Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10 நொடிகளில் ஐபோனை பஸ்பமாக்கும் லியாம் ரோபோக்கள்! ஏன்? #WowFact

ஒரு மொபைலை மக்களுக்குப் பிடித்தவாறு வடிவமைப்பது  எப்படி கடினமான வேலையோ அதைப்போலவே அவற்றை மறுசுழற்சி செய்வதும் சற்று கடினமான ஒன்றுதான். மொபைலை வேண்டாம் என்று குப்பையில் போட்டாலும் சரி, வேறு மொபைல் வாங்கும்பொழுது எக்ஸ்சேஞ்ச் செய்தாலும் சரி அவற்றில் பெரும்பாலானவை மறுசுழற்சிக்கே செல்கின்றன. அமெரிக்காவில் மட்டும் நூறு மில்லியனுக்கும் அதிகமான மொபைல்கள் ஒவ்வொரு வருடமும் மின்னணுக் கழிவுகளாக மாறுகின்றன. மறுசுழற்சியில் மொபைல்களில் இருந்து காப்பர், தங்கம் போன்ற உலோகங்கள் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்.

ஐபோன்

ஆனால், மறுசுழற்சியின்பொழுது மொபைல்களை சரியான முறையில் கையாளப்படவில்லை என்றால் அது மனிதர்களின் உடல்நலத்தைப் பாதிக்கலாம். எடுத்துக்காட்டாக, லித்தியம் என்பது அதிகமாக மொபைல் பேட்டரியில் காணப்படும் உலோகம். இது மனிதனின் நரம்பு மண்டலத்தைக் கடுமையாக பாதிக்கக்கூடியது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது மொபைல்களை மறுசுழற்சி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. இந்தப் பணிகளில் பெரும்பாலும் மனிதர்களே ஈடுபடுவது வழக்கம். ஆனால், ஆப்பிளோ தனது மொபைல்கள் மறுசுழற்சி செயல்பாட்டை சற்று வித்தியாசமாக கையாள்கிறது.

மறுசுழற்சியிலும் கூட வித்தியாசம் காட்டும் ஆப்பிள்

மற்ற மொபைல் நிறுவனங்கள் மொபைல்களைத் தயாரிப்பதற்கு ரோபோக்களைப் பயன்படுத்தினால் மறுசுழற்சியின்போது மொபைலை அக்குவேர் ஆணிவேராக பிரிப்பதற்கும் ரோபோவைத்தான் பயன்படுத்துகிறது ஆப்பிள். இதற்கென "லியாம்" என்று பெயரிடப்பட்ட ரோபோக்களை வைத்திருக்கிறது. இந்த ரோபோக்கள் பத்து நொடிகளில் ஒரு ஐபோன் 6-ன் பாகங்களை தனித்தனியாக பிரித்து மேய்ந்துவிடுகின்றன.

லியாமைப் போல வேறு நிறுவனங்களிடம் ரோபோக்கள் இருப்பது சந்தேகம்தான். மற்ற வகை ரோபோக்கள் அதனிடம் ஒரு பொருளை கொடுத்தால், குறிப்பிட்ட வேலைகளைச் செய்யும்படியே வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், லியாம் அப்படியில்லை. மொபைலின் உள்ளே எந்த இடத்தில் ஸ்க்ரூ இருக்கும், பேட்டரி எங்கே இருக்கும் போன்ற எல்லா தகவல்களும் இதற்கு அத்துப்படி. எனவே, அதனிடம் ஒரு மொபைல் ஒப்படைக்கப்பட்டால் அதிலிருக்கும் பொருள்களை ஒரு சிறிய 'கீறல்' கூட விழாமல் பிரித்துவிடும். இதைக் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தனது மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் பயன்படுத்திவருகிறது ஆப்பிள்.

 லியாம்

தொழிற்சாலையில் மொபைல்களைப் பிரிக்கும் ஒரு வரிசையில் பல வேலைகளைச் செய்யக்கூடிய 29 வகையான ரோபோக்கள் இருக்கும். இந்த ரோபோக்கள் பத்து நொடிகளில் ஒரு ஐபோனை 8 பகுதிகளாக பிரித்துவிடுகின்றன. பின்பு பிரிக்கப்பட்ட பொருள்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. வருடத்துக்கு 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட ஐபோன்களை இதன் மூலமாக பிரித்தெடுக்க முடியும். மேலும், இவற்றை பிரித்தெடுக்கும்போது மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் குறைக்கலாம்.

ஐபோனிலிருந்து என்ன கிடைக்கும்?

மறுசுழற்சி பொருட்கள்

ஐபோன் எதற்காக அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்று பலரும் யோசிப்பதுண்டு. அப்படி கேட்பவர்களே ஆச்சர்யப்படும் வகையில் பல சரக்குகளை உள்ளே வைத்திருக்கிறது ஐபோன். கோபால்ட் மற்றும் லித்தியம் உலோகங்கள்  பேட்டரியில் இருந்து பெறப்படுகின்றன. தங்கம் மற்றும் செம்பு கேமராவிலிருந்து பிரித்தெடுக்கப்படும். வெள்ளி மற்றும் விலை உயர்ந்த உலோகமான பிளாட்டினம் போன்றவை ஐபோனின் லாஜிக் போர்ட்களில் இருந்து பெறப்படுகின்றன. மொபைல் சார்ஜர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் செம்பு, விலை குறைவுதான் என்றாலும் அதுவும் பயன்படுத்தக்கூடியதுதான். இவை போன்ற உலோகங்கள் ஐபோன் மட்டுமின்றி இதர ஸ்மார்ட்போன்களிலும் காணப்படுகின்றன. 

மறுசுழற்சி பொருட்கள்

இப்படி மறுசுழற்சியில் இருந்து பெறப்படும் பொருள்களை மீண்டும் தனது ஸ்மார்ட்போன்களை தயாரிக்கப் பயன்படுத்துகிறது ஆப்பிள். இதன் மூலமாக சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்க முடியும் என்றும் நம்பிக்கையை மற்ற நிறுவனங்களிடமும் விதைக்கிறது. ஒரு பொருளை உருவாக்குவதை விடவும் அதை அழிப்பது எளிது என்று சொல்வார்கள். ஆனால், மின்னணுக் கழிவுகளைப் பொறுத்தவரையில் அவற்றை அழிப்பது சற்று கடினமான வேலைதான்; எனவே ஆப்பிள் போன்று மறுசுழற்சி செய்வது நல்லது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement