வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (02/02/2018)

கடைசி தொடர்பு:13:51 (02/02/2018)

ஃபேஸ்புக் ஆப்பில் இந்தப் புதிய ஐகானை கவனித்தீர்களா? #MarketPlace

மார்க்

ஃபேஸ்புக்கின் இப்போதைய வருமானம் போதவில்லை என்று மார்க் நினைத்துவிட்டார் போல. அதன் விளைவாக ஃபேஸ்புக்கில் தொடர்சியாக சில மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன. அதற்காக போலிச் செய்திகளை குறைப்பது, பயனர்களுக்கு புதிய வசதிகளை அளிப்பது என  பல காரணங்களை ஃபேஸ்புக் கூறினாலும் மாற்றங்களின் இலக்கு வருமானத்தை நோக்கித்தான் இருக்கிறது. 

பொருட்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஃபேஸ்புக் நிறுவனம் நியூஸ் ஃபீடில் சில மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக அறிவித்தது. இதன் மூலமாக பயனாளர்கள் விளம்பரங்கள், செய்திகள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். இதனால் நியூஸ் ஃபீடில் செய்திகள் குறைவாகவே காட்டப்படலாம் என்பதால் இது உலக அளவில் பல செய்தி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் கொண்டு வந்திருக்கும் மற்றொரு புதிய வசதி 'மார்க்கெட்பிளேஸ்'. இதன் மூலமாக ஒருவர் பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். கடந்த வருடம் நவம்பர் மாதம் மும்பை நகரத்தில் இந்த வசதி பரிசோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு படிப்படியாக இந்த வசதி மற்ற நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்பொழுது இந்தியாவின் பெரும்பாலான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது ?

டெஸ்க்டாப் சைட்

இந்த வசதி மூலமாக ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி ஒருவர் அவர் இருக்குமிடத்துக்கு அருகில் இருக்கும் பொருட்களை எளிதாக வாங்க முடியும். ஃபேஸ்புக்கின் டெஸ்க்டாப் வெர்ஷனில் நியூஸ் ஃபீட், மெசேஞ்சர் என்ற இடத்திற்கு கீழே Marketplace என்ற வசதி தரப்பட்டுள்ளது. அதை க்ளிக் செய்வதன் மூலமாக அதன் முதன்மைப் பக்கத்திற்கு செல்ல முடியும். அங்கே விற்பனைக்கு இருக்கும் பொருட்களின் விளம்பரங்கள் காட்டப்படும், இருப்பிடத்தைத் தேர்வு செய்து எவ்வளவு தொலைவில் இருப்பவற்றை காட்ட வேண்டுமென்று தேர்வு செய்து கொள்ளலாம். தவிர விளம்பரங்கள் தனித்தனி பிரிவுகளாக பிரித்து தரப்பட்டுள்ளன, விலையை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. அதே போல பொருட்களை விற்கவும் வசதி இருக்கிறது. எந்தப் பொருளை விற்க விரும்புகிறோமோ அதன் தகவலை கொடுத்த பின்னர் இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்து புகைப்படத்தை பதிவேற்றினால் அந்த விளம்பரம் வெளியிடப்படும். அது நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்தின் அருகில் இருப்பவர்களுக்கு அந்த விளம்பரம் காட்டப்படும்.

ஃபேஸ்புக் ஆப்

இந்தியாவில் ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் OLX போன்ற ஆப்களை போலதான் இந்த வசதியையும் வடிவமைத்திருக்கிறது ஃபேஸ்புக். விளம்பரத்தைப் பார்த்து ஒரு பொருளை வாங்க விரும்பினால் பொருளை விற்பவருடன்  மெசேஞ்சர்  மூலமாக தொடர்பு கொள்ள முடியும். வாகனம், ரியல் எஸ்டேட், வீட்டு உபயோகப்பொருட்கள் என பல பிரிவுகளில் பொருட்களை வாங்கவும், விற்கவும் முடியும். ஃபேஸ்புக் ஆப்பில், தேடிப்போக வேண்டிய அவசியமே இல்லாமல் இந்த வசதி சட்டென நம் பார்வையில் படும்படி தரப்பட்டுள்ளது. டெஸ்க்டாப் வெர்ஷனை விட மொபைலில் பயன்படுத்த எளிதாக இருக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்டு சில நாட்களிலேயே பெரும் வரவேற்பை இந்த வசதி பெற்றுள்ளது. தற்பொழுது இலவசமாக கிடைக்கும் இந்த வசதியை  எதிர்காலத்தில் கட்டணச் சேவையாக மாற்றும் திட்டத்தை ஃபேஸ்புக் வைத்திருக்கலாம். நியூஸ் ஃபீடில் காட்டப்படும் விளம்பரங்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்ற முடிவிற்கும் இதற்கும் பெரிய தொடர்பு உண்டு. எது எப்படியோ இந்த மாற்றங்களால் கல்லாவை நிரப்பப்போவது ஃபேஸ்புக்தான்.

வாழ்த்துகள் சொன்னோம் மார்க்!


 


டிரெண்டிங் @ விகடன்