ட் நிலேஷிடம் கேட்டிருக்கிறார். டீல் முடிவானது. பணம் கைமாறியது. 

ஏப்ரல் 10, 2016-ல் ஆஷாவும் பிரகாஷும் அகமதுநகருக்கு உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்றிருக்கிறார்கள். திரும்பும் வழியில் இருவரோடு நிலேஷும், வந்தனாவும் சேர்ந்துகொண்டார்கள். இவர்கள் நால்வரும் பயணித்தது நிலேஷின் நண்பருக்குச் சொந்தமான கார். வரும் வழியில் பிரகாஷுக்கு தூக்க மருந்து கலந்த குளிர்பானம் தந்திருக்கிறார்கள். அவர் மயக்கமானதும், அவர் தலையில் பலமாக தாக்கியிருக்கிறார்கள். அவர் இறந்ததும், உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி, அகமதுநகரிலிருந்து 30 கி.மீ தள்ளியிருக்கும் காட்டுப்பகுதிக்குள் புதைத்துவிட்டனர். பின், 15 நாள்கள் கழித்துதான் ஆரம்பத்தில் சொன்ன புகார் நாடகத்தை ஆஷா போலீஸிடம் அரங்கேற்றியிருக்கிறார். 

மொபைல் க்ளூ மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் ஆஷாவும் மற்ற இரண்டு குற்றவாளிகளும் சிக்கியிருக்க வாய்ப்பேயில்லை. அப்படியொரு தெளிவான திட்டத்தை வகுத்திருக்கிறார் நிலேஷ். டெக்னாலஜி விஷயத்தில் அவ்வளவு கூர்மையாக அவர் மூளை வேலை செய்யவில்லை. 

அதனால்தான் முதல் வரியில் இப்படி சொன்னேன். “மொபைல் போன் தான் மாடர்ன் கைரேகை. திருடர்களும் குற்றவாளிகளும் இனி அதிகம் பிடிபடப் போவது கைரேகைகளால் அல்ல; மொபைல் போன்களால்தான்.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்