லைக், கமென்ட் போடாமல் வாழ்வதுதான் டிஜிட்டல் மினிமலிஸமா? #DigitalMinimalism | What does digital minimalism mean

வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (25/01/2018)

கடைசி தொடர்பு:09:42 (25/01/2018)

லைக், கமென்ட் போடாமல் வாழ்வதுதான் டிஜிட்டல் மினிமலிஸமா? #DigitalMinimalism

மினிமலிஸம்

இது அறிவால் இயங்கும் காலகட்டம். இங்கே உழைப்பை விட அறிவுக்கு மதிப்பு அதிகம். இந்தச் சூழலில் அகல உழுவதைவிட ஆழ உழுவதே புத்திசாலித்தனம். அப்படி ஆழ உழ வேண்டுமென்றால் கவனம் சிதறாமல் வேலை செய்ய வேண்டியது அவசியம். அதற்கு, இந்த டிஜிட்டல் உலகம் வாய்ப்பளிக்கிறதா? இந்த ஒரு பத்தியை வாசித்து முடிப்பதற்குள் நீங்கள் மொபைலை எடுத்தீர்களா? அல்லது எடுக்க வேண்டுமென தோன்றியதா?

உலகின் பாதி மக்கள் தொகைக்கு ஸ்மார்ட்போன் பரிச்சயமாகிவிட்டது. 5 நிமிடத்துக்கு முன்பு உலகில் நடந்த அத்தனை விஷயங்களும் இப்போது உங்கள் உள்ளங்கையில் இருக்கிறது. இவ்வளவு தகவல் நமக்கு முன் கொட்டப்படும்போது நமக்குத் தேவையானதை மட்டும்தான் நாம் எடுத்துக்கொள்கிறோமா? 

இணையம் நம் வாழ்க்கையை மட்டுமல்ல; நம் வேலையை மட்டுமல்ல; இந்த உலகை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தையே மாற்றியிருக்கிறது. அது நல்லதுதானே என்கிறீர்களா? இல்லை. தொடர்ந்து பேசுவதற்கு முன் மினிமலிஸ்ட் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்.

பணக்காரராக இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, நிறைய சம்பாதிப்பது. இன்னொன்று விருப்பங்களை குறைத்துக் கொள்வது என்கிறது ஜென். பிறந்தது முதலே நாம் அடுத்தகட்டத்துக்கு நகர்வது குறித்தே போதிக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு நிறையத் தேவை. அப்படித்தான் நாம் வளர்ந்திருக்கிறோம். அப்பா முதல் ஆசிரியர் வரை, தொலைக்காட்சி முதல் சினிமா வரை எல்லாமே நமக்குச் சொல்வது ஒன்றுதான். “அதிகம் இருந்தால் நல்லது”. அதனால்தான் நிறைய சம்பாதிக்க ஓய்வின்றி உழைக்கிறோம். ஆனால், நம் எல்லோருக்குமே ஒரு உண்மை தெரியும். அது, ’நம் சந்தோஷத்தை நம்மால் விலை கொடுத்து வாங்க முடியாது’. அண்ணாச்சி கடை முதல் ஆன்லைன் ஷாப்பிங் தளம் வரை எங்கேயும் அது விற்பதில்லை. ”அதிகம்” என்பது எப்போதும் சிறந்ததல்ல என்பது நமக்கு நன்றாக தெரியும்.

ஜப்பான் இளைஞர்கள் மத்தியில் இப்போது வேகமாக வளர்ந்து வரும் பேசுபொருள் இந்த மினிமலிஸ்ட் வாழ்வுதான். ஃபேஸ்புக் முதல் சுமோ பயிற்சி மையங்கள் வரை இதுபற்றிதான் அவர்கள் நிறைய பேசுகிறார்கள். பலர், சிறுநுகர் வாழ்க்கைக்கு மாறியும் இருக்கிறார்கள். நாம் நினைக்கும் அளவுக்கு இது சிரமம் அல்ல என்பது அவர்களது அனுபவ அறிவுரை. ஏனெனில், நம் எல்லோருக்குமே மகிழ்ச்சியாக வாழ தான் ஆசை. அது எப்படி என்பது தெரியாமல்தான் இருக்கிறோம்.

https://www.vikatan.com/news/life-style/73084-minimalists-in-japan-take-simple-living-to-new-extremes.html

இதேபோல ’டிஜிட்டல் மினிமலிஸம்’ என்றொரு கருத்தியல் உண்டு. அதற்கு விளக்கம் இதுதான்:

டிஜிட்டல் மினிமலிஸம் என்றால் டிஜிட்டல் விஷயங்களை புறந்தள்ளுவது அல்ல; டிஜிட்டல் கருவிகளை சரியான நோக்கத்தோடு பயன்படுத்துவதுதான். நாம் பயன்படுத்தும் ஒரு மொபைல் ஆப்போ, இணையதளமோ, கேட்ஜெட்டோ நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறதா என்பதை அலச வேண்டும். அதுதான் டிஜிட்டல் மினிமலிஸம்.

இன்னும் கொஞ்சம் விரிவாகவே இதைப் பார்க்கலாம். டிஜிட்டல் மினிமலிஸத்தை நோக்கிய நம் பயணத்தை எளிதாக்க கால் நியூபோர்ட் என்பவர் உதவுகிறார். அவர் கருத்துப்படி ஒரு விஷயம் நமக்கு உதவும் வழிகளை மூன்றாக பிரிக்கலாம். 

1) Core value
2) Minor Value
3) Invented Value

Core value:
நம் வாழ்க்கையில் முக்கியமான பங்களிக்கும் டிஜிட்டல் விஷயத்தை இதில் சேர்க்கலாம். உதாரணமாக, வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவர் தன் குடும்பத்துடன் செய்யும் வீடியோ சாட் வசதியைச் சொல்லலாம்.

Minor Value:
இன்றியமையாத விஷயமல்ல; ஆனால், நம் வாழ்வை சிறப்பாக்க உதவும் விஷயங்களை இதில் சேர்க்கலாம். உதாரணமாக, கிரிக்கெட் போட்டி நடக்கும்போது நேரலை பார்க்க முடியாவிட்டாலும் ட்விட்டரில் அதுபற்றிய ட்வீட்களைப் படிப்பது போன்றவை.

Invented Value:
நம்மால் தீர்க்க முடியாத ஒரு பிரச்னை இருந்திருக்கும். அதை அந்த டிஜிட்டல் கருவி / மென்பொருள் வந்துதான் தீர்க்க உதவியிருக்கும். அதுபோன்றவற்றை இதில் சேர்க்கலாம். 

நீங்கள் பயன்படுத்தும் அத்தனை டிஜிட்டல் விஷயங்களையும் இந்த மூன்று பிரிவுக்குள் கொண்டு வாருங்கள். மற்ற தேவையானவற்றை எப்படி உங்கள் வாழ்விலிருந்து நீக்கலாம் என யோசியுங்கள். அப்போது நீங்கள் டிஜிட்டல் மினிமலிஸ்ட் ஆக மாறுவீர்கள் என்கிறார் கால் நியூபோர்ட்.

மினிமலிஸம்

டிஜிட்டல் மினிமலிஸ்ட் ஆக முயலும்போது சில பிரச்னைகள் வரலாம். சிலவற்றை நாம் வாழ்விலிருந்து நீக்க வேண்டும். சிலவற்றை சேர்க்க வேண்டும். அதற்கு கால் நியூபோர்ட் சொன்ன தேர்வு உதவும். 

அடுத்து, டிஜிட்டல் உலகில் அனைத்தையும் நுகர்வது என்பது சாத்தியமற்ற செயல் என்பதை நாம் உணர வேண்டும். நாம் செய்வதை விரும்பி, ரசித்து செய்ய வேண்டும், அது கொஞ்சமே என்றாலும்.

நிறைய விஷயங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கும் அனுபவங்களைவிட, ஒரே விஷயத்தில் கிடைக்கும் நிறைந்த அனுபவம் சிறந்தது. அதாவது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என இருக்கும் அத்தனை சமூக வலைதளங்களில் மேய்வதைவிட நமக்கு பொருந்திப்போகும் ஏதேனும் ஒன்றில் நேரத்தை செலவு செய்வது நலம்.

ஒவ்வொரு செயலியும் இணையதளமும் கேட்ஜெட்டும் ஒவ்வொரு விஷயத்தைக் கொடுக்கும். எது தேவை என்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். டிஜிட்டல் மினிமலிஸ்ட் என்பவர் அவருக்கான மதிப்பீடுகளை அவரே உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதைக் கொடுக்கும் விஷயங்களைப் பயன்படுத்த வேண்டும்.

வேலையில் இது சாத்தியமா என்பது அடுத்த கவலை. வாட்ஸ்அப்-ல்தான் பாதி அலுவலக மீட்டிங்குகள் நடக்கின்றன. இந்தச் சூழலில் டிஜிட்டல் மினிமலிஸ்ட் ஆவது நடக்கிற காரியமா என்ற வாதமும் உண்டு. 

உண்மையில் நாம் வாட்ஸ்அப், மெயில் போன்றவற்றை அடிக்கடி பார்த்தாலும் அதற்கு ரியாக்ட் செய்கிறோமா என்பதை கவனியுங்கள். 2 மணி நேரத்துக்கு ஒரு முறை மெயில் செக் செய்வது, வாட்ஸ்அப் பார்ப்பது என அட்டவணைகூட போட்டுக்கொள்ளலாம். ஒருவேளை, அவசரம் என்றால் அழைத்துவிடலாம் என்ற முடிவுக்கு மற்றவர்கள் வர இது உதவும். அப்படியில்லாமல் நிமிடத்துக்கு நிமிடம் வாட்ஸ்அப் பார்த்துவிட்டு, அதற்கு ரியாக்ட் செய்யாமல் இருந்தால்தான் அலுவலகத்தில் சிக்கல் வரும்.

முடிவாக ஒன்றுதான். மினிமலிஸம் என்பது குறைவாக பயன்படுத்துவது என்பதில்லை. தேவையற்றதைப் பயன்படுத்தாமல் இருப்பது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க