ஆப்பிளும் ஆண்டிராய்டும் ஒண்ணு... தகவல்கள் திருடுபோகலாம் கண்ணு..! #Meltdown

தகவல் திருடப்படும் அபாயம் மெல்ட்டெளன்

'நான் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துகிறேன். ஆதலால் என் ரகசிய தகவல்களை யாராலும் திருட இயலாது'. 

'எனது சிஸ்டத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளன. ஆதலால் முற்றிலும் பாதுகாப்பானது’

இந்த வாக்கியங்களை பொய்யாக்கி உள்ளது சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி அளிக்கும் செய்தி. அதாவது நாம் முற்றிலும் பாதுகாப்பானது என நினைத்த இன்டெல், ஏ .எம் டி , ஏ.எம்.ஆர்  ஆகிய நுண்செயலிகளில் சேமிக்கப்பட்டத் தகவல்களை திருட இயலும். இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் இதற்கு காரணம் அது செயல்படும் முறையில் இருக்கும் கோளாறு என்பதே.இதற்கு ஸ்பெக்ட்ரே மற்றும் மெல்ட்டௌன் பாதிப்பு என பெயர் வைத்துள்ளனர்.

ஒரு நுண்செயலி வேகமாக செயல்பட அது நாம் அடுத்து செய்ய போவதை முன்கூட்டியே கணித்து வைக்கும். நாம் அதை செய்தோமெனில் அது அதை செயல்படுத்தும். இல்லையேல் விட்டுவிடும். இப்படி கணிக்கப்படும் தகவல்களின் மூலம் அதில் உள்ள சேமிக்கப்பட்டத் தகவல்களை கைப்பற்ற இயலும். அனைத்து முன்னணி நுண்செயலிகளும் இதன் படியே செயல்படுவதால் மக்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு முதல் விண்டோஸ் மற்றும் ஐபோன் வரை அனைத்திற்கும் அபாய சங்கு ஒலித்துள்ளது.

நம் சிஸ்டத்தில் ஒரு அப்ளிகேஷன் இன்னொரு அப்ளிகேஷனில் உள்ள தகவல்களை படிக்க இயலாது.  பாதுகாப்பு கருதி இவ்வாறு அமைக்க பட்டுள்ளது. மேல் சொன்ன கோளாறினால் ஒன்றில் இருக்கும் தகவல்களை மற்றொன்றினால் படிக்கச் இயலும். அதாவது நீங்கள் ஒரு இணையதளத்தை பார்வையிட்டால் அதனால் உங்கள் சிஸ்டத்தில் உள்ள வங்கி கணக்கு வரை படிக்க முடியும். பாதுகாக்கப்பட்ட மெமரியும் பயன்படுத்தும் மெமரியும் இணைக்க இயலும். இந்த இணைப்பு உங்கள் தனிப்பட்ட தகவல்களை அம்பலப்படுத்தும். இது தான் மெல்ட்டௌன். 

இதை விட மிகவும் மோசமான பின் விளைவுகளை தர கூடியது ஸ்பெக்ட்ரே பாதிப்பு. அதாவது தகவல் திருடுபவர்கள் ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் மூலம் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட உங்கள் கணினியில் உள்ள அப்ளிகேஷனை ஏமாற்றி தகவல்களை பெற்றுக்கொள்ள இயலும். இவ்வாறு திருடப்பட்டது உரிய நபருக்கு தெரிவதும் சந்தேகமே.

இந்த இரண்டையும் சென்ற ஆண்டே அறிந்த டெக் ஜாம்பவான்கள் அதை  மூடி மறைத்து இறுதியாக இந்தாண்டு உலகிற்கு தெரிவித்துள்ளனர். இது கடும் அதிர்வலைகளை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. உங்கள் கைபேசியில் வரும் ஏதோ ஒரு விளம்பரம் உங்களின் ஒட்டு மொத்த தகவல்களையும் எடுத்து கொள்ள இயலும் என்றால் அது நிச்சயம் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு வழி வகுக்கும். தற்பொழுது  இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் டைம் பாம் இது என்பது டெக் வல்லுனர்களின் கருத்து

இதை சரி செய்ய விண்டோஸ் மற்றும் பல முன்னணி நிறுவனங்கள் பாட்ச்ஸ்களை வெளியிட்டுள்ளனர். எனினும் இதை முழுமையாக சரி செய்ய இன்னும் பல காலம் ஆகலாம். 

டெக்னாலஜியைப் பொறுத்தவரை அனைத்து தருணங்களிலும் பிரச்சனைகளும் பின் அதற்கான தீர்வுகளும் வருவது இயல்பு. ஆதலால் இந்தப் பிரச்னையும் வெகுசீக்கிரம் சரி செய்யப்படும் என நம்பலாம். 

 

.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!