வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (16/01/2018)

கடைசி தொடர்பு:11:00 (16/01/2018)

ஊகிக்கவே முடியாத சாட்சி... சரியாக கணித்த காவல்துறை... ஒரு ‘தரமான’ சம்பவம்! #GadgetTippedCrimes அத்தியாயம் 7

ஓஹாயோ காவல்துறை

 

ஓஹாயோ. அமெரிக்காவில் இருக்கும் அழகிய மாகாணம். அந்த மாகாணத்தைச் சேர்ந்த மிடில்டவுன் என்ற நகரில் வாழ்ந்து வந்தவர் ராஸ் காம்ப்டன். வயது 59. ஓய்வுக்காலத்தை தனது சொந்த வீட்டில் கழித்து வந்தார் ராஸ் காம்ப்டன். இதய நோயாளியான ராஸ், சொந்த ஊரை விட்டு வேறு எங்கும் அதிகம் செல்லாதவர். அருகிலிருக்கும் பூங்கா, வீடு என அங்கேயே வாழ்ந்துவந்தார். சென்ற ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி வரை வாழ்க்கை நன்றாகதான் போய்க்கொண்டிருந்தது. அன்று நடந்த ஒரு நிகழ்வு அனைத்தையும் மாற்றிவிட்டு போனது.

செப்டம்பர் 19 இரவு திடீரென காம்ப்டனின் வீட்டில் தீப்பிடித்தது. காம்ப்டன் இருந்த அறைக்கு தீ பரவுவதற்குள், அந்த முதியவர் கைக்குக் கிடைத்த விலையுயர்ந்த பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஜன்னல் வழியே தப்பித்துவிட்டார். உடனே, போலிஸூக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தரப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் வீடு நாசமடைந்தது. சேதம் அதிகம். இன்ஷூரன்ஸ் மூலம் கணிசமான தொகை கிடைக்கும் என்றாலும், காம்ப்டனுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் நின்றது காவல்துறை. அமெரிக்கா போன்ற நாட்டில் ஒரு முதியவர் காலத்தைத் தனியே கழிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

எப்படியும் அது ஒரு சம்பவம். அது எப்படி நிகழ்ந்தது என்பதைக் காவல்துறை கண்டறிந்து ரிப்போர்ட் தந்தாக வேண்டும். அதனால் தீ உருவாக காரணமான விஷயத்தைத் தேடத் தொடங்கினார்கள். எந்த க்ளூவும் இல்லாத அளவுக்கு வீடு எரிந்து போனதால் காம்ப்டனிடம் சில கேள்விகள் கேட்க வேண்டியிருந்தது. காம்ப்டன் சொன்னது இதுதான்.

அவர் அப்போது தூங்கிக்கொண்டிருந்தார். திடிரென கருகும் வாசம் வந்திருக்கிறது. அவர் துங்கிக்கொண்டிருந்த அறைக்கு வெளியா தீ வேகமாக எரிந்தது. அந்த வழியே வெளியே போக முடியாதென நினைத்தவர் அறையிலிருந்த ஜன்னல் வழியே எகிறிகுதித்து தப்பித்தார்.

அவரது பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக ஒரே ஒரு காவல் அதிகாரிக்கு மட்டும் தோன்றியது. அவர் அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்க “நான் ஒரு இதய நோயாளிப்பா... செயற்கை இதயத்துல உயிரை ஓட்டிட்டு இருக்கேன்... இப்படி பண்ணாதிங்க” என்றார் காம்ப்டன். அதுவரை அவர் சொன்ன பதில்கள் எதுவும் தராத உற்சாகத்தை இந்த விஷயம் காவல் அதிகாரிக்கு தந்தது. 

காம்ப்டன் செயற்கை இதயம் என சொன்னது பேஸ்மேக்கர் கருவியை. 

பேஸ்மேக்கர்:
சீரற்ற இதயத் துடிப்பு நோயாளிகளுக்கு, இதயத் துடிப்பு விகிதம் குறையவோ, அதிகரிக்கவோ வாய்ப்பு உள்ளது. இதனால், மூளை, சிறுநீரகம், கல்லீரல், கணையம் உள்ளிட்ட முக்கிய உறுப்புக்கள் பாதிக்கப்படும். ஆரம்பநிலையில் மருந்து மாத்திரைகள் மூலமாக இதனைக் குணப்படுத்தலாம். முற்றிய நிலையிலேயே பேஸ்மேக்கர் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சிறிய எலெக்ட்ரானிக் கருவி. இதனை அறுவைசிகிச்சை மூலம் மார்பில் வைத்து, மின் இணைப்பை இதயத்தில் பொருத்திவிடுவர். எப்போது எல்லாம் இதயத் துடிப்பு அதிகரிக்கிறதோ, அப்போது பேஸ்மேக்கர் மின்சார அதிர்வலைகளை இதயத்துக்கு அனுப்பும். இதன் மூலமாக இதயத் துடிப்பு சீராகும். இதன் மேம்பட்ட வடிவம் இம்பிளான்டபிள் கார்டியோவெர்ட்டர் டீஃப்ரிலேட்டர் (Implantable cardioverter defibrillator (I.C.D)). பொதுவாக, இது நோயாளிகளின் இதயச் செயல்பாடு 30 சதவிகிதத்துக்கும் குறைவாகும்போதே பரிந்துரைக்கப்படுகிறது.

பேஸ்மேட்டர் கருவி மூலம் ஒருவர் எப்போது தூங்கிக்கொண்டிருந்தார்; எப்போது நடந்தார்; எப்போது ஓடினார் என்பது வரை கண்டறிய முடியும். ஏனோ அந்தக் காவல்துறை அதிகாரிக்கு ராஸ் காம்ப்டன் மீது சந்தேகம் எழுந்தது. அதை உறுதி செய்ய காம்ப்டனின் பேஸ்மேக்கர் கருவியின் டேட்டாவை எடுக்க முடிவு செய்தார். சரியான வழியில் அதை எடுக்கவும் செய்தார். காம்ப்டனின் பேஸ்மேக்கர் தரவுகளைப் பார்த்த மருத்துவர்கள் அவர் தூங்கிக்கொண்டிருந்ததாக சொன்ன நேரத்தில் அவர் விழித்திருந்ததாக உறுதியாக சொன்னார்கள். மேலும், அவரால் ஜன்னல் வழியே அவ்வளவு எடையுள்ள பொருள்களுடன் வெளிவந்திருக்கும் வாய்ப்பும் இல்லை என்றார்கள். காம்ப்டன் கதவு வழியேதான் அந்தப் பொருள்களை வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும் என ஊகித்தார் காவல்துறை அதிகாரி. ”இந்தத் தீப்பிடித்த சம்பவமே ஜோடிக்கப்பட்டது; காரணம் இன்ஷூரன்ஸ் பணம்” என்பது அதிகாரியின் நம்பிக்கை. உண்மையும் அதுதான். 

இப்போது ராஸ் காம்ப்டன் சிறைக்குள் இருக்கும் பூங்காவில் தான் தினமும் நடைபயிற்சி மேற்கொள்கிறார். 

____

முந்தைய அத்தியாயங்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்