வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (17/01/2018)

கடைசி தொடர்பு:13:19 (17/01/2018)

அமேசான் பிரைம் சேவை ஒரு வருடத்துக்கு இலவசம்..! ஆஃபர் பெற என்ன செய்ய வேண்டும்?

ஏர்டெல் அமேசான்

வெறும் இலவச கால்களும் குறைந்த விலை டேட்டாவும் மட்டுமே மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களைக் கவர போதாது என்ற நிலை வந்துவிட்டது. அதனால் பல மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகளை(Value added services) மீண்டும் அறிமுகப்படுத்தத் தொடங்கி விட்டனர் நெட்வொர்க் நிறுவனங்கள். ஜியோவும் ஏர்டெல்லும் குறைந்த விலையில் 4ஜி மொபைல்களை களமிறக்கி வாடிக்கையாளர்களை 4ஜி பக்கம் திருப்பப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இப்போது, ஏர்டெல் இளைஞர்களின் ஏகோபித்த தேர்வான அமேசான் பிரைம் பக்கம் திரும்பியிருக்கிறது.

அமேசானும் ஏர்டெல்லும் ஒப்பந்தம் ஒன்றில் நுழைந்திருக்கின்றன. அதன்படி ஏர்டெல்லில் 499 ரூபாய்க்கான மேலான போஸ்ட்பெய்ட் பிளானின் இருப்பவர்கள் 999 ரூபாய் மதிப்பிலான அமேசான் மெம்பர்ஷிப்பை இலவசமாக பெறலாம். இது ஓராண்டுக்கான சேவை ஆகும். இந்தச் சேவையில் ஓராண்டுக்கு அமேசான் பிரைம் வீடியோக்கள் அத்தனையையும் பார்க்கலாம்; அமேசான் பிரைம் டெலிவரி சேவையையும் பெறலாம். 

ஏர்டெல் இந்தச் சலுகையை தனது ஃபைபர் பிராட்பேண்டு வாடிக்கையாளர்களுக்கும் தருகிறது. 1000 ரூபாய்க்கு அதிகமான பிளான்களில் இருப்பவர்கள் இந்த ஆஃபரை பெற்றுக்கொள்ளலாம்

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பெற ஏர்டெல் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

1) ஆப் ஸ்டோரிலிருந்து Airtel TV App செயலியை டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும்.
2) தங்களது ஏர்டெல் மொபைல் என்ணை பயன்படுத்தி அந்தச் செயலிக்குள் லாகின் செய்ய வேண்டும்
3) லாகின் செய்தபின் கொஞ்சம் கீழே ஸ்க்ரோல் செய்தால், அமேசான் பிரைம் பற்றி பேனர் ஒன்று வரும். அதை க்ளிக் செய்ய வேண்டும்
4) திறக்கப்பட்ட புதிய பக்கத்தில் வேண்டிய தகவல்களைக் கொடுத்து “activate the service" பட்டனை க்ளிக் செய்தால், அமேசான் பிரைம் ஆக்டிவேட் ஆகிவிடும்.
5) பின், அமேசான் பிரைம் பக்கத்துக்குச் சென்று இதே தகவல்களைத் தந்து லாகின் செய்தால், அன்றிலிருந்து 365 நாள்களுக்கு அமேசான் பிரைம் சேவை கிடைக்கும். இது தொடர்பான குறுஞ்செய்தி அதை உறுதி செய்யும்
6) நீங்கள் ஏற்கெனவே அமேசான் பிரைம் மெம்பர் என்றால் அந்த சந்தாக்காலம் முடியும்வரை காத்திருக்கவும். அதன்பின் ஏர்டெல் தரும் ஆஃபரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அமேசான் பிரைம் பற்றி:

அமேசான் பிரைம் சேவை மூலம் திரைப்படங்களை ஹெச்.டி தொழில்நுட்பத்தில் ஆன்லைனிலும், ஆஃப் லைனிலும் பார்க்க முடியும். அமேசானின் இந்தச்  சேவையில் பாலிவுட், அமெரிக்க சீரியல்கள், மண்டல மொழிப் படங்கள் மற்றும் கேம்கள் ஆகியவை உண்டு. 142 நாடுகளில் அமேசான் பிரைம் சேவை லைவ்வில் உள்ளது. இந்தியாவில் ஆபாசமான காட்சிகள் சென்சார் செய்யப்பட்டு மங்கலாக காட்டப்படும். இதனை எந்த வித கோரிக்கையும் இன்றி தானாகவே முன்வந்து அமேசான் செய்துள்ளது. “இந்திய வாடிக்கையாளர்களை நாங்கள் மதிக்கிறோம் அதனால்தான் சென்சார் செய்து வெளியிடுகிறோம்” என்கிறது அமேசான். மேலும் குழந்தைகளுக்கான டிவி ஷோக்களையும் வழங்குகிறது. இது தவிர அமேசானின் சொந்த வீடியோக்களையும் (originals) வழங்குகிறது.

எதில் பார்க்க முடியும்?

இந்த சேவையை ஆண்ட்ராய்டு , ஐ-ஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப்களில் பெற முடியும். க்ரோம்காஸ்டில் இந்த சேவையை பெற முடியவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் கூகுள் க்ரோம்காஸ்ட் செட்டப்பை  க்ரோம்காஸ்டில் இன்ஸ்டால் செய்து அதன் மூலம் இந்த‌ச் சேவையை பெற முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்