500 ரூபாய்க்கு ஆதார் தகவல்கள் அவுட்..! நம் தகவல்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா?!

ஆதார் இணையதளம் (மாதிரி புகைப்படம்)

ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே அது தொடர்பான சர்ச்சைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லை. ஆதார் அட்டைக்காகச் சேகரிக்கப்படும் தகவல்கள் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறது என்பது தொடங்கி ஆதார் எண்ணோடு இணைத்திருக்கும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா என்பது வரை பல்வேறு சர்ச்சைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. 

அட்டை

அரசின் சேவைகளைப் பெற ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பல முறை அறிவுறுத்தியும் அதை யாருமே கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. வங்கிக் கணக்குகள், பான் கார்டு, ரேஷன்கார்டு எனப் பல்வேறு சேவைகளுக்கு அரசே ஆதார் எண்ணை மறைமுகமாகக் கட்டாயப்படுத்தி மக்களிடமிருந்து பெறுகிறது. அரசே உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத போது தனியார் நிறுவங்கள் என்ன செய்யும்? உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிம் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மொபைலுக்குக் குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டே இருந்தன தொலைதொடர்பு நிறுவனங்கள். பின்னர் அது தொடர்பாக சர்ச்சை எழவே தற்பொழுது, 'அரசு வழிகாட்டுதலின்படி' என்று வாக்கியத்தை மாற்றி தற்பொழுது குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றன. யாரும்கேள்வி கேட்கப்போவதில்லை என்று தெரிந்துவிட்டதால் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யும் இணையதளங்கள் கூட  ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி கேட்கின்றன. 

500 ரூபாய் செலவில்...ஒரு பில்லியன் டேட்டா

இந்நிலையில் வெறும் 500 ரூபாய் செலவில் பத்தே நிமிடத்தில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட ஆதார் தகவல்களைப் பெற்றுவிட்டதாக செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஆங்கில நாளிதழான "தி ட்ரிபியூன்".

தகவல் திருட்டு

இது தொடர்பாக வெளியான செய்தியில்  "ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று UIDAI கடந்த நவம்பர் மாதம் கூட தெரிவித்திருந்தது. ஆனால் இன்று நாங்கள் வாட்ஸ்அப் மூலமாக அடையாளம் தெரியாத விற்பனையாளர்களிடமிருந்து ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட ஆதார் தகவல்களை எந்த வித கட்டுப்பாடுகளுமின்றி அணுகுவதற்கான வழிகளைப் பெற்றிருக்கிறோம்". இதற்காக வெறும் 500 ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாகவும் கூறும் ட்ரிபியூன் அதை Paytm மூலமாகவே செலுத்தியதாகவும் பணம் செலுத்தப்பட்ட அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு கேட்வே ஆக்சஸ், லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு அளிக்கப்பட்டதாகவும் அதன் மூலமாகவே ஆதார் தகவல்களை அணுக முடிந்தது எனவும் தெரிவித்திருக்கிறது. "அடுத்ததாக மேலும் ஒரு 300 ரூபாய் செலுத்தப்பட்டபோது மற்றுமொரு மென்பொருள் எங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஒருவரின் ஆதார் அட்டையைக் கூட யாருடைய அனுமதியுமின்றி அச்சிடுவதற்கான வசதி அந்த மென்பொருளில் இருந்தது" என்ற மற்றோர் அதிர்ச்சியான தகவலையும் தெரிவித்திருக்கிறது ட்ரிபியூன்

ஆதார்

ஆதார் தகவல்களை அணுக முடிவதை உறுதி செய்தவுடன் சண்டிகரில் இருக்கும் அதிகாரிகளிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களும் இந்தத் தகவலை உறுதி செய்து பெங்களூரில் இருக்கும் தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சண்டிகரில் இருக்கும் UIDAI வின் கூடுதல் துணை இயக்குநர் சஞ்சய் ஜிண்டால் " பஞ்சாப்பை பொறுத்தவரையில் எனக்கும் கூடுதல் இயக்குநருக்கும் மட்டுமே இணையதளத்திற்கான லாகின் ஆக்சஸ் கொடுக்கப்பட்டிக்கிறது. எனவே வேறு யாராவது ஆதார் தகவல்களை அணுகியிருந்தால் அது சட்டவிரோதமானது. மேலும் இது மிகப்பெரிய தகவல் திருட்டு" என பதிலளித்திருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது ட்ரிபியூன். 

இது தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்பே துப்பறியத் தொடங்கி விட்டதாகக் கூறும் ட்ரிபியூன். அடையாளம் தெரியாத வாட்ஸ்அப் குரூப்கள் தொடங்கப்பட்டதாகவும், இந்தியா முழுவதும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையால் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஆபரேட்டர்கள்தான் அவர்களின் இலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்தத் தகவலை முழுவதுமாக மறுத்திருக்கிறது தேசிய தனிநபர் அடையாள ஆணையம். எந்தவித தகவல் திருட்டும் நடைபெறவில்லை, மக்களின் தகவல்கள் உயர்தரத்தில் என்கிரிப்ஷன் செய்யப்பட்டு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது. ஒருவரின் பயோமெட்ரிக் இல்லாமல் அவர்களின் தகவல்களை யாராலும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது. பிஜேபியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரிபியூன் வெளியிட்ட செய்தி போலியானது என்று தெரிவித்து வருகிறது.

ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா?

ஆதார் பதிவு

இது போன்று தகவல் வெளியாவதும் அதன் பின்னர் UIDAI அதை மறுத்து செய்தி வெளியிடுவதும் பல முறை நடந்திருக்கிறது. கடந்த வருடம்தான் இது போன்ற ஆதார் தகவல் திருட்டுச் சம்பவங்கள் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஜார்கண்ட் அரசின் இணையதளத்திலேயே  லட்சக்கணக்கானோரின் ஆதார் விவரங்களை வெளியிட்ட சம்பவம் நிகழ்ந்தது. அதன் பிறகு அரசு அந்தத் தகவல்களை நீக்கியது. ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அபினவ் ஸ்ரீவத்சவ் என்ற இளைஞர் 40,000 பேரின் ஆதார் கார்டு தகவல்களைத் திருடினார் எனக் கைது செய்தது பெங்களூர் காவல்துறை. மேலும் கடந்த வருடத்தில்தான் ஆதார் தகவல்களை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. உளவுபார்த்ததாக விக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.  

இப்படிப் பல சம்பவங்களை எடுத்துக்காட்டாகக் கூற முடியும். இது போன்ற பல குற்றச்சாட்டுகளில்  தகவல் திருடப்பட்டதாக காவல் துறையிடம் புகார் அளித்ததே தேசிய தனிநபர் அடையாள ஆணையம்தான். அப்படி இருக்கும் பொழுது ஆதார் தகவல்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்று UIDAI எதற்காக திரும்பத் திரும்பத் கூறுகிறது? உலகம் முழுவதும் இது போன்று நடைபெற்ற சம்பவங்களில் புரிந்துகொள்ளப்பட்ட விஷயம் ஒன்றுதான் இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் பாதுகாக்கப்பட்ட தகவல் என்று ஒன்றுமே கிடையாது. ஆதார் மட்டும் விதிவிலக்கா என்ன?


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!