வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (06/02/2018)

கடைசி தொடர்பு:08:58 (06/02/2018)

“தற்கொலை செய்யணுமா? எனக்கு மெசேஜ் செய்யுங்கள்..!” - சீரியல் கில்லரைக் காட்டிக் கொடுத்த ட்விட்டர்! #GadgetTippedCrimes அத்தியாயம் 10

ட்விட்டர் கொலை

ஜப்பானின் தலைநகரமான டோக்கியாவைச் சேர்ந்தவர் ஐக்கோ டமூரா (Aiko Tamura). 23 வயதாகும் அந்தப் பெண் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போய்விட்டார். ஜப்பான் காவல்துறை தீவிரமாக அவரைத் தேடி வந்தது. டமூரா ஒரு ட்விட்டர் அடிக்ட் என்றே சொல்லலாம். அதனால், டமூராவின் அண்ணன் தன் தங்கையைப் பற்றி ட்விட்டர்வாசிகளிடம் கேட்டுப் பார்க்கலாம் என நினைத்தார். அவர் ட்வீட்டுக்கு நல்ல செய்தி எதுவும் ரிப்ளையாக வரவில்லை. தங்கையின் ட்விட்டர் அக்கவுன்டில் லாக் இன் செய்தால் ஏதாவது தகவல் கிடைக்கும் என நினைத்தார். ஒரு லேப்டாப்பில் டமூராவின் ட்விட்டர் பாஸ்வேர்டு சேவ் ஆகியிருக்க, அதன் மூலம் டமூராவின் ட்விட்டர் வரலாற்றை எட்டிப் பார்த்தார் டமூராவின் அண்ணன்.

ட்விட்டரில் டமூராவிடம் பேசிய பலரில் ஒரு ஹேண்டில்(Handle) மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதன் பயோவில் “hanging pro” என்றிருந்தது. பயமுறுத்தும் படத்துடன் இருந்த அந்த அக்கவுன்ட் சொன்னது இதுதான் “கஷ்டப்படும் மக்களுக்கு நான் உதவ விரும்புகிறேன். எனக்கு தனி மெசேஜ் அனுப்புங்கள்”. (I want to help people who are really in pain. Please DM me anytime”.)

டமூராவின் அண்ணனுக்குச் சந்தேகம் வலுத்தது. காவல்துறைக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்கிறார். காவல்துறையின் விசாரணையில் அந்த அக்கவுன்ட்டுக்குச் சொந்தக்காரர் பெயர் தக்காஹிரோ ஷிரைஷி (Takahiro Shiraishi) எனத் தெரிய வருகிறது. அவன் 27 வயது இளைஞன். டோக்கியோவின் தாம்பரம் போன்ற ஏரியாவில் ஒரு ஸ்டூடியோ அபார்ட்மென்ட்டில் தனியே தங்கியிருந்தான். அவனைத் தேடிப்போய் ‘டமூரா எங்கே?’ என விசாரித்தது போலீஸ். அதற்கு தக்காஹிரோ “இங்கதான் இருக்கா” என ஒரு கூலர் பாக்ஸைக் கைக்காட்டியிருக்கிறான்.

அதிர்ந்தது காவல்துறை. கூலர் பாக்ஸ் உள்ளே இருந்தது டமூராவின் சடலம். அந்த வீடு முழுக்கவே துர்நாற்றம் வீசியது. வீட்டுக்குள் ஆங்காங்கே மனித உடல்கள் துண்டு துண்டாகக் கிடந்தன. கிட்டத்தட்ட 240 எலும்புத்துண்டுகள், இரண்டு வெட்டப்பட்ட கைகளுடன் அந்த வீட்டில் வாழ்ந்திருக்கிறான் அந்தக் கொலைகாரன். உடல்களை அறுப்பதற்கு ஒரு ரம்பத்தை வீட்டிலே வைத்திருந்திருக்கிறான். அருகிலிருந்தவர்களிடம் விசாரித்தபோது, சில நாள்களாக துர்நாற்றம் வீசியதாகச் சொன்னார்கள்.

தக்காஹிரோ 2009-ல் பள்ளிக்கல்வியை முடித்திருக்கிறான். அதன்பின் 2 ஆண்டுகள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்திருக்கிறான். அதன்பின் ஒரு பாலியல் விடுதிக்குப் பெண்களைக் கொண்டுவரும் வேலையைச் செய்திருக்கிறான். அதற்காக போலீஸிடம் சிக்கி சில மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறான். வெளியே வந்ததும் தக்காஹிரோவின் தந்தை அவனைச் சரியான வழிக்குத் திருப்ப வேண்டுமென நினைத்து தனியே வீடு பார்த்துத் தங்க வைத்திருக்கிறார். இந்த 2 மாதங்களில்தான் 9 பேரைக் கொன்றிருக்கிறான் இந்த சீரியல் கொலைகாரன்.

தக்காஹிரோ

முந்தைய அத்தியாயம்

தக்காஹிரோ கொலை செய்ய ஆட்களை ட்விட்டரிலிருந்தே பிடித்திருக்கிறான். சோகத்திலிருக்கும் பெண்களை அவர்கள் போடும் ட்விட்டை வைத்தே அடையாளம் கண்டுகொள்வான். பின், அவர்களிடம் மெசேஜில் பேசத் தொடங்குவான். தற்கொலை செய்ய வேண்டுமென சொல்பவர்களிடம் தான் உதவுவதாகச் சொல்வான். இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்துகொடுப்பான். அதன்பின் அவர்களைக் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்வான். உடலைப் பல துண்டுகளாக வெட்டி வீசிவிடுவான். இப்படி 9 பேரைக் கொன்றிருக்கிறான். அதில் மூன்று பேர் பள்ளி மாணவிகள். 

“அவர்கள் யாருமே சாக விரும்பவில்லை. யாராவது அவர்களிடம் பேச வேண்டும் என்றுதான் நினைத்தார்கள். நான்தான் அவர்களைக் கொன்றேன்” எனப் படு கேஷுவலாக வாக்குமூலம் தந்திருக்கிறான் தக்காஹிரோ.

ஜப்பான் மீடியா ஒன்றில் தக்காஹிரோவின் அடுத்த பலியாக இருந்திருக்க வேண்டிய பெண் ஒருவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.
“அவன் எனக்கு ரெண்டு ஆப்ஷன் தந்தான். குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு என்னைக் கொல்வது. அல்லது, நான் டி.வி பார்த்துக்கொண்டிருக்கும்போது பின்னால் வந்து கயிற்றால் என் கழுத்தை நெரிப்பது”

டமூராவின் அண்ணன் டமூராவின் ட்விட்டர் அக்கவுன்ட்டைப் பார்த்திராவிட்டால் மேலே சொன்னதில் இரண்டில் ஒன்று நடந்திருக்கும். தக்காஹிரோவின் கணக்கு 10 ஆகியிருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்